2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

’அனைவரும் மோசடியாளரே’

Niroshini   / 2018 மார்ச் 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், வரி மோசடியில் தொடர்புபட்டுள்ளனர் எனத் தெரிவித்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கசப்பான உண்மைகளைக் கூறி, சிறைக்குச் செல்லவும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற, நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்த) சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "ஊழல் - மோசடிப் பட்டியலில், இலங்கை 4ஆவது இடத்திலுள்ளது. இதனுடன் தொடர்புடையவர்கள், பாதாள உலகக் கோஷ்டியினர், போதைப்பொருள் வர்த்தகர்கள் என, தமது கடமைகளை அவர்கள் சரியாகவே செய்து வருகின்றனர். எல்லாம் தெரியவந்தும், ஆதாரங்கள் இருந்தும், இவர்களைக் கைதுசெய்ய முடியாமல் உள்ளது. குற்றவாளிகள் தமது கடமைகளைச் சரியாக செய்கின்றார்கள். ஆனால், எங்களால் ஏன் அவர்களை கைதுசெய்ய முடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"அவ்வாறு ஒருசில குற்றவாளிகளை நாம் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும், அவர்கள் மறுபுறத்தில் வெளியே வந்துவிடுகின்றார்கள். இவர்கள் இவ்வாறு வௌியே கொண்டுவருபவர்கள் நீதிமன்றம், சட்டத்தரணிகள், பிக்குகள், மதத்தலைவர்களே ஆவர். இந்தக் கசப்பான உண்மையைக் கூறிய என்னை, நீதிமன்றத்துக்கு அழைத்தாலும் பரவாயில்லை" என்று குறிப்பிட்டார்.

எத்தனை சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், தவறு செய்யும் அவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், மாறாக, நீதித்துறைக் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்சியிலும் 75 சதவீதமானவர்கள் திருடர்களே என்று குறிப்பிட்ட அவர், பிரதான கட்சிகள் இரண்டிலும் திருடர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். ஜே.வி.பி மீதும் விமர்சனங்களை முன்வைத்த அவர், முன்னைய காலங்களில் வங்கி உடைத்தவர்களாகவும் தேசிய அட்டைகளைத் திருடியவர்களாகவும் அவர்கள் காணப்பட்டனர் என்றால்.

தொடர்ந்தும் தனது விமர்சனத்தை முன்வைத்த அவர், "ஒருவகையில் மக்களும் திருடர்கள் தான். இங்கு அனைவரும் திருடர்களே" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .