2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கவும்’

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன்

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

தற்போது தாங்க முடியாதளவு விலைவாசிகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (17) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி ல் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் படும் கஷ்டங்களை அவதானிக்கும் போது, அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் வாழ்க்கைச் செலவுச் சுமையை ஓரளவுக்கேணும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும்.

“சமூகத்தில் கௌரவத்தோடு வாழும் அவர்கள் தங்களது அந்தஸ்தை இழக்கும் நிலையை உருவாக்கி விடாதிருக்க இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

“அதேபோல, ஓய்வூதியத்திலும் கனிசமான அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும். சமுர்த்தி உள்ளிட்ட சகல அரச கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் மக்கள் கடன் இன்றி, உணவு உண்ணும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

“மக்களுக்காகத் தான் அரசு இருக்கின்றது. எனவே, மக்களின் நலன் பேணும் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

“அரசைக் கொண்டு நடத்த நிதி இல்லை என்பதற்காக சகல பொருள்களினதும் விலைவாசியை கண்ணை மூடிக் கொண்டு உயர்த்தி மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. 

“கேஸ் உள்ளிட்ட சில பொருள்களின் விலை 100 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத ஒரு மோசமான விலை அதிகரிப்பு இதுவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .