2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கை - மொட்டு குழப்பம் வெகுதூரம் நீடிக்கும்

Freelancer   / 2021 நவம்பர் 28 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதே தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசன அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதுடன், கடந்த வாரம் முழுவதும் கட்சியின் தலைமையகத்தில் நேர்காணல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் தமது கட்சியை புறக்கணிப்பதாக அக்கட்சியில் உள்ள பலர் நீண்டகாலமாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில், தங்களுக்கு விருப்பமான தீர்மானத்தை எடுக்குமாறு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர அண்மையில் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சேறு பூசும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொதுஜன பெரமுனவின் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலானது, இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் முரண்பாட்டின் உச்சக்கட்டமே என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .