2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

இராணுவ சூட்டுப்பகுதி விவகாரம்: கள விஜயம்

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 12 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி. யுதாஜித்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவப் பயிற்சிகள் நடைபெறவுள்ள பண்ணை விலங்குகளின் மேய்ச்சல் தரைப் பிரதேசத்தினை சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகள், இராணுவத்தினர், பண்ணையாளர்கள் இணைந்து நேரடியாகப் பார்வையிடுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என  திங்கட்கிழமை (12) முடிவு செய்யப்பட்டது. 
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கார்மலை, வெள்ளைக்கல், புலியடிபொத்தானை, கிடாரம்போட்டமடு, மேசைக்கல் போன்ற பிரதேசங்களில் இருந்து பண்ணையாளர்களை வெளியேறும்படி இராணுவத்தினர் தெரிவித்தமை  தொடர்பில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு முடிவு எட்டப்பட்டுள்ளது.
 
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா), ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சி.சர்வானந்தன், அரசாங்க அதிபர் கே.கருணாகரன், ஏறாவூர் பற்று பிரதேசசெயலாளர் எஸ்.ராஜ்பாபு, 23 படைப்பிரிவின் லெப்ரினட் கேர்ணல் உபுல் ரத்நாயக்க, திணைக்களத் தலைவர்களும், பண்ணையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
கடந்த வாரத்தில் குறித்த பிரதேசங்களில் இராணுவத்தினரால் இராணுவச் சூட்டுப் பிரதேசம் என்ற பதாதைகள் பொருத்தப்பட்டதுடன், பண்ணையாளர்களிடம் அவ் பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அது தொடர்பில் பண்ணையாளர்களால் எடுக்கப்பட்ட செயற்பாடுகளினால், இராணுவத்தரப்பு, அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. 
 
இச் சந்திப்பில், இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது, இராணுவப் பயிற்சி ஒன்றுக்காக இம் மாதம் 17ஆம் திகதிகளில் இப்பிரதேசத்திலிருந்து பண்ணையாளர்கள் விலகியிருக்க வேண்டும். எதிர்வரும் இரண்டு மாதங்களிலும் இது போன்று இரண்டு நாள்களைக் கொண்ட பயிற்சிகள் நடைபெறவுள்ளன. அவ்வேளைகளில் இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் லெப்ரினட் கேர்ணல் உபுல் ரத்நாயக்க தெரிவித்தார். 
 
இருப்பினும் செவ்வாய்க்கிழமை (13) காலை திணைக்களங்களின் பிரதிநிதிகள், இராணுவத்தினர், பண்ணையாளர்கள் இணைந்து நேரடியாகப் பார்வையிடுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். ஏற்பட்ட சிக்கல் நிலமையைச் சீர் செய்யமுடியும் என்றும் முடிவு காணப்பட்டுள்ளது. 
 
இராணுவத்தினர் இவ்வாறு நீண்டகாலமாகப் பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபடும் பண்ணையாளர்களைக் கட்டாயத்தில் வெளியேற்ற முயன்றமையால் தாங்கள் சிரமப்பட்டதாகவும் ஒரு சில நாள்கள் மாத்திரம் என்றால் அது குறித்து ஆட்சேபணையில்லை என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 
 
இருப்பினும் செவ்வாய்க்கிழமை கள விஜயம் ஒன்றின் மூலம் நிலைமைகளை அவதானித்து அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்வது என நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு காணப்பட்டது.           

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .