2023 ஜூன் 07, புதன்கிழமை

முகவரி தேடி...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எழுமின், விழுமுன் கருதிய கருமம் கைகூடும் வரை
உழைமின்'

இதை இலட்சியமாகவும் குறிக்கோளாகவும் கொண்டவர்கள், கண்டிப்பாக உழைப்பினால் உயர்வையடைவார்கள். 

நம் நாட்டு பொருளாதாரத்தை உயர்த்தும், உழைக்கும் வர்க்கத்தினரில் மலையக பெருந்தோட்டத் தொழிலாழிகளின் வகிபாகம் மிகையானது. 

காலையில் சூரியன் எழுவதற்கு முன்னர் எழுந்து, மாலையில் சூரியன் மறைவதற்கு முன், அவர்களின் வேலைகள் செவ்வனே முடிவதற்காக மிகக் கடினமாக இவர்கள் உழைக்கின்றனர். 

அந்தவகையில் ஒரு பெருந்தோட்டத் தொழிலாழியாக இருந்துகொண்டு தன் மக்களிடையே மிளிரும் நடனக் கலைஞனே ஆர்.தயாபரன். கிட்டத்தட்ட 300 மாணவர்களின் நடன ஆற்றலுக்கு வித்திடும் பொகவந்தலாவயில் பொது மண்டபங்களிலும் பொது இடங்களிலும் நடத்தப்படும் ராகவா நடனப்பள்ளியின் ஆசிரியர். 

கடந்த ஜீலை மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கொட்டியாகலை மத்தியபிரிவு ஹெடன் விழா மண்டபத்தில் தொடர்ந்து 56 மணித்தியாலங்கள் நடனம் ஆடி பார்வையாளர்களை வியக்க வைத்தார். நடனத்தினால் ஒரு கின்னஸ் சாதனையை ஏற்படுத்தி, தன் மூலம் தன் மக்களை உலகறியச் செய்ய வேண்டும் என்ற 24 வயதுடைய ஓர் இளைஞனின் ஒத்திகை. 

பாட்டி, அம்மா, உடன் பிறப்பான தம்பி என 04 பேரைக் கொண்ட சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதிக்கத் துடிக்கும் இக்கலைஞனுடன் அண்மையில் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. 

தென்னிந்தியத் திரைப்படங்கள் நம்மவர் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. இத்திரைப்படங்களில் இடம்பெற்ற நடனங்கள் ஏழு வயதிலிருந்து தன் நடனத்துக்கு கருவானதுடன், அறிந்த நாளிலிருந்து நடிகர் ராகவாலாரன்ஸ் குருவாகவும் ஆனார் என்றார். 

கொட்டியாகலை கீழ்பிரிவு ஸ்பாக்ஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு, 07ஆம் மாதம், 28ஆம் திகதி,  தொடர்ந்து 12 மணித்தியாலங்கள் நடனம் ஆடி, தன் மக்கள் மத்தியில் சாதனையொன்றை நிகழ்த்தினார். இதுவே தன் குருவை சந்திப்பதற்கான வழியை ஏற்படுத்தியதாகக் கூறினார். 

இவரது திறமையைப் பார்த்து இவரது தோட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்கி இந்தியா செல்ல உதவிக்கரம் நீட்டியுள்ளனர். 

இவ்வாறு கடந்த வருடம் இந்தியா சென்;ற ஆர்.தயாபரன், அங்கே அவரது மானசீக குருவும் சினிமா நடிகரும் இயக்குநருமான ராகவாலாரன்ஸ்ஸை சந்தித்து, அவரிடம் சில நடன நுணுக்கங்களையும் கற்று பதக்கங்களையும் வாங்கியுள்ளார். இதனால் சினிமா வாய்ப்புக் கிட்டியுள்ளது. எனினும், இக்கலைஞனின் இலட்சியம் சினிமாவாக இருக்கவில்லை. 

தனது தாய் நாட்டிற்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமையைத் தேடுவதற்காக நடனத்தில் கின்னஸ் சாதனையை ஏற்படுத்துவதே தனது இலட்சியம் எனக் கூறி குருவிடமிருந்து விடைபெற்றேன் என்றார். தனது ஆருயிர் நண்பன் மொஹமட் தஸ்லிமின் யோசனை இதற்கு அடித்தளமாக அமைந்தது. 

இந்நிலையில் நாடு திரும்பி தனது ராகவா நடனப்பள்ளியை ஏற்படுத்தி, அம்மாணவர்களைக் கொண்டு நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் கடந்த 06ஆம் மாதம், 06ஆம் திகதி, தொடர்ந்து 10 மணித்தியாலங்கள் நடனமாடி புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தார். இதன் தொடர்ச்சியாகவே, தொடர்ந்து 56 மணித்தியாலங்கள் நடனம் ஆடி, கின்னஸ் சாதனைக்கான கன்னி ஒத்தியையும் பார்த்துள்ளார். 

நம் நாட்டைப் பெறுத்தவரையில் கின்னஸ் சாதனையை ஏற்படுத்த வேண்டுமாயின் முழு உடல் ஆராக்கியத் தகுதி, நடுவர்களுக்கான கட்டணம், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒழுங்கமைப்புக்கள் என குறைந்தது 3 இலட்சமாவது தேவை. 

எனினும், மின்சார வசதிகூட இல்லாத சாதாரண மண் வீட்டில் வசித்து, தோட்டத்தில் பெயர் பதிந்து வேலை செய்பவர்களுக்கு அத்தொகை கைக்கு எட்டாதவொன்று. இதனால் பல்வேறு அரசியல் பிரமுகர்களை நாடியுள்ளார். தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் காணாமல் போயுள்ளனர். 

இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டு, கலமண்டலம் ஹேமலெதா என்பவரால் 123 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் தொடர்ச்சியாக ஆடப்பட்ட மோகினியாட்டமே தனியொரு நபருக்கான நீண்ட நேர நடனமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

சாதனைக்கு, ஏழ்மை ஒரு தடையல்ல என இக்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்பும் ஓர் இளம் நடனக் கலைஞராக தனக்கான தனி முகவரியைத் தேடுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .