2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

’இந்தியாவை சீண்டுகிறது தமிழரசு கட்சி’

Nirosh   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்த முகத்தோடு இந்தியா இலங்கைத் தமிழருக்கு உதவ வேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி எனவும் தெரிவித்துள்ள அவர், தமிழக மீனவர்கள் வடகடலில் எல்லைக் கோட்டைத் தாண்டி வருகிறார்கள். உலகில் இல்லாத வியப்பு நிகழ்வா? இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது வழமை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில் (Wadge bank) இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.

திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள், மீன் பிடி வள்ள (multi day fishing vessels) மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை.

தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்றுவருவது வழமை. எப்போதோ ஒருமுறை இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தளையிட்டு மதுரையில் நீதிமன்றம் முன்பு நிறுத்தம். 

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர் தமிழக மீனவரே. 

நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015இல் முன்மொழிந்திருந்தார். அந்த சட்ட மூல வரிகளைப் படித்ததும் நான் அதிர்ந்தேன. 
இதுத் தொடர்பில்  சித்தார்த்தனிடம் சொன்னேன். சுமந்திரனைக் கட்டுப்படுத்த முடியாதே எனச் சித்தார்த்தன் என்னிடம் சொன்னார்.

அதே சட்டமூலத்தைப் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார். அச்சட்டத்தையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைவிட்டுள்ளார் எனச் சுமந்திரன் முறையிடுகிறார்.

எந்த மீனவர் எம்மைக் காத்தார்களோ, எந்த நாடு எம்மவர் மூன்று இலட்சம் பேருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதோ, அந்த மீனவருக்கு அந்த நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தமிழரசுக் கட்சி! 

எந்த முகத்தோடு இந்தியா இலங்கைத் தமிழருக்கு உதவ வேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள்? இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி." எனவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .