2022 ஜனவரி 22, சனிக்கிழமை

எயிட்ஸ் - 2015: எச்சரிக்கை எதிர்வு கூறல்கள்

Thipaan   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை கதி கலங்கச் செய்து, இன்றுவரை, இலங்கையிலும் உலகிலும் மருத்துவ துறைக்கு சவாலாகவிருக்கின்ற, முதல்நிலை கொடிய தொற்று நோயே எச்.ஐ.வி எயிட்ஸ் ஆகும்.

எயிட்ஸினால் இறந்தவர்களை நினைவு கூர்தல், எச்.ஐ.வி தொற்றுக்களை தடுத்தல், தொற்றுள்ளவர்களை பரிவோடு பராமரித்தல், தெளிவான பாலியல் கல்வியும், விழிப்புணர்வூட்டலும் என்பவற்றை நோக்காக கொண்டு, 1988முதல், ஒவ்வொரு வருடமும், டிசெம்பர் 1ஆம் திகதி 'உலக எயிட்ஸ் தினம்' அனுஷ்டிக்கப்படுகிறது.

எயிட்ஸ் தினமானது, 1988இல் எயிட்ஸ் பற்றிய 'தொடர்பாடல்' என்ற தொனிப் பொருளோடு தொடங்கப்பட்டு, 2011இலிருந்து இன்றுவரை, எச்.ஐ.வி தொற்றுக்களையும் எயிட்ஸ்  இறப்புக்களையும் 'பூச்சியமாக்குதல்' என்ற இலக்கோடு தொடர்வதோடு, 'சிவப்பு நாடா' விழிப்புணர்வு சின்னமாகவும் அணியப்படுகிறது.

எச்.ஐ.வி - எயிட்ஸ்:  இலங்கையும்,  உலகமும்

1981இல் அமெரிக்காவில், எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான உலகின் முதலாவது நபரையும் 1987இல் வெளிநாட்டுப் பிரஜையொருவரையும் 1989ல்; இலங்கையரும் எச்.ஐ.வி தொற்றியவர்களாக இனம் காணப்பட்டனர்.

164நாடுகளின், உலக எயிட்ஸ் தரவரிசைப் பட்டியலில், இந்தியா, கென்யா மற்றும் அமெரிக்கா ஆகியன முதல் மூன்று இடங்களிலும் இலங்கை 127வது இடத்திலும் இருக்கிறது.

உலகளவில், 39.9மில்லியன் பேரும் இலங்கையில் 15வயதுக்கு  மேற்பட்ட 3200பேரும் 15வயதுக்கு  குறைந்த 100பேரும் எச்.ஐ.வி தொற்றோடு வாழ்வதாக  மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரைக்கும், உலகளவில், 34மில்லியன் பேரும் இலங்கையில் 357பேரும் எயிட்ஸினால் இறந்துள்ளனர்.

தாய்-சேய் எச்.ஐ.வி தொற்று கணிசமாக குறைவடைந்து வருவதோடு, 2015இல் இதனை பூஜ்ஜியமாக்கிய முதலாவது நாடாக கியூபா பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 10ஆண்டுகளில், இலங்கையில் இள வயது (15-24) மற்றும் இரு பாலுறவுடனான ஆண் ஓரினச் சேர்க்கை மூலமான தொற்றுக்கள், சடுதியாக அதிகரித்துள்ளதோடு, எச்.ஐ.வி தொற்றானது 2001ஐ விடவும் 2011இல் 25% ஆல் அதிகரித்துள்ளது.

இலங்கையில், 2014ல் இரு பாலுறவு(76.35%), இருபாலுறவுடனான ஆண் ஓரினச் சேர்க்கை(18.2%), தாய்-சேய் தொற்று(4.4%), ஊசிமூல போதை மருந்தேற்றல்(0.7%) மற்றும் தொற்றிய குருதியேற்றல்;(0.3%) மூலமாக எச்.ஐ.வி தொற்று நிகழ்ந்திருக்கிறது.

இலங்கையில், பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரினச் சேர்கையாளர்கள், கடற்கரை ஆண் சிறார்கள், சிறைக் கைதிகள், போதைப் பொருள் பாவனையாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றவர்கள் எச்.ஐ.வி தொற்றின் பிரதான ஆபத்துக் குழுக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின், தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம், எச்.ஐ.வி உட்பட பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்புமுறை சேவைகளை, நாடளாவிய ரீதியில் 30 பாலியல் தொற்று நோய் சிகிச்சை நிலையங்கள் ஊடாக இலவசமாக வழங்குகிறது.

எயிட்ஸ் நோயானது ஏன் எச்.ஐ.வி எயிட்ஸ் என குறிப்பிடப்படுகிறது?

உடலின் நிர்ப்பீடணத் தொகுதியின் மீதான வைரஸ் தாக்குதலினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து,  பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உட்பட்ட, நிர்ப்பீடணக் குறைபாட்டு நோய் நிலையே எயிட்ஸ் எனவும், இந்நிலைக்கான தொற்றை எற்படுத்துகின்ற வைரஸ் கிருமியே எச்.ஐ.வி.யும் ஆகும்

எச்.ஐ.வி தொற்று எவ்வாறு ஏற்படுகிறது?

பாதுகாப்பற்ற பாலுறவு (யோனி, குத மற்றும் வாய் வழி), தாய்-சேய் தொற்று (கர்ப்பப்பையினுள், பிரசவத்தின் போது மற்றும் தாய்ப்; பாலூட்டும் போது), தொற்று நீக்கப்படாத ஊசி மூல போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தொற்றடைந்த குருதி பாய்ச்சுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் ஏற்படுகிறது. இலங்கையில் கணிசமான எச்.ஐ.வி தொற்றுக்கள், பாதுகாப்பற்ற பாலுறவு மூலமாகவே ஏற்படுகின்றன.

வாய் வழி பாலியல் தொடர்பினால் எச்.ஐ.வி தொற்று ஏற்படுமா?

வைரசானது, இரத்தம் மற்றும் சுக்கிலத்தில் அதிகளவு இருப்பதனால், வாய் வழிமுறையும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

சுக்கில வெளியேற்றம், வாய், உதடு மற்றும் பாலியல் உறுப்பு காயங்கள், இரத்தக்கசிவுள்ள முரசு, தொண்டை தொற்று மற்றும் ஏனைய பாலியல் நோய்த் தொற்றுக்கள் எச்.ஐ.வி தொற்று அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.

எச்.ஐ.வி தொற்று அறிகுறிகள்?

தொற்றுக்கு உட்பட்டுள்ள கால அளவில் அறிகுறிகளின் வெளிப்பாடு தங்கியிருக்கும். ஆரம்பத்தில், அறிகுறிகளற்றதாக அல்லது பொதுத் தொற்று அறிகுறிகளான, காய்ச்சல், தலையிடி தொண்டைவலி என்பனவிருக்கும்.

நாளடைவில், படிப்படியாக நோய் எதிர்ப்பு சக்தி குறைகையில், நிணநீர்கணு வீக்கம், உடல் மெலிதல், காய்ச்சல், வயிற்றோட்டம் மற்றும் இருமல் போன்றனவும் சிகிச்சை பெற தவறுகையில், காசநோய், மூளைக்காய்ச்சல் மற்றும் நிணநீர் சுரப்பி புற்றுநோய் போன்றவற்றுக்கும்  வழி கோலும்.

இருந்த போதிலும் ஆரம்ப காலங்களில், அறிகுறிகளினால் மட்டும்; சாதாரண தொற்றுக்களையும் எச்.ஐ.வி தொற்றையும் பிரித்தறிவது சிரமமாகும்.

எச்.ஐ.வி தொற்றானது எவ்வாறு எயிட்ஸ் நோயாக விருத்தியடைகிறது?

எச்.ஐ.வி வைரசானது, படிப்படியாக உடலின்; நோய் எதிர்ப்பு சக்தியைக்; குறைத்து, பல்வகை இதர தொற்றுக்களுக்கு இலகுவாக வழி கோலுகிறது.

நிர்ப்பீடணத் தொகுதியின் வினைத்திறனை நன்றாக குறைவடையச் செய்து, எயிட்ஸ் என்ற நிலைக்கு உந்துகிறது.

மேலும், மருத்துவ சிகிச்சைகளை பெறத் தவறுகின்ற எச்.ஐ.வி தொற்றுடையவர்களில் அரைவாசிப் பேர், 5 தொடக்கம் 10 வருடங்களுக்குள் எயிட்ஸ் நோயாளிகளாக மாறுகின்றனர்.

அத்தோடு இக்கால இடைவெளியானது, ஒவ்வொரு தொற்றுடையவர்களிலும் அவர்களுடைய தனிமனித சுகாதார நிலை மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்து வெகுவாக வேறுபடுவதோடு, நவீன மருத்துவ வசதிகளின் மூலம், எச்.ஐ.வி தொற்றிலிருந்து, எயிட்ஸ் நோயாளியாக மாறுவதை கணிசமாக தடுக்கவும் முடியும்.

எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவம்?

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பவர்கள், தாமதிக்காமல் அரசாங்க வைத்தியசாலையில் இருக்கின்ற பாலியல் தொற்று நோய் சிகிச்சை நிலையங்களில் அல்லது வைத்தியரின் ஆலோசனையுடன் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களிலும் குருதி மற்றும் ஏனைய மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும்.

குருதிப் பரிசோதனை மூலமே தொற்றிய நிலையை 'எச்.ஐ.வி உள்ளமை'எனவும், தொற்றற்ற நிலையினை 'எச்.ஐ.வி அற்ற நிலை' எனவும் அடையாளப்படுத்த முடியும்.

தொற்றை துரிதமாக கண்டறிதலும் எச்.ஐ.வி தொற்றுள்ளவரை, எயிட்ஸ் நோயிலிருந்து மீட்பதற்கான சிகிச்சைகளை வழங்குதலும், இவர்களினால் ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுப்பதற்குமான பரிந்துரைகளையும் வழங்குகிறது.

அண்மையில் எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட ஒருவருக்கு பரிசோதனை முடிவுகள் 'தொற்றில்லை' என பிழையாக இருக்குமா?

தொற்று ஏற்பட்டதன் பின்னர் வைரசுக்களை அழிப்பதற்கான புரதங்கள்ஃபிறபொருள் எதிரிகள் உடலினால் உருவாக்கப்படும்.

எச்.ஐ.வி பரிசோதனைகளின் முடிவுநிலை இப்புரதங்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. பிறபொருள் எதிரிகள் உடம்பில் உருவாவதற்கு 2 கிழமைகள் தொடக்கம் 3 மாதம் வரை தேவைப்படலாம், இக்கால இடைவெளி யன்னல் காலம் எனவும் குறிப்பிடப்படும்.

இக்காலப்பகுதியில், தொற்றுக்கான ஆதாரம் பரிசோதனையில் தென்படாவிட்டாலும் தொற்றுள்ள ஒருவர் ஏனையவர்களுக்கு தொற்றினைக் கடத்த முடியும். ஆகவே தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவர் மீண்டும் 6 மாதங்களுக்கு பின்னர் பரிசோதிக்கப்பட வேண்டும்.

எச்.ஐ.வி தொற்றை முற்றாக குணப்படுத்த முடியுமா?

இல்லை. ஆர்ட் எனப்படும் ஒருங்கிணைந்த பிரத்தியேக வைரசு மருந்துகள் பரந்தளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எவ்வாறெனினும், இம்மருந்துகள் வைரசை முற்றாக அழித்தொழிக்கும் வல்லமையற்றவை. அத்தோடு, குருதியில் கண்டறிய முடியாத அளவுக்கு வைரசுக்களின்; பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றன, இதனால் தொற்றுள்ள ஒருவர், நீண்டகால சிக்கல்களிலிருந்து தப்பிப் பிழைப்பதோடு, அவரினால் ஏனையவர்களுக்கு ஏற்படவிருக்கின்ற தொற்று அபாயத்தையும் பெருமளவில் குறைக்கலாம்.

அவ்வாறாயின் எச்.ஐ.வி தொற்றிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

மேற்குறிப்பிடப்பட்ட தனித்துவ வைரசு எதிர்ப்பு மருந்து மாத்திரைகளை நேர மற்றும் அளவுக் கிரமமாக உட்கொள்வதோடு, உளவள ஆலோசனைகள், பிரத்தியேக போசனை மற்றும் சுத்தமானதும் பாதுகாப்பானதுமான நீர் பயன்பாடு போன்ற அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், இருக்கின்ற தொற்றுக்களின் வீரியத்தை குறைத்து, இதர தொற்றுக்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

யுசுவு சிகிச்சையானது,  நிர்ப்பீடணத் தொகுதி மீதான வைரஸ் தாக்கத்தை குறைப்பதோடு, எச்.ஐ.வி  தொற்றில்லாத பாலுறவாளியில் 96மூ தொற்றுச் சந்தர்ப்பத்தை குறைக்கிறது

எச்.ஐ.வி தொற்று பற்றிய தவறான எண்ணங்கள்?

எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களை பாலியல் ரீதியாகவன்றி ஏனைய முறைகளில் அணுகுதல், தொற்றுள்ளவர்கள் பயன்படுத்தகின்ற உணவுகள் மற்றும் பாத்திரங்கள், குளியலறைகள், ஆடைகள் மற்றும் வாகனங்கள். தொற்றுள்ளவர்களுடனான இரத்தக் கலப்பற்ற முத்தமிடல்கள் மற்றும் தழுவல்கள்.நுளம்புகள், பூச்சிகள், விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளின் கடி மற்றும் தொடுகை போன்ற எவ்வித நடவடிக்கைகளும் எச்.ஐ.வி தொற்றை ஏற்படுத்த முடியாதவை.

எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களை அணுகும் முறைகள்?

எச்.ஐ.வி தொற்று நோயாளிகளின் மீதான களங்க மற்றும் பாகுபடுத்தல் பார்வையை சமூகம் முதலில் விலக்கிக் கொள்ள வேண்டும்.

அவர்களும் மனித சமூகத்தின் உறுப்பினர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அவர்களுள்; தெரிந்து செய்த தவறுகளால் தொற்றுக்குள்ளானவர்களும் எதுவும் தெரியாமல் தொற்றிக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களை அன்போடு அணுகி அறிவுரைகள் வழங்குவதன் மூலமே அவர்களுடைய மீதி வாழ்க்கையை அவர்களால் உடல் உள நலத்தோடு முன்னகர்த்த முடியும்.

எச்.ஐ.வி தொற்றுள்ளவர் பார்ப்பதற்கு ஆரோக்கியமானவராக தென்படுவாரா?

நிச்சயமாக,  தொற்றின் பின்னரான ஆரம்ப நிலைகளில், உடம்புக்குள் வைரஸ் பெருக்கம் அதிகமாகவிருந்தாலும் அறிகுறி வெளிப்படுத்தல் மிகமிக குறைவாகவே இருக்கும், இதனால் வெளிப்பார்வையில் அவர்களை எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் என இனம் காண்பது அல்லது சந்தேகிப்பது கடினம்.

இந்த வேளையில் இவர்களால் ஏனையவர்களுக்கும் இலகுவாக தொற்றை ஏற்படுத்த முடியும். அனேகமானோர் இப்பரிதாப நிலை மூலமே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர் 

எச்.ஐ.வி தொற்றுக்கும் ஏனைய பாலியல் நோய்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

இரண்டுமே ஒன்றிலொன்று தாக்கம் செலுத்துபவை. எச்.ஐ.வியோடு சேர்ந்த ஏனைய பாலியல் தொற்று நிலை, பிறருக்கான எச்.ஐ.வி தொற்று வீதத்தை அதிகரிக்கும்.

எச்.ஐ.வி தொற்றற்ற ஏனைய பாலியல் நோயுடையவர்கள் அந்நோய்த் தாக்கங்களினால் பாலுறுப்புக்களில் காயங்களைக் கொண்டிருக்கும் போது, பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகள், எச்.ஐ.வி தொற்றுக்களுக்கான சந்தர்ப்பத்தை வெகுவாகவே அதிகரிக்கும்.

எச்.ஐ.வி தொற்றிலிருந்து முற்று முழுதாக தப்புவதற்கான உபாயங்கள்?

நம்பிக்கையுள்ள ஒரு பாலியல் துணையோடு மாத்திரம் பாலியல் உறவுகளை பேணுவதோடு, பாதுகாப்பற்ற பாலுறவு நிலைமைகளில், ஆண் மற்றும் பெண் உறைகளை (Condoms) உபயோகித்தல் மற்றும் தெளிவான, முறையான பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றினால்; மட்டுமே தொற்றுக்களை முற்றாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X