2025 ஜூலை 19, சனிக்கிழமை

மாணவர்களுக்கும் தடுப்பூசி குறித்து அரசாங்கம் ஆலோசனை

Freelancer   / 2021 ஜூன் 12 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய   பிரதமர், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட குழந்தை மருத்துவர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என  பிரதமர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

“பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின் அதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்து ஒன்பது ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் சுமார் மூன்று இலட்சம் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என   பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில்  பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த  பிரதமர். பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பு தொடர்பில் குழந்தை மருத்துவர்களின் சங்கம் நன்றிகளை தெரிவித்தது.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X