2022 ஜூலை 07, வியாழக்கிழமை

’பூச்சியமான ரணிலுக்கு சஜித் தரப்பு ஆதரவில்லை’

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களால் நிராகரிக்கப்பட்ட  நபர்களை கொண்டே அரசாங்கத்தை  முன்னெடுக்க முடியுமே தவிர பலமான அமைச்சரவையை உருவாக்க முடியாது.பாராளுமன்றத்தில்  எமக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. முடிந்தால்  பாராளுமன்றத்தில்  113 பெரும்பான்மையை  நிரூபித்துக்காட்டுங்கள் என ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

அரசியல் அமைப்பிற்கு அமையவே தான் செயற்படுவேன் என ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்படாத  ஒருவரை பிரதமராக்கி அரசியல் அமைப்பிற்கு முரணாகவே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க என்பவர் வெறும் பூச்சியம், அவருக்கு மக்கள் ஆணை ஒருபோதும் கிடைக்கவில்லை. 

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தால் தான் பதவி விலகவேண்டிவரும், ஆகவே ரணிலை பிரதமராக்கினால் மட்டுமே என்னால் தொடர்ந்தும் இந்த நாட்டில்  ஜனாதிபதியாக இருந்துகொண்டு நாட்டை நாசமாக்க முடியும் என்ற நோக்கத்திலேயே அவர் சஜித்தின் கோரிக்கையை நிராகரித்தார். ரணிலை பிரதமராக்கி ராஜபக்‌ஷ குடும்பத்தை பாதுகாக்கவே கோட்டாபய ராஜபக்‌ஷ நினைக்கின்றார். 

ஊழல் வாதிகளுக்கு பாதுகாவலனாக ரணில் மாறியுள்ளார்.  
இவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க நாம் ஒருவரும் தயாரில்லை. எமது 68 உறுப்பினர்களும் மற்றும் சுயாதீனமான 40 உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். அதேபோல்  அரசாங்கத்தில் 10 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றார்.

ஆகவே, எமக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவினால் 113 பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமானால் நிரூபித்துக்காட்டுங்கள் என சவால் விடுகின்றோம். சிறுபான்மை அரசாங்கத்தை வைத்துக்கொண்டு நகர முடியாது. மக்களால் நிராகரிக்கப்பட்ட  நபர்களை கொண்டே அரசாங்கத்தை கொண்டுநடத்த முடியுமே தவிர பலமான அமைச்சரவையை உருவாக்க முடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .