2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கொழும்பு மாணவர்கள் கடுமையான அக்கறை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் கொழும்பு மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களின் கீழ்
ஆரம்பிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான பைஃசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்த, சுகாதார அமைச்சின்
பாடசாலைகள் சுகாதார அலுவலகத்தின் பொறுப்பதிகாரி விசேட வைத்தியர் டி.எம். ஜயலத் ,
இதுவரை கொழும்பில் 8 பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறைவு
செய்யப்பட்டுள்ளது என்றார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கடந்தாண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் குறைந்த எண்ணிக்கையினரே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகின்றனர்.

இதற்கான காரணம் அவர்கள் வேறு எங்காவது தடுப்பூசி செலுத்தியிருக்கலாம் அல்லது அவர்கள் வெளிநாடுகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்றார்.
அத்துடன், இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்ட எந்த மாணவருக்கும் இதுவரை பாரதூரமான எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர், இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 80- 90 சதவீத மாணவர்களுக்கு பைஃசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ரோயல் கல்லூரியில் இன்றும் (21) நாளைளும், மஹாநாம கல்லூரியில் நாளையும் (22)
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். பாடசாலைகளை விரைவாகத் திறக்கவும் பரீட்சகளை நடத்தும் நோக்கிலேயே மாணவர்களுக்கு
தடுப்பூசி செலுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி இது
தொடர்பில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் உரிய தரப்பினரிடம் நிவர்த்தி செய்துக்கொண்டு, தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .