2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

‘சர்வதேசம் தலையிட மஹிந்த அரசாங்கமே காரணம்’

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில், யுத்தத்தின் இறுதிப் பகுதியில், மூதூரில் 11 பேரும், திருகோணமலையில் 11 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த விடயத்தில் மஹிந்த அரசாங்கம் மௌனத்தைக் கடைப்பிடித்தது. இவ்வாறான விடயங்களாலேயே, சர்வதேசம் இன்று எம்மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதென, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற, அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.

இதன்​போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், யுத்தம் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்கு வருகைத்தந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒன்றிணைந்த அறிவிப்பொன்றில் கையெழுத்திட்ட பின்னரே, சர்வதேசம் எமது நாட்டு விடயத்தில் தலையிடத் தொடங்கியது. அத்துடன், இந்த ஒன்றிணைந்த அறிவிப்பில், 3 விடயங்கள் குறித்து இணக்கம் தெரிவிக்கப்பட்டது.  
அதாவது, முகாமில் வசிப்பவர்களை மீள் குடியமர்த்தவும், மனித உரிமை மீறப்பட்டுள்ளமை குறித்து ஆராயவும், யுத்தத்துக்கு அடிப்படை காரணத்துக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் அந்த அறிவிப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது.   

இந்த அறிவிப்பின் பின்னர், 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்ல மாட்டோமென, மஹிந்த அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கியதுடன், மனித உரிமைகள் பேரவையில் யோசனை ஒன்றையும் முன்வைத்தது. 2009 மே மாதம் இந்தியாவுடன் இணைந்தே இந்த யோசனைக் கொண்டு வரப்பட்டதுடன், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது.  

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையானது, ஒவ்வொரு ஆட்சிக் காலத்தின் போதும், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்ததாக தெரிவித்த அவர், மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது குற்றச்சாட்டு முன்வைப்பது ஒன்றும் புதிதல்ல என்றார்.  

பிரேமாவதி மனம்பெரி கொலை வழக்கில் மனித உரிமைக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதன்போது அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தால் இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டது.   

அதேப்போல், பிரேமதாசவின் காலத்தில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சிவில் பிரதிநிதிகள் கொல்லப்பட்ட சம்பவம், சந்திரிக்காவின் காலத்தில் கிறிசாந்தி குமாரசுவாமி வன்புணர்வு செய்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, இதனுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

ஆனால், மஹிந்தவின் காலத்தில், யுத்தத்தின் இறுதிப் பகுதியில் மூதூர் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பில், மஹிந்த அரசாங்கம் மௌனத்தைக் கடைப்பிடித்தது. இது தொடர்பில், எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. இவ்வாறான விடயங்களாலேயே, சர்வதேசம் இன்று மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.  

மஹிந்தவின் காலத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தோல்வியடைந்ததுடன், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கும் நிலை ஏற்படவிருந்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .