2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

'எஸ்.எம்.எஸ். மூலமான சிறந்த கலைஞர்கள் தெரிவை மாற்ற வேண்டும்': நித்தியானந்தன்

A.P.Mathan   / 2011 ஜூன் 21 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'தற்போது அதிகமாக இசைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் எஸ்.எம்.எஸ். வாக்குகளினூடாகவே வெற்றியாளரை தீர்மானிக்கின்றனர். எனவே, ஒரு திறமையான கலைஞனை பார்வையாளர்களுக்கு பதிலாக எஸ்.எம்.எஸ்ஸினூடாக தெரிவு செய்யும் நிலை தோன்றிவிட்டது. இது ஆரோக்கியமானது அல்ல. வியாபார நோக்கத்திற்காக பொது சந்தையில் வெளியாகி இருக்கும் இந்த எஸ்.எம்.எஸ். முறையை முதலில் போட்டிகளிலிருந்து நீக்க வேண்டும்' என்கிறார் சங்கீத வித்துவானும் இசையமைப்பாளருமான பகவத்சிங் நித்தியானந்தன்.

தற்செயலாக இசையில் ஆர்வம் ஏற்பட, அதனை முறைப்படி கற்க வேண்டுமென்ற எண்ணம் 17 வயதில் இவருக்கு தோன்றியுள்ளது. மட்டக்களப்பு விபுலாநந்தா அழகியற் கற்கை நிலையத்தில் இசையை ஒரு பாடமாக தெரிவு செய்துகொண்டு முறைப்படி இசையை கற்க ஆரம்பித்தார். தனது 15ஆவது வயதில் முதன்முறையாக பாடலொன்றை பாடுவதற்காக திரையில் தோன்றிய இவருக்கு அடிக்கடி வாய்ப்புகள் வர, தமது குரல் திறமையையை வெளியுலகிற்கு பறைசாற்றினார்.

தனது 20 வருட இசைவாழ்வில் சங்கீத வித்துவான் பகவத்சிங் நித்தியானந்தன் சாதித்தவை பல. இதுவரை 30 இற்கும் மேற்பட்ட சொந்த பாடல்களை இசையமைத்து இவர் பாடியுள்ளார். 'ஆதித்யா' எனும் பக்திப் பாடல்கள் அடங்கிய இறுவட்டை கடந்த வருடம் இவர் வெளியிட்டார். இலங்கையில் புகழ்பெற்ற பத்துத் திருத்தலங்கள் குறித்து பாடிய பத்து பக்திப் பாடல்கள் இந்த இறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓர் இறுவட்டு இவ்வருட இறுதிக்குள் வெளிவரவுள்ளது. மூன்று தொலைக்காட்சி நாடகங்களுக்கு முகப்பு பாடல்களை இசையமைத்து பாடியிருக்கிறார். அத்தோடு அந்நாடகங்களுக்கு பின்னணி இசையினையும் வழங்கியிருக்கிறார்.
பாடல்களை இசைப்பது மட்டுமல்லாமல் இசையமைப்பது, இசைக்கருவிகளை வாசிப்பது, பாடல் எழுதுவது என பல துறைகளில் கால்பதித்து சலிக்காமல் இன்னும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார். ஊடகத்தில் கடமையாற்றுவதால் தமது திறமைகளை மழுங்கடித்துவிட்டோம் என்பது இவரது மன ஆதங்கமாக இருக்கின்றது. இருந்தபோதிலும் பணிபுரியும் ஊடக நிலையத்தின் சிறந்த கலைஞனாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

'அட்சயாஸ்' என்ற இசைக்குழுவை இவர் உருவாக்கியிருந்தபோதும் அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. எனினும் இவரது இசை கற்கைநெறிக்காக 'இசைக் கலைமாமணி' விருது 2000ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக அவரை சந்தித்தபோது அவர் வழங்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

கேள்வி: 20 வருடகால இசைப் பயணத்தில் நீங்கள் சவாலாக கருதிய விடயம் எது?

