2022 நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

‘ஐ.தே.கவையும் ஐ.ம.சு.கூவையும் கணவன் - மனைவியாக கருத முடியாது’

Niroshini   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தம், திருமணம் ஒப்பந்தம் கிடையாது. இதில் ஐ.தே.கவை, கணவனாகவும் ஐ.ம.சு.கூவை மனைவியாகவும் கருத முடியாது” எனத் தெரிவித்த ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, “தேசிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப முடிந்தால் மாத்திரமே,  அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்” என்றார்.

தேசிய அரசாங்கம் தொடர்பிலான நிலைப்பாடடை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.ம.சு.கூவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவும், நாடாளுமன்றத்தில் நேற்று (21) அறிவித்ததன் பின்னர், கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்,

“ஐ.ம.சு.கூவும் ஐ.தே.கவும் தொடர்ச்சியாக ஒன்றிணைந்தே செல்கின்றன என்றே கூறப்படுகின்றன. 2 ஆண்டுகளுக்கு மாத்திரமே தேசிய அரசாங்கம் கொண்டு செல்லப்படும் என நீங்கள் (சபாநாயகர்) கூறினீர்கள்” என்று சுட்டிக்காட்டிய, அநுரகுமார திஸாநாயக்க எம்.பி,  “செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியுடன் இந்த ஒப்பந்தம் இரத்தாகிவிட்டது. நல்லாட்சி அரசாங்கத்தை நீடிப்பதாயின், புதிய ஒப்பந்தமொன்றை செய்திருக்கவேண்டும். எனினும், 4 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த 4 மாதங்களும் ஒன்றாக இருந்தீர்கள்.  ஆனால், 48 அமைச்சர்களும் இந்த நான்கு மாதங்களில், சட்டத்துக்கு புறம்பான வகையில் பதவி வகிக்கின்றனர்” என்றார்.

“இது, அரசமைப்புக்கு முரணானது. நீங்கள் புதிய ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். அமைச்சர்களின் எண்ணிக்கையை 30இல் இருந்து 35 வரையும் பிரதியமைச்சர்களை 45 வரையும் அதிகரித்திருக்க வேண்டும்.

“அரசமைப்புப் பிரகாரம் அமைச்சர்களை 40இல் இருந்து 48ஆகவும் பிரதியமைச்சர்களை 40-45ஆகவும் உயர்த்தும் யோசனையை வெறுமனே கொண்டு வரமுடியாது. அந்த யோசனையை கொண்டு வருவதற்கு முன்னர் ஓர் உடன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அந்த வகையில், தேசிய அரசாங்கத்துக்குள் உடன்பாடு இல்லாமல், இந்தப் பிரேரணையை கொண்டு வர முடியாது. தேசிய அரசாங்கத்தின் கால எல்லை மீறிச் செல்லும் போது,  இந்தப் பிரேரணையின் காலமும் மீறிச் செல்லும்” என்றார்.

“ஜனவரி 1ஆம் திகதி,  இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே, தேசிய அரசாங்கம் இருக்கும் எனவும்  தேசிய தேவைகைளை நிறைவேற்றவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

“அதேபோல், பிரதமரும் 2 வருடங்களுக்கு வரையறுக்கப்பட்ட விதத்தில் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.

“அதேபோல விஷ்வவர்ணபால குழுவினரும் 2 வருங்களுக்கு மாத்திரமே தேசிய அரசாங்கம் கொண்டுசெல்லப்படுமெனத் தெரிவித்தனர். இந்த 3 காரணங்களைக் கொண்டே, இந்த தேசிய அரசாங்கம் கட்டியெழுப்பப்பட்டது. இவ்வாறான கூற்றை முன்வைத்தப்பின்னர், தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து, ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த முடியுமா?” என வினவினார்.

எனவே, அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதேபோல், ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை தொடர்பான அறிக்கையையும் சபாநாயகருக்கு கையளிக்க வேண்டுமெனக் கேட்டார்.


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X