2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

எமக்காக நாமே சுவாசிக்க வேண்டும் : மட்டுவில் ஞானகுமாரன்

Kogilavani   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'எமக்காக நாமே சுவாசிக்க வேண்டும். எமக்காக மற்றொருவர் சுவாசிக்க மாட்டார். இலங்கை தமிழர்களுக்கான இலக்கியத்தை வேற்று நாட்டவர்கள் வளர்த்துவிட்டு போக மாட்டார்கள். எமக்கிருக்கும் ஒரு சிறிய வட்டத்தில் நாங்கள் இலக்கியம் படைத்துக் கொண்டு செல்கின்றோம். எங்களுக்கு தேவைப்படுவது பாரிகள். முல்லைச் செடிக்கு எவ்வாறு பாரி தேரை விட்டுவிட்டுச் சென்றாரோ அதைப்போல வள்ளல்களே எமக்கும் தேவைப்படுகின்றார்கள்'' என்று கூறுகிறார் கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்.

யாழ். மட்டுவிலை பிறப்பிடமாகக் கொண்ட 'மட்டுவில் ஞானக்குமாரன்' கவிதை, சிறுகதை, மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், குறுந்திரைப்பட இயக்குநர் என பல துறைகளில் தனது திறமையை பறைசாற்றி வருகிறார்.

மிக இளம் வயதிலேயே ஜேர்மனியில் வசிக்க ஆரம்பித்த இவர், தனது எழுத்துத் திறமையை கண்டறிந்ததும் அங்குதான். தனது மனக் கொந்தளிப்புகளை சொல்வதற்கு நான்கு பேரை தேடியபோது அந்த நான்கு பேரும் ஜேர்மனியர்களாக இருக்கவே ஒற்றையில் தனது ஆழ் மன உணர்வுகளை எழுதி வைக்க ஆரம்பித்ததாக அவர் கூறுகின்றார். அந்த எழுத்துக்களை பலருக்கு காட்ட அதனூடாக எழுந்த விமர்சனமே நாளடைவில் இவரை நல்லதொரு கவிஞனாக மிளிரச் செய்துள்ளது.

'வசந்தம் வரும் வாசம்' (2004, ஜேர்மனி), 'முகமறியாத வீரர்களுக்காக' (2000, ஜேர்மனி), 'சிறகுமுளைத்த தீயாக' (2011) ஆகிய கவிதைத் தொகுதிகள்  காத்திரமான படைப்பாளியாக அவரை உலகம் அறிந்துகொள்ள வழிவகுத்தன.

இவரது கற்பனையில் உதித்த 'பள்ளிக்கூடம்' எனும் சிறுகதை கடந்த 2008ஆம் ஆண்டு 'சகவம்' எனும் அமைப்பினரால் நடத்தபட்ட சிறுகதை போட்டியில் சிறந்த சிறுகதைக்கான விருதை பெற்றுக்கொண்டது.

இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான சுடர் ஒளி உலகளாவிய ரீதியில் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் 10 இடங்களில் ஓர் இடத்தை இவரது சிறுகதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவரை தமிழ்மிரரின் கலைஞருக்கான நேர்காணல் பகுதியில் செவ்விகண்டபோது அவர் கூறியவை...

கேள்வி:-  இலங்கையில் இளம் படைப்பாளிகளுக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படுகின்றதா?

பதில்:- உண்மையில், இது விவாதத்திற்குரிய விடயமாகும். பொதுவாக கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. கவிஞர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டவர்களுக்கு மட்டுமே இங்கு சிம்மாசனம் ஒதுக்கப்படுகின்றது. வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன.

கேள்வி:- இலங்கையில் நடைபெறும் கலை, இலக்கிய விழாக்களில் இளம் எழுத்தாளர்களுக்கான வரவேற்பும், அதேவேளை அவர்களின் வரவும் குறைவாகவே காணப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது. இதைப்பற்றிய உங்களது கருத்தைக் கூறுங்கள்..?

பதில்:- இவ்வாறான நிகழ்வுகளில் மூத்தவர்களுக்கே மேடைகளில், அரங்குகளில் இடமளிக்கப்படுகின்றது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளுக்கும் அங்கே ஆசனம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய அபிலாஷை.

கேள்வி:-  இவ்வாறான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படும்போது வளர்ந்து வரும் படைப்பாளிகள் அடையாளப்படுத்தப்படாமலேயே போய்விடுகின்றார்கள். ஒருவகையான விரக்தி நிலைக்குக் கூட அவர்கள் தள்ளப்படுகின்றார்களே?

பதில்:- இங்கு சினிமாவில் நல்ல உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் கூறிய கருத்தை உதாரணம் காட்ட விரும்புகின்றேன். ஆளவந்தான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வியொன்றை கேட்டிருந்தார்கள். அதாவது, எதற்காக ஆளவந்தான் திரைப்படத்தில் புதிய இசையமைப்பாளருக்கு இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தீர்கள்?  இசையமைப்பில் புகழ்பெற்ற ரஹ்மான் போன்றவர்களை இத்திரைப்படத்திலும் இசையமைக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தால் படம் நன்கு வெற்றி பெற்றிருக்குமே என்று ஒருவர் கேள்வியொன்றை கமல்ஹாசனிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர், 'என்னை 16 வயதில் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தாமல் இதே போன்ற ஒரு நிலைப்பாட்டை அன்று கையாண்டிருந்தால் இன்று என்னை இந்த உலகம் பார்த்திருக்காது' என்று பதிலளித்திருந்தார்.

வளரும் பயிரை முளையிலேயே தெரியும் என்பார்கள். எனவே ஒவ்வொரு படைப்பாளிக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்து இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல படைப்பாளிகளை இனங்காண அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் அல்லது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சந்தர்ப்பங்களை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும்போதே திறமையான படைப்பாளிகளை வெளிக்கொணர முடியும். நல்ல படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களுக்குரிய முக்கிய இடத்தை வழங்க வேண்டும். அப்போதே அவர்கள் விரக்தி நிலையிலிருந்து அல்லது தேக்க நிலையிலிருந்து மீண்டு வருவார்கள். இதன் பின்பே புதியதொரு இளம் படைப்பாளர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி:- எழுத்துத் தொகுதிகளை வெளியிட்டால்தான் எழுத்தாளனாக முடியும் என்ற எண்ணத்தில் அநேகமான இளம் படைப்பாளிகள் பல தொகுதிகளை ஒரேசமயத்தில் வெளியிடுகின்றனர். ஆனால் இவ்வாறு வெளிவரும் படைப்புகள் ஆரோக்கியமானவையா என்ற கேள்வி உள்ளது. உண்மையில் இது சிறந்ததா?

பதில்:- நீங்கள் கூறும் விடயத்தை ஒருமுறை எனக்கு நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஒரு பதிப்பு நிலையத்திற்கு இளம் படைப்பாளியொருவர் வந்திருந்தார். அந்த இளம் படைப்பாளி வெளியிடப்படும் புத்தகத்தில் ஓரிரு பக்கங்கள் இடைவெளியாக உள்ளன என்று பதிப்பகத்தில் தொழில் புரியும் நபர் கூற, நூலாசிரியர் பேனையையும் தாளையும் எடுத்து படபடவென கவிதைகளை எழுதித் தள்ளினார்.

இந்த இடத்தில் அவர் பக்கத்தை நிரப்ப வேண்டுமே என்பதற்காக கவிதை எழுதினாரே தவிர, கவிதைக்காக பக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த விடயமானது அவருக்கும் அவர் சார்ந்த இலக்கிய உலகிற்கும், இலக்கியத்திற்கும் ஏற்படுத்தும் பாதகமான நிலையென்றே கூற வேண்டும்.

கவிதையோ சிறுகதைகளோ நூலுரு பெறும்போது அது பெரியதொரு தடமாக பதியப்படவேண்டும். கவிதைத் தொகுதி வெளிவந்தால் அது வெளிவந்ததுதான். நூல் வெளிவருவதற்கு முன்பு அதனை சிறந்த முறையில் ஆய்வுக்குட்படுத்திவிட வேண்டும். பன்றி பல குட்டிகளை ஈனுவதைவிட ஒரு குட்டி ஈன்றாலும் அது புலிக்குட்டியாக இருக்க வேண்டும்.

கேள்வி:- எழுத்துத் தொகுதிகளை வெளியிட்டால்தான் எழுத்தாளனாக முடியுமா? இதனால் பல காத்திரமான படைப்பாளிகள் கூட எழுத்தாளர் என்ற வட்டத்துக்குள் வராமல் போய் விடுகின்றார்களே... இதைப் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்:- இலக்கியம் என்பது உண்மையாக இருக்க வேண்டும். இறுதிவரை சோர்ந்து விடக் கூடாது. நல்ல படைப்பாளியாக இருந்தாலும் கூட அவரது படைப்புகள் நூலுறு பெறும் போதுதான் அது காத்திரமானதாக அமையும். அதேவேளை பலபேருக்கு செல்லக் கூடியதாகவும் அமையும். நான் பல கவிதைகளை எழுதி அதை பத்திரிகைகளில் வெளியிடும்போது அது அனைவரையும் சென்றடையும் என்று இங்கு எதிர்பார்க்க முடியாது. புத்தகம் என்று வரும்போது அது சர்வதேச ரீதியாக போய் சேரும் வாய்ப்புள்ளது. ஆனால் அதனை புத்தகமாக்கும் வசதி எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

தங்களது படைப்புகளை வெளியிட வேண்டும் என்று நினைக்கும் அநேகமானவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. அவர்கள் தங்களது ஆற்றல்களை முன்னகர்த்த முடியாமலும் வெளியுலகிற்கு கொண்டுவர முடியாததுமான ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். இது உண்மையில் ஒரு சாபக்கேடு என்றுதான் நான் கூறுவேன்.

கேள்வி:- உங்களது எழுத்துக்களுக்கு கிடைத்த வரவேற்புகள் எவ்வாறு அமைந்தன?

பதில்:- பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்த எனது கவிதைகளை ஒன்று சேர்த்து புத்தகங்களில் பார்க்க வேண்டும் என்று கவிதை பிரியர்கள் விரும்பினர். இவர்கள் எனது கவிதை தொகுதிகளை புத்தக நிலையங்களில் சென்று தேடியுள்ளனர். புத்தக கண்காட்சி இடம்பெற்ற இடங்களில் சென்று 'மட்டுவில் ஞானகுமாரனின் கவிதை புத்தகங்கள் இருக்கின்றதா' என பலர் கேட்டுள்ளனர்.  

எனக்கு விருதைவிட உற்சாகத்தை தந்த விடயமென்றால், வன்னியில் ஒரு குக் கிராமத்தில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த கண்காட்சியில் பெண்ணொருவர் 'மட்டுவில் ஞானகுமாரனின் கவிதைத் தொகுதி இருக்கின்றதா?' என கேட்டுள்ளார். புத்தகங்களை விற்பனை செய்துகொண்டு இருந்தவருக்கு அது ஆச்சர்யமாக இருந்ததாம்.

ஊடகங்கள் ஊடாட்டம் மிகக் குறைந்த ஒரு பிரதேசத்தில் எனது கவிதை பற்றியும் அறிந்து வைத்து ஒரு பெண் கேட்கின்றார் என்று நினைக்கும்போதே அதே எனக்கு பெரியதொரு விருதாக தெரிந்தது. நான் யாருக்காக எழுத வேண்டும் என்று நினைத்து எழுதினேனோ அது அவர்களை போய்ச் சேர்ந்துள்ளது என்று நினைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கேள்வி:- இலங்கையில் உள்ள காத்திரமான எழுத்தாளர்கள் பலர் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று அங்கு தங்களது படைப்புகளை வெளியிடுகின்றனர். இதனால் அவர்களை நல்ல எழுத்தாளர்களாக இலங்கையர்களால் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகின்றதே?

பதில்:- நான் 13 வருடங்கள் ஜேர்மனியில் வசித்து வந்த காலங்களில் இரண்டு தொகுதிகளை அங்கு வெளியிட்டுவிட்டேன். அதனால் அந்நாட்டில் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளனாக விளங்கினேன். ஆனால், இலங்கைக்கு வந்தபின்பு பல தேசிய பத்திரிகைகளை தொடர்புகொண்டு, நான் ஒரு கவிஞன், மீண்டும் ஒரு கவிதைத் தொகுதியை இங்கு வெளியிட வேண்டும் என்று கூற, அதற்கு அவர்கள் 'அப்படியா உங்களை தெரியாதே! நீங்கள் எங்கு எழுதுகின்றீர்கள்? என்ன எழுதுகின்றீர்கள்? இதுவரை ஏதாவது எழுதியுள்ளீர்களா? எங்களது பத்திரிகைகளில் இதுவரை உங்களது படைப்புகளை கண்டதில்லையே' என்று தெரிவித்தனர். அதன் பின்பு எனது எழுத்துக்களை பிரசுரிக்க தொடங்கினர்.

இதைப்போன்று அதிகமான படைப்பாளிகள் உலகமெங்கும் வாழ்ந்து வருகின்றனர். நல்ல காத்திரமான படைப்புகளை படைத்து வருகின்றனர். ஆனால், புலம்பெயர் நாடுகளுக்கும் இலங்கைக்கும் ஓர் இலக்கிய பாலம் இல்லாதபடியால் அவர்களுக்கும் இங்கு வாழும் இலக்கிய ஆற்றல்மிக்கோருக்கும் இடையிலானதொரு தொடர்பு அற்றுப் போகின்றது.

இது ஆரோக்கியமானதாக இல்லை. இதற்கொரு வழியை இலங்கையில் வாழும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களே ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் தற்போது அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் இடம்பெற்ற எழுத்தாளர் மாநாடு இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

பெரும்பாலான இணையத்தளங்களும் தற்போது புலம்பெயர் தமிழர்களது படைப்புகளையும் இலங்கைவாழ் இலக்கியவாதிகளின் படைப்புகளையும் ஒருங்கே வெளியிடுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் எழுத்தாளர்களின் அறிமுகத்தை சர்வதேசம் வரை எடுத்து செல்கின்றது.

ஆனால் பெரும்பாலான பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இதனை செய்வதற்கு தவறுகின்றன. இவை அறிமுக எழுத்தாளர்களை உள்வாங்குதற்கு தயங்குகின்றன. அண்மையில் கூட ஓர் இளம் படைப்பாளி என்னை சந்தித்து தனது படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பியும் இதுவரை அவற்றை அவர்கள் பிரசுரிக்கவில்லையென்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கேள்வி:-  ஊடகங்கள் இளம் படைப்பாளிகளுக்கு சரியான களம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதைப்பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்:- உண்மையில் அநேகமாக ஊடகங்களில் தொழில்புரிபவர்கள் இளம் படைப்பாளிகளின் படைப்புகள் காத்திரமானதாக இல்லையென்ற குற்றச்சாட்டையே முன்வைக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. மூத்த படைப்பாளிகளுக்கு களம் கொடுக்கும் இந்த ஊடகங்கள் ஆரம்பத்தில் அவர்கள் கூட இளமை நிலையிலிருந்தே வந்திருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அன்று இருந்த ஊடகங்கள் மூத்த படைப்பாளிகளுக்கு களம் கொடுக்காமல் இவர்கள் இளமையானவர்கள், இவர்களது படைப்புகள் காத்திரமானவை இல்லையென்று ஒதுக்கியிருந்தால் இவர்கள் இன்று நல்ல படைப்பாளிகளாக வெளிவந்திருக்க மாட்டார்கள்.

ஊடகங்கள் இளம் படைப்பாளிகள் என்று ஒதுக்கி வைப்பதை நிறுத்த வேண்டும். இளம் படைப்பாளிகள்தான் நாளை முதிர்ந்த படைப்பாளிகளாக வர முடியும். எனவே வாய்ப்புகளை ஊடகங்கள் சரியாக வழங்க வேண்டும். அதைவிடுத்து போலித்தனமான காரணங்களை சாட்டுவதும், அவர்கள் பக்குவப்பட வேண்டும் என்று கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

கேள்வி:- உங்களை எழுதத் தூண்டிய விடயம் எது?

பதில்:- மனிதனாக பிறந்தால் ஏதோ ஒரு துறையில் சாதித்திருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன். இப்படியிருக்கையில் புலம்பெயர் சமூகத்திற்கு சென்றபோது, என்னுடைய மனதில் இருக்கும் உணர்வுகளை, வேட்கைகளை நாலுபேரிடம் பங்கிட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக எழுந்தது. ஆனால் அந்த நான்கு பேரும் ஜேர்மனியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். என்னுடைய தாய்மொழியான தமிழ் மொழியூடாக கருத்தை பங்கிட முடியாமல் இருந்தது. அதன்போது நான் பேனாவைத் தூக்கி என் மன கொந்தளிப்புகளை வெள்ளையொற்றையில் எழுதினேன். அதை பலரிடம் காட்டினேன். அவர்கள் அதனை பார்த்து நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.

இவ்வாறு எழுந்ததுதான் கவிதை எழுதும் உணர்வு. கவிதையென்பது தனியொருவனால் ஆழப்படக் கூடியது. நானே ராஜா, நானே மந்திரி போன்றது. இங்கு கூட்டுறவு முயற்சியென்பது அவசியமற்றது. கவிதையை இலகுவாக கையாளக்கூடியதாக இருந்தது. இவ்வாறுதான் கவிதையெனும் உலகிற்குள் நுழைந்தேன்.

கேள்வி:-உங்களை கவர்ந்த எழுத்தாளர்கள் பற்றிக் கூறுங்கள்?

பதில்:- புதுவை ரத்தினதுரை. இவரை பற்றி இங்கு கூறினால் அது சிக்கலுக்குரியதாகவே பார்க்கப்படும். ஆனால், அவரது அரசியல் ரீதியான கொள்கைகளை விடுத்து கவிஞன் என்ற ரீதியில் பார்க்கவேண்டும்.

கேள்வி:- இறுதியாக நீங்கள் கூற விரும்புவது?

பதில்:- எமக்காக நாமே சுவாசிக்க வேண்டும். எமக்காக மற்றொருவர் சுவாசிக்க மாட்டார். இலங்கை தமிழர்களுக்கான இலக்கியத்தை வேற்று நாட்டவர்கள் வளர்த்துவிட்டு போக மாட்டார்கள். எமக்கிருக்கும் ஒரு சிறிய வட்டத்தில் நாங்கள் இலக்கியம் படைத்துக் கொண்டு செல்கின்றோம். எங்களுக்கு தேவைப்படுவது பாரிகள். முல்லைச் செடிக்கு எவ்வாறு பாரி தேரை விட்டுவிட்டுச் சென்றாரோ அதைப்போல வள்ளல்களே எமக்கும் தேவைப்படுகின்றார்கள்.

ஆனால் இங்கு அதை செய்வதற்கு அனைவரும் தயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். எதற்கெடுத்தாலும் தமிழ் நாட்டிலிருந்தே திறமையானவர்களை அழைத்து வருகின்றார்கள். இவ்வாறு இருந்தால் எவ்வாறு எங்களது இலக்கியம் வளரும்? இலக்கியவாதிகள் எவ்வாறு வளர்வார்கள்? இங்கு இருக்கும் படைப்பாளிகளில் உண்மையான படைப்பாளிகளை கண்டு- தூக்கி விடுவதற்கு ஒருவருமில்லாத நிலைக் காணப்படுகின்றது.

இலங்கையில் இருக்கும் வாசகர்களும் புத்தக நிறுவனங்களுமே எங்களது படைப்பாளிகளுக்கு உந்து சக்தியாக அமையவேண்டும். அதனை செய்தால்தான் இலங்கை இலக்கியம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு நாங்கள் ஒரு பெரிய பணியை செய்தது போன்று அமையும்.

நேர்காணல்:- க.கோகிலவாணி
Pix by :- Nishal badhuge


  Comments - 0

 • Kethis Monday, 25 April 2011 04:58 AM

  சிறந்த நேர்காணல்

  Reply : 0       0

  Stanislaus Felix Rajendran Tuesday, 26 April 2011 10:18 AM

  My name is Stanislaus Felix Rajendran. I am working at Ceylon Electricity Board in IT field. I have completed Australian Computer Society(ACS) and British Computer Society(BCS),UK, I am Professional Member of BCS (MBCS) and Committee Member of BCS Sri Lanka Branch.
  Now I will come to the subject. This is one of the best ever humble thought-provoking interview I ever come through (This is my personal opinion.) I will be very happy if I get a personal reply from great Mr.Gnanakumaran(Matuvil).

  Reply : 0       0

  Firows Tuesday, 26 April 2011 04:19 PM

  என்ன ஒரு வில்லத்தனம்..?

  Reply : 0       0

  danieljeeva Thursday, 05 May 2011 12:06 PM

  ஞானக்குமரன் நல்ல மனிதர் என்று மட்டும் எனக்குத் தெரியும்.நிச்சயம் இவரிடமிருந்து நல்ல படைப்புகள் வருமென்று எதிர்பார்க்கிறோம்.நேர்காணல் மிகச்சிறப்பாக இருக்கிறது. கேள்விகளும் நன்றாக இருக்கிறது.
  நன்றி

  டானியல் ஜீவா-கனடா

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X