2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

வித்தியா கொலையாளி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே குறித்த இருவருக்கும் இன்று (30)  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்  மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் குற்றவாளிகள் இருவரும் இணைந்து சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், இருவரும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் செலுத்தவும் அதனைச் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டார்.

யாழ். தீவகம் புங்குடுதீவில் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோமசுந்தரம்  சுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மது அருந்துவதற்காகச் சென்ற நிலையில் பிற்பகல் 1.30 மணிக்கு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. பின்னர் வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு , சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2018ஆம் ஆண்டு டிசெம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X