பதில்: இசையை வாழ்க்கையில் முழுநேரத் துறையாக எடுத்துக்கொள்ள முயற்சித்தது பெரியதொரு சவால்தான். அதற்கு நமது நாட்டுச் சூழல் பொருத்தமானதாக அமையவில்லை. இருந்தாலும் நான் செய்யும் தொழிலில் இசையையும் ஒரு பகுதியாக வெளிப்படுத்திக்கொள்வதற்கும் வளமூட்டுவதற்குமான வழிகளை அமைத்துக்கொண்டது சிறிதளவு திருப்தியை தருகின்றது.
ஊடகவியலை எனது வாழ்க்கைத் தொழிலாக தெரிவு செய்யாமல் இருந்திருந்தால் நான் இருக்கும் இந்த மட்டத்திலிருந்து உயர்ந்து சென்றிருப்பேன் என்ற எண்ணம் அடிக்கடி எனக்குள் தோன்றிச் செல்லும். ஊடகவியலாளனாக ஒரு நிறுவனத்தில் கடமையாற்றிக்கொண்டு 'இசையை வளர்க்கவேண்டும், இசையில் நான் வளரவேண்டும்' என்று நினைப்பது முடியாத செயலாகும். ஊடகங்களில் கடமையாற்றும்போது என்னை நானே பெருமித்து எழுதமுடியாது. நானே முன்வந்து இசை நிகழ்வுகளில் பங்குபற்ற முடியாது. மற்றவர்களது திறமைக்கு களம் அமைத்துக்கொடுத்தாலும் எமது திறமைக்கு இங்கு நாங்களே முற்றுப்புள்ளியை வைத்துக்கொள்கிறோம். கொஞ்சம் வெளியில் சென்று வேறு ஊடகங்களில் எமது திறமையை காட்டினால் அது நாம் தொழில் புரியும் நிறுவனத்திற்கு துரோகம் இழைத்ததை போன்று மாறிவிடும். எனவே இந்தத் துறையிலிருந்துகொண்டு நமது உள்ளத்தில் குவிந்து கிடக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவது சாத்தியமானதில்லை. இது ஒரு சவால்தான். 

கேள்வி:- எமது இசை, இந்திய இசைக்கு சவால்விடும் காலம் எப்போது வரப்போகின்றது?

பதில்:- ஆரம்பகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இருந்தாலும் அவர்கள் தமது ஆர்வத்தினால் எமது இசையை வளர்க்க முயற்சித்தார்கள். தற்போதைய சந்ததியினருக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கின்றன. அவர்கள் இந்தியாவுக்குச் சென்று இந்திய பாடகர்களுடன் இருந்து இசையை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே அமைந்திருக்கின்றன. அந்த வழியில் இலங்கையிலிருந்து அதிகமான இளம் இசைக் கலைஞர்கள் தென்னிந்தியாவுக்குச் சென்று அவர்களுக்கு வேண்டிய இசையை கற்றுவிட்டு வருகின்றார்கள். இந்திய பிரபலங்களுடன் இணைந்து தொழில் புரிகின்றனர்.
இவ்வாறு பல அனுபவங்களை அவர்களின் மூலமாக பெற்றுக் கொண்டு இலங்கைக்கு திரும்பும் அவர்கள் தாம் தொடர்பு கொண்டவர்களை பற்றி ஏனையவர்களிடம் சொல்லிக் கொள்வதற்கு விரும்புவதில்லை. தான் மட்டும் இசைத்துறையில் வளர்ந்தால் போதும், மற்றவர்களை வளர்க்க வேண்டிய தேவையில்லை என்று நின்று விடுகின்றார்கள். இப்படியிருக்கும் போது நாம் எவ்வாறு இந்திய இசைக்கு சவால் விடும் அளவிற்கான ஒரு காலத்தை எட்டமுடியும்?

இந்தியா என்பது மிகப் பெரிய நாடு. அங்கு பரந்தளவில் வாய்ப்புகளும் வளங்களும் காணப்படுகின்றன. அந்த வளங்களை வைத்து அவர்கள் இன்னும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றனர். அவர்களுக்கு சவால் விடும் ஒரு நிலையை உருவாக்குவதற்கு முதலில் நம்மிடம் போதியளவு வளங்கள் இருக்க வேண்டும். நாம் கற்றுத் தேற இன்னும் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. சிறிதளவு வளங்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு போட்டியாக வரவேண்டும் என்று நினைப்பது முறையல்ல.

நாம் இன்னும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டிய ஒரு நிலையில் நிற்கின்றோம். முதலில் நாமே நமக்கான வாய்ப்புகளை தேடிக்கொள்ளவேண்டும்.

கேள்வி:- அப்படியானால் இசைத்துறையில் தனித்துவமான நிலையை எப்போது அடையப்போகின்றோம்?

பதில்:- இலங்கையைப் பொறுத்தவரை தனித்துவம் என்பது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேசத்திற்குமென ஆடல் கலைகள் காணப்படுகின்றன. இவற்றை நாம் இனி எவ்வாறு வளர்க்க வேண்டுமென்றே தீர்மானிக்க வேண்டும். அதில் எவ்வாறு புதிய விடயங்களைக் கொண்டு வரலாம், எவ்வாறு மாற்றத்திற்கு உள்ளாக்கலாம் என்பதை மட்டும் பற்றியே சிந்திக்கவேண்டும். அதை விடுத்து இவற்றைக் கொண்டு இந்தியாவின் கலைகளுடன் போட்டியிட்டால் நமது கலை அடிபட்டு போய்விடும். அதைப்போல இசைத்துறையிலும் இனி எவ்வாறு மாற்றங்களைக்கொண்டு வரலாம், எவ்வாறு அதன் வளர்ச்சிக்கு வித்திடலாம் என்பதை பற்றி யோசிக்க வேண்டுமே தவிர, போட்டி நிலை குறித்து சிந்திக்க கூடாது. எமக்கே உரிய தனித்துவமான கலையை உருவாக்க இன்னும் பல முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவையே இப்போது எமக்குள்ளது.

கேள்வி: இசைத்துறையில் புதிய விடயமாக உள் நுழைந்திருப்பது 'ரீமிக்ஸ்'. இது இசைத்துறைக்கு ஆரோக்கியமானதா?

பதில்:- ரீமிக்ஸ், ரீமேக் என இரண்டு வடிவங்கள் காணப்படுகின்றன. ரீமிக்ஸ் என்பது ஒரு பாடலின் உயிர்த்துவத்தை மாற்றாமல் இடையில் அதற்கு வேறு இசை வழங்குவது. ரீமேக் என்பது ஒரு பாடலின் வரிகள் இசையமைப்புக்கள் இருக்க, அதை அப்படியே தற்போதைய நவீன இசைக் கருவிகளை பயன்படுத்தி மாற்றியமைப்பது. இது இசைத்துறைக்கு ஆரோக்கியமில்லை என்பது உண்மைதான். என்னதான் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பாடலை மாற்றி அமைத்தாலும் அதனது உயிர்த்துவத்தை பாடலின் அசலில்தான் (ஒரிஜினல்) பெற்றுக்கொள்ள முடியும். ஆனாலும் இதை முற்றுமுழுதாக நிராகரித்துவிட முடியாது. ஏனெனில் பிரபல இசையமைப்பாளர் ரஹ்மான், இசையமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடாது என நினைத்திருந்தால் அவர் இன்னும் கர்நாடக சங்கீதத்தையே பாடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். எனவே தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டும். ஆனால் அவை முற்றுமுழுதாக மாற்றத்திற்குட்படுத்தக் கூடாது.

கேள்வி:- தற்போது வெளிவரும் பாடல்களில் இரட்டை அர்த்தமிக்க வரிகளையே அதிகமாக காணக்கூடியதாக உள்ளது. இது குறித்து உங்கள் கருத்து?

பதில்:- இது நல்ல இசைக்கு ஆரோக்கியமில்லை என்பது என்னுடைய கருத்து. ஆனால் இப்போதைய சந்ததியினர் 'குத்துப் பாடல்' என்ற பேரில் இரட்டை அர்த்தத்துடன் வெளிவரும் பாடல்களையே அதிகமாக விரும்புகின்றார்கள். இலக்கியச் சுவை கொண்ட பாடல்களை கேட்டு ரசித்து மெய்சிலிர்த்துப்போகும் சந்ததி இப்போது இல்லை. பாடலுடன் ஆடல் வேண்டும் என்பதே இன்றைய சந்ததியின் எண்ணத்தில் ஊறிப்போய் இருக்கின்றது. பாடல் காட்சிகளில் கூட இவ்வாறான விடயங்களை இப்போதைய சந்ததியினர் எதிர்பார்க்கின்றனர்.

என்னதான் குத்துப்பாட்டுகள் வந்தாலும் அவற்றால் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்பதையே நான் கருதுகின்றேன்.

கேள்வி:- இசைத்துறையில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் குறித்துக் கூறுங்கள்?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சியின் வீரியம் இசைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. இதனால் நன்மைகள் இருந்தாலும், அதிகமாக பாதகங்களையே காணக்கூடியதாகவுள்ளது. தற்போது பாடல்களை பாடவேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை இந்த இசைக்கருவிகள் தோற்றுவித்துவிட்டன. இசைக்கருவிகளே அந்தப் பாடல்களை பாடி விடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு பாடலை எடுத்துக்கொண்டால், அந்தப் பாடலின் வரிகளை பாடகர் சிரமப்பட்டு பாடவேண்டிய அவசியமில்லை. அவர் வாயசைத்தால் போதும், பாடலின் வரிகளை இசைக்கருவிகள் பாடும் என்ற நிலை உருவாகிவிட்டது. வரிகளுக்கு ஏற்ப இசையை மட்டும் வழங்கும்போது அது பார்வையாளர்களுக்கு விருந்தாகவே அமைந்துவிடுகின்றது.

இப்போது யாரும் பாடலாம், யாரும் இசையமைக்கலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. இது தொழில்நுட்டத்தின் வளர்ச்சி என்றே கூறவேண்டும். இந்த இசைக் கருவிகளின் வருகையால் பாடலை எப்படியும் பாடலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஒரு பாடகரின் குறைகளை இசைக்கருவிகள் மறைத்து விடுகின்றன. அதனால் பாடலில் இடம்பெறும் உச்சரிப்பு பிழைகள்கூட பெரிது படுத்தப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் பாடகர்கள் மிகச் சிரமப்பட்டே பாடகர் என்ற நிலையை அடைந்தனர். இப்போது எல்லோரும் பாடகராகலாம், இசையமைக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

கேள்வி:- ஓரிரு பாடல்களைப் பாடியவுடனே ஒரு சிலர் தங்களை பெரிய பாடகராக காட்டிக்கொள்வது ஏன்?

பதில்:- பிறவி இசைஞானம் இருந்தால் கேள்விஞானத்தில் மேலெழுந்து செல்லலாம். ஓர் இசைப் பாரம்பரியத்தில் வந்தவருக்கு பிறவி இசைஞானமும், கேள்வி இசைஞானமும் காணப்படும். எனவே இவ்விரண்டையும் ஒருமனே கலந்து வெளிப்படுத்தும்போது பிறவியில் இசைஞானத்தை பெற்றவர்கள் பார்வையாளர்கள் மத்தியில் பொறுமையானவர்களாக காட்டிக்கொள்கின்றனர். ஆனால், இசைஞானம் இல்லாதவர்கள் கேள்வி ஞானத்தில் பாடும்போது தன்னை பெரியவர்களாக காட்டிக்கொள்கின்றனர்.

இசை என்பது கேட்பது. இசைக்கு பா என்ற இன்னொரு பெயரும் உண்டும். பா என்பது கேள் என்று அர்த்தப்படுகின்றது. எனவே இசை என்பது கேட்பதை ஒப்புவிப்பதாகும். கேட்பதை அப்படியே ஒப்புவிப்பது இசைக்கு முறையல்ல. அவற்றில் சில சில மாற்றங்களைக் கொண்டு வந்து ஒரு புதிய கோணத்திலிருந்து பாடவேண்டும். கேள்வி ஞானத்தையும் பிறவி ஞானத்தையும் வைத்துக்கொண்டு அவற்றில் ஒரு புதிய விடயங்களை உட்புகுத்தி பல மாற்றங்களை கொண்டு வந்து பாடும்போது அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். ஆனால் நம்மில் சிலர் கேள்வி ஞானத்தை பிறவி ஞானமாக கருதுகின்றார்கள். அதனால் அவர்கள் தம்மை பெரியவர்களாக காட்டிக்கொள்ள விரும்புகின்றார்கள். இது அவர்களை நீண்ட காலத்திற்கு இந்தத் துறையில் நிலைத்திருக்க செய்யாது.

கேள்வி- சிறந்த கலைஞர்களை தெரிவு செய்வதற்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. உண்மையான கலைஞனை எவ்வாறான போட்டிகளினூடாக தெரிவு செய்யலாம்?

பதில்:- தற்போது அதிகமாக இசைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் எஸ்.எம்.எஸ். வாக்குகளினூடாகவே வெற்றியாளரை தீர்மானிக்கின்றனர். எனவே ஒரு திறமையான கலைஞனை பார்வையாளர்களுக்கு பதிலாக எஸ்.எம்.எஸ்ஸினூடாக தெரிவு செய்யும் நிலை தோன்றிவிட்டது. இது ஆரோக்கியமானது அல்ல. வியாபார நோக்கத்திற்காக பொது சந்தையில் வெளியாகி இருக்கும் இந்த எஸ்.எம்.எஸ். முறையை முதலில் போட்டிகளிலிருந்து நீக்க வேண்டும்.

ஒருவர் பாடுவதை அப்படியே பாடினால் அது மிமிக்கிரி. இசை என்பது மிமிக்கிரியல்ல. அதிகமான போட்டிகளில் பாடகர்கள் மிமிக்கிரி கலைஞர்களாக இருக்க வேண்டுமென்பதையே நடுவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். எஸ்.பி.பி., சுசிலா போன்று பாடவேண்டும் என்று நினைக்கின்றார்கள். 'அவர்களைப் போன்று பாடவில்லை, ஸ்ருதி தப்பிவிட்டது, அவர் இந்த இடத்தில் இப்படி பாடுவார்' என்று நடுவர்கள் குறைகளை கூறிக்கொண்டு இருப்பார்கள்.

ஓவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு அடிப்படை இருக்கும். 50 வயது பாடகர் ஒரு பாடலை பாடும்போது வேறுவிதமாக இருக்கும். அதே பாடலை 5 வயது பிள்ளை பாடினால் அது வித்தியாசமாக இருக்கும். ஆனால் குறித்த பாடலின் அடிப்படை மாறாதிருக்க வேண்டும். எனவே 50 வயது பாடகர் பாடியதைப் போன்றே 5 வயது பிள்ளையிடமும் எதிர்பார்க்க முடியாது. அந்தப் பிள்ளை அந்த பாடலை அதற்குள்ள மதிநுட்பத்திற்கு ஏற்ப புதுப்பொலிவுடன் பாடினால் அதை நடுவர்கள் வரவேற்க வேண்டும்.

ஓர் இசைப் போட்டியை 3 மட்டத்தில் நடத்தவேண்டும். முதல் மட்டத்தில் பாடகரின் கேள்வி ஞானத்தையும் பிறவி ஞானத்தையும் பார்க்க வேண்டும். இரண்டாம் மட்டத்தில் பாடகர் தனது மதிநுட்பத்தை எவ்வாறு தாம் பாடும் பாடலில் பிரயோகிக்கின்றார் என்பதை பார்க்கவேண்டும். இறுதி மட்டத்தில் ஒரு கலைஞனின் உண்மையான வெளிப்பாட்டைக் காணமுடியாது. இறுதி மட்டத்தில் எப்போதும் மனப் பயத்துடன் உடல் நடுக்கத்துடனுமே எந்தக் கலைஞனும் தனது ஆற்றலை வெளிப்படுத்துவான். எனவே இறுதி மட்டத்தில் அவனது பாடும் திறமையை மட்டும் பரிசீலித்து பெற்ற புள்ளிகளையும் இரண்டாம் மட்டத்தில் அவன் பெற்றுக்கொண்ட புள்ளிகளினதும் அடிப்படையில் ஒரு கலைஞனை தெரிவு செய்ய வேண்டும். இதுவே ஒரு சிறந்த கலைஞனை வெளிக்கொணர நடத்தும் போட்டிக்கு அடையாளமாக அமையும்.

கேள்வி:- இறுதியாக நீங்கள் கூற விரும்புவது?

பதில்:- இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பிட்டளவு கலைஞர்களே இருக்கின்றனர். அந்த குறிப்பிட்ட கலைஞர்களையும் ஊடகங்கள் பொதுவாகப் பார்ப்பதற்கு தவறுகின்றன. ஒரு பாடகர் ஓர் ஊடகத்தில் தோன்றி பாடினால் மற்ற ஊடகங்களுக்கு செல்லக் கூடாது என்ற நிலை இங்கு காணப்படுகிறது. இது கலைஞர்களையே பாதிக்கின்றன. ஊடகங்கள் கலைஞர்களை பொதுவாக பார்க்கவேண்டும். கலைஞர்கள் பொதுவானவர்கள். அதே நேரத்தில் குறிப்பிட்டளவு இருக்கும் கலைஞர்கள்; தமக்குள் இடம்பெறும் போட்டி, பொறாமை, கோபம் போன்றவற்றை வெளியில் தூக்கி எறிந்துவிட்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்தால் இலங்கையில் இசைத்துறை வளர்ந்து புகழ்பெற்று நிற்கும்.

நேர்காணல்: க.கோகிலவாணி
படங்கள்: கித்சிறி டி மெல்

நித்தியானந்தனின் பாடல்கள்...


  Comments - 0

 • alraheem Wednesday, 22 June 2011 08:36 PM

  நித்தியானந்தனின் கருத்தை வரவேற்கிறேன். கலைஞன் என்பவன் யார்? அவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன? என்பவற்றை மிக அழகாக கூறியிருந்தார். இக்கருத்து குறிப்பாக ஊடகங்களுக்கு மிக பொருத்தமான ஒரு அறிவுரையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு கலைஞனின் திறமையை வெறும் எஸ்.எம்.எஸ்.கலைக் கொண்டோ, கேள்வி ஞானத்தை கொண்டோ கணிப்பிட முடியாது என்று சுருக்கமாக பேட்டியளித்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  thangaroopan Monday, 25 July 2011 08:44 PM

  இந்த sms யே நம்பித்தான் இந்த நிகழ்ச்சி நடத்துறாங்க.வருமானந்தான் .மற்றதெல்லாம் அப்புறம்தான்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .