2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

'நீக்குவதற்குக் காரணம் இல்லை’

Editorial   / 2019 நவம்பர் 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தன்னை நீக்குவதற்கு, எந்தவொரு காரணமும் இல்லையெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது செயற்பாடுகளால் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, நேற்று (04) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாக தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அனால், மத்தியச் செயற்குழு கூடி, இத்தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் சு.கவின் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு, அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரானத் தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் 2019 மே, ஜூன் மாதங்களில், தான் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த சமயம் பார்த்து, ஒரேயொரு மத்தியச் செயற்குழுக் கூட்டத்துக்கு மாத்திரம் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்றும் அவர் ​கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் யாப்பு, சம்பிரதாயங்களை மீறி தன்னிச்சையாக கோட்டாவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இத்தீர்மானம் கட்சியின் இறுதிப் பயணத்துக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கியத் தேசியக் கட்சியின் மாநாட்டில், தன்னுடன் ஜனாதிபதியும் கலந்துகொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருடன் உடன்படிக்கைச் செய்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, தனக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று, அதில் கலந்துகொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மாகாணசபை பிரதேசசபை உறுப்பினர்கள், கோட்டாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, தன்னிடம் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் மாற்றுவழியை ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .