2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ஓவியத் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம் கணினி: நளீம்

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'ஓவியத் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம் கணினி என்றால் அது மிகையல்ல. நாம் 'ஸ்கிறீனிலோ' அல்லது தாளிலோ ஒரு கோட்டினைப் போட்டுவிட்டால் பின்னர் அதனை மாற்ற முடியாது. அல்லது மாற்றுவதற்கு சிரமப்பட வேண்டும். ஆனால் கணினியில் அப்படியல்ல. அக்கோட்டினை நகர்த்துவதோ, வளைப்பதோ, இல்லாமல் ஆக்குவதோ மிகவும் எளிதாக இருப்பதும், வர்ணங்களைத் தேர்வு செய்யும்போதும் கணினிகளில் மிகவும் எளிதாக, தேவையான வர்ணத்தை பிரயோகித்துப் பார்க்க முடிவதும் மிகப் பெரிய வசதியாகும். படத்தினைப் பிரதி பண்ணுவதற்கான வாய்ப்பும் கணினியில் கிடைப்பதால் மிக எளிதாகவும் விரைவாகவும் ஓவியங்களை உருவாக்க முடிகிறது' என்று கூறுகிறார் கவிஞரும் ஓவியருமான சம்சுதின் நளீம்.

கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட நளீம், தனித்து கவிதையில் மட்டும் ஆற்றலை வெளிப்படுத்தாமல் பலகோணங்களிலும் தனது இருப்பை நிலைநாட்டி வருகிறார்.

'இலை துளிர்த்துக் குயில் கூவும்', 'கடைசிச் சொட்டு உசிரில்' இவரது கவித்திறமையை பறைசாற்றி நிற்கும் கவிதைத் தொகுதிகளாகும். இக்கவிதைகளுக்காக அவர் பல்வேறு விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு  'விபவி' சிறந்த கவிதைக்கான முதல் பரிசு, 'இலை துளிர்த்து குயில் கூவும்' கவிதை தொகுதிக்காக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 2008ஆம் ஆண்டு வழங்கிய விருதும் சான்றிதழும், 2002ஆம் ஆண்டில்; உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு விருது, 2000ஆம் ஆண்டில் 'கடைசிச் சொட்டு உசிரில்' கவிதைகளுக்காக வட-கிழக்கு மாகாண சாபை விருது என்பன இவரின் கவித்திறமைக்காக கிடைக்கப்பெற்ற அங்கீகாரங்களாக கூறலாம்.

கவிதையில் மட்டும் நின்றுவிடாமல்; ஓவியம், புகைப்படப்பிடிப்பு, சிறுகதை, பத்தியெழுத்துகள் என இவரது இயங்குதளம் விரிந்து பயணிக்கின்றது.

ஓர் எழுத்தாளனை அடையாளப்படுத்த அவனது ஆக்கங்கள் நூலுருப்பெறுவது அவசியம் என்றாகிப்போன இக்காலகட்டத்தில் பல மட்டங்களில் ஆக்கங்களை பிரசவித்தும் கூட அதனை நூலாக வெளிக்கொணர பல்வேறு சிரமங்களை ஒவ்வொரு எழுத்தாளர்களும் எதிர்கொள்கின்றார்கள். அந்த சவாலை இவரும் எதிர்கொள்வது இங்கு குறிப்பிட்டாகவேண்டும். இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்து நீண்ட காலமாகிவிட்டன.

தன்னகத்தே பல்வேறு திறமைகளை புதைத்து வைத்திருக்கும் நளீமை தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக நேர்கண்ட போது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள், கேள்வி - பதில் வடிவில் தருகின்றோம்.

கேள்வி:- வாழ்வின் துயரங்களை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாக எழுத்தென்பது மாறிபோனது. உங்களுக்கும் இது பொருந்துமா?

பதில்:- நிச்சயமாக. எழுத்து மாத்திரமல்ல, பொதுவாக கலைச் செயற்பாடுகள் அனைத்துமே அவ்வாறுதான் அமைந்திருக்கின்றன. எங்களது பிரச்சினைகளை, துயரங்களை நாம் சிந்தும் குருதியைப் பேசாத எந்த ஒரு கலை வெளிப்பாடும் அர்த்தமற்றதுதான். ஒரு நல்ல கலைஞனால் தனது தேசம் பற்றி எரியும் போது 'பிடில்' வாசித்துக் கொண்டிருக்க முடியாது. அந்தப் பிடில் ஓசையிலேனும் தனது துயரத்தினை வெளிப்படுத்துவான். அந்த வகையிலேயே தனது எழுத்துக்களும் பெரும்பாலும் தனது துயரத்தை, தன்னைச் சார்ந்தவர்களின் துயரத்தை பேசுவதாக அமைந்து விட்டன.

தொன்னூறுகளில் நான் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் எழுதிய எனது முதல் கவிதை 'இதயக் குமுறல்'. இந்தக் கவிதை எனது அப்போதைய துயரத்தின் வெளிப்பாடுதான். இந்தக் கவிதையே பலரது அனுதாபத்தையும், பல நல்ல கவிதை நூல்களையும் எனக்குப் பரிசாகப் பெற்றுத்தந்ததை நான் இங்கு நினைவுபடுத்தியே ஆகவேண்டும்.

கேள்வி:- கவிதையை உங்களின் வெளிப்பாட்டுத்தளமாக தேர்ந்தெடுத்தமைக்குரிய காரணம் என்ன?

பதில்: கவிதை ஊடகத்துக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அதை ஊடகங்களில் எல்லாம் சிறந்த ஊடகமாகவும் கூற முடியும். கற்காதவர்களுக்கும் தெரிந்த மொழி கவிதை மொழி, கட்புலன் ஆகாமலும் வாழும் மொழி, இதற்கு நம் முன்னோர்களான புலவர்கள், மஸ்தான்கள், அண்ணாவிமார்கள் நல்ல உதாரணம். நாட்டார் பாடல்களுக்கு பெயர் போன இடம் கிழக்கு மண். கவிதையில் மிகக் குறுகிய சில வசனங்களிலேயே பெரிய ஒரு விடயத்தை சொல்லிவிடக்கூடிய வசதி. மற்றும் பாரதூரமான ஒரு விடயத்தைக் கூட பயப்படாமல் சொல்லிவிட முடியும்.

உதாரணமாக, பெண் ஜனாதிபதி ஆட்சியில் இருந்த போது 'அரசி'' என்ற ஒரு கவிதை எழுதினேன். அக்கவிதை 'இப்போதெல்லாம் பூவரசை முளைத்தாலே பயமாக இருக்கிறது' என்று முடியும். இப்போது இந்த அரசனின் ஆட்சியில் அதைவிட பயமாக இருக்கிறது.

இப்படியாக கவிதை ஊடகம் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது என்றாலும் நான் கவிதை, ஓவியம், சிறுகதை மற்றும் அண்மைக் காலமாக புகைப்படத்துறையிலும் ஈடுபாடுகாட்டி வருகிறேன்.

கேள்வி:- கவிதைகளிலும் தமக்கேயுரிய தனித்துவப் போக்கை ஒவ்வொரு கவிஞர்களும் வெளிப்படுத்திவரும் இக்காலக்கட்டத்தில் நீங்கள் அந்த முயற்சிகளை உங்களது கவிதைகளில் கையாள வேண்டுமென நினைக்கின்றீர்களா?

பதில்: ஒரு நல்ல கவிதையின் ஊற்று தானாகவே மனதுக்குள் கிளர்ந்து எழுந்து தன்னை எழுதும் படி தொந்தரவு செய்யும். அதை எழுதிவிட்டால் அதுதான் அந்தக் கவிஞனுக்கான தனித்துவமாக அமைந்துவிடும் என்பது என்னுடைய அபிப்பிராயம். மாறாக ஒரு கவிஞன் தனக்கான ஒரு வடிவத்தை உருவாக்குகின்ற போது அவனுக்கான வடிவம் கிடைக்கக் கூடும். ஆனால் அதில் கவிதை இல்லாமலும் போய்விட வாய்ப்பிருக்கிறது. என்னைப் பொறுத்த வரை நான் ஒருபோதும் திட்டமிட்டு எனக்கான ஒரு வடிவத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் எனது கவிதைகளை வாசித்த பலர் எனது கவிதைகளில் எனக்கான தனித்துவம் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

அதற்காக கவிஞன் பிறக்கிறான், ஒரு கவிஞனை உருவாக்க முடியாது என்றவாதத்தை நான் முற்று முழுதாக மறுக்கிறேன். ஆற்றலுள்ள எந்த ஒரு நபரும் ஒரு விடையத்தில் முழு மனதாக ஈடுபாடு கொண்டு சோர்வுறாமல் அதை அடைய பலமாக முயற்சித்தால் அதை அடைய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

கேள்வி:- உங்களது கவிதைகளில் பின்நவீனத்துவ போக்கை காணமுடிகின்றது. இது குறித்த உங்களது கருத்து என்ன?

பதில்: சில காலங்களுக்கு முன் 'சீரியலிசம்' பற்றிப் பேசினார்கள். இப்போது 'போஸ்ட் மோடெனிலிசம்' பற்றிப் பேசுகிறார்கள.; இதேபோன்று பல 'இசங்கள்' வந்து விட்டன. இவைகள் எல்லாம் மேற்கத்தேயர்களின் கண்டு பிடிப்புகளே. இது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச் சொந்தமானது. நாம் இப்போதுதான் இதை தூக்கிப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

நான் ஒருபோதும் கவிதை எழுதும்போது பின்நவீனத்துவத்தில் எழுத வேண்டுமென நினைத்து எழுதியதில்லை. ஆனால் சிலர் எனது கவிதைகளில் பின்நவீனத்துவப் பண்புகள் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர்.

கேள்வி:- சிறுகதைகளில் கிராமத்து மண்வாசனையை வெளிப்படுத்தும் வகையில் அமையும் பேச்சும் மொழியின் பயன்பாடு ஆரோக்கியமானதா? இதைப் பற்றிக் கூறுங்கள்.

பதில்: ஒரு நல்ல கதை தனக்கான ஒரு தனித்துவ மொழியினைக் கொண்டிருக்கும். உதாரணமாக, கிராமத்தில் பாமர மக்களுக்கிடையே நிகழ்கின்ற ஒரு கதை அதற்கான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் ஆங்கில மொழிச் சொற்கள் குறைந்ததாகவும் வருகின்ற ஆங்கிலச் சொற்களும் மாறுபட்ட உச்;சரிப்பைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும். மட்டுமன்றி மண்வாசனை நிறைந்த சொற்களையும் திரிபுபட்ட சொற்களையும் பெரிதும் கொண்டிருக்கும். 

அதேபோன்று நகர்ப் புறத்தில் அதுவும் அரச அலுவலகத்தில் உயரதிகாரிகளுக்கிடையில் நிகழும் ஒருகதை இவைகள் எல்லாவற்றிலுமிருந்து மாறுபட்ட ஒரு தேர்ந்த மொழியில் அமைந்திருக்கும். முன்னைய கதையை பின்னைய மொழிக்கும் பின்னைய மொழியை முன்னைய கதைக்கும் மாற்றிப் போட்டால் அந்தக் கதைகள் பெறுமதி இழந்துவிடும்.

எனவே, ஒரு கதைக்கு - கதை நிகழும் சூழலுக்கான பேச்சுமொழி அமைவது மிகவும் முக்கியமாகும். ஆனால் அப்பிரதேசத்தின் மொழியுடன் பரிச்சயமற்றவர்கள் அதனை வாசிக்கும் போது அக்கதை அவர்களுக்கு சிறு மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே திரிபுபட்ட சொற்களுக்கான விளக்கங்களை கதையின் இறுதியில் கொடுப்பதன் மூலம் அக்குறையினையும் நிவர்த்திக்க முடியும்.

கேள்வி:- 'வண்ணான் குறி' சிறுகதையில் அதிகமாக பிரதேசத்திற்குரிய மொழிகளை கையாண்டுள்ளீர்கள். இந்த சிறுகதைக்கு கிடைத்த வரவேற்பு குறித்துக் கூறுங்கள்.

பதில்: 'வண்ணான் குறி' கதை அது சொல்லுகிற செய்தியை தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால் அது ஒரு வர்ணனை சார்ந்த கதை. வண்ணார வட்டை என்ற அந்தக் கதையின் நிகழ்களம் மிகவும் அற்புதமானது. என்றும் மனதை விட்டும் அகலாத எழில் கொண்டது. இடம்பெயர்ந்திருந்த அந்த மக்கள் இப்போது மீள் குடியேறி கல்வீடுகளும், சுற்று மதில்களுமாக மாறிப்போய், மக்களுடைய தொழில் துறைகளும் பெரும்பாலும் மாறிப்போய்விட்ட நிலையில் - அந்த 'வண்ணார வட்டை'யும், அந்த மக்களின் மொழியும் ஓரளவேனும் எனது கதையில் வாழ்வது எனக்கு மகிழ்ச்சி.

'தினகரன்' பத்திரிகையில் 'வன்னான் குறி'' கதை முதன் முதலாக வெளிவந்தபோது கொழும்பிலிருக்கும் எனது பிரதேசத்துக் கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு 'உங்கள் கதை அனுபவம் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இருக்கிறது'' என்றார். மற்றும் இளைய அப்துல்லாவும், 'எங்கள் தேசம்' பத்திரிகை ஆசிரியர் அப்துல்லா அஸாம் போன்றவர்களும் பாராட்டியது நினைவிருக்கிறது.

கேள்வி:- உங்கள் ஓவிய முயற்சிகள் எவ்வாறு உள்ளன?

பதில்:  மந்த கதியிலேனும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கேள்வி:- உங்களது ஓவியங்களை அட்டைப்படமாக பலரது நூல் தொகுதிகளில் காணக் கிடைத்தது. இதுவரை எத்தனை நூல்களுக்கு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளீர்கள்?

பதில்: இன்னும் கணக்கிடவில்லை. சிலருக்கு முழுமையாக அட்டைப் படமாகவும் சிலருக்கு படங்களை மட்டும் வரைந்தும் கொடுத்திருக்கிறேன். சிலருக்கு நூல் தலைப்புக்களை எழுதிக் கொடுத்திருக்கிறேன். சிலருக்கு நூலின் உள் ஓவியங்களையும் வரைந்து கொடுத்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் சுமார் ஐம்பது நூல்கள் வரைதான் வரைந்திருப்பேன்.

கேள்வி:- ஓவியத்துறையில் நீங்கள் கொண்டு வரப்போகும் புது முயற்சிகள் குறித்துக் கூற முடியுமா?

பதில்: எனக்கு மரபு வழியிலும் கணினி முறையிலும் பரீட்சயம் இருப்பதால் இரு முறைகளிலும் எனது ஓவியங்களை உருவாக்கி வருகிறேன், கணினி; ஓவியத் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம் என்றால் அது மிகையல்ல.

நாம் 'ஸ்கிறீனிலோ' அல்லது தாளிலோ ஒரு கோட்டினைப் போட்டுவிட்டால் பின்னர் அதனை மாற்ற முடியாது அல்லது மாற்றுவதற்கு சிரமப்பட வேண்டும். ஆனால் கணினியில் அப்படியல்ல. அக்கோட்டினை நகர்த்துவதோ, வளைப்பதோ, இல்லாமல் ஆக்குவதோ மிகவும் எளிதாக இருப்பதும், வர்ணங்களைத் தேர்வு செயும்போதும் கணினிகளில் மிகவும் எளிதாக, தேவையான வர்ணத்தை பிரயோகித்துப் பார்க்க முடிவதும் மிகப் பெரிய வசதியாகும். படத்தினைப் பிரதி பண்ணுவதற்கான வாய்ப்பும் கணினியில் கிடைப்பதால் மிக எளிதாகவும் விரைவாகவும் ஓவியங்களை உருவாக்க முடிகிறது.

எதிர்வரும் காலங்களில் 'அனிமேசன்' துறைக்குள்ளும் நுழையவேண்டும் என்ற ஆவல் உள்ளது.
இதன் மூலம் அசையும் அல்லது நகரும் ஓவியங்களை உருவாக்க முடியும். அது இப்போது உள்ள 'அனிமேசன்' படங்களை விடவும் வேறுபட்டதாக அமையும்.

கேள்வி:- ஒரு கவிதை தொகுதிக்கு அல்லது சிறுகதை தொகுதிக்கு ஓவியம் வரைவதான அனுபவத்தை கூறமுடியுமா?

பதில்: சில நண்பர், நண்பியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் நூல் வெளியிட இருப்பதை தெரியப்படுத்தி நூலின் பெயர் விடயங்களையும் சொல்லி அட்டைப் படம் வரைந்து தரும்படி சொல்லி மின்னஞ்சல் முகவரியையும் தந்து விடுவார்கள். இரவிலே கண்விழிக்கின்ற எனது தொழில் அசௌகரியங்கள், ஏனைய வேலைப்பளுக்கள், சிரமங்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி கலைத்துவமாக ஓர் அட்டையை வடிவமைத்து எவ்வித கொடுப்பனவுகளையும் எதிர்பாராது அனுப்பிவைத்துக் காத்திருந்தால், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ இணையத்தில் கிடக்கும் ஏதாவது ஒரு படத்துடனும் கணினி எழுத்துடனும் வளவளப்பான அட்டையுடன் அந்த நூல் வெளிவந்திருப்பது எதேச்சையாய் தெரியவரும். என்றாலும் அந்த எழுத்தாளர்களைக் காணும் போது சிரித்த வண்ணம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

கேள்வி:- உங்களது கவிதை தொகுதிகள் வெளிவந்து நீண்ட இடைவெளியாகின்றது. மீண்டும் எப்போது உங்களது படைப்புகளை ஒரு தொகுப்பாக பார்க்க முடியும்?

பதில்: கவிதை, சிறுகதை முதற்கொண்டு நூல் உருவாக்குவதற்கான எத்தனையோ விடயதானங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் எமக்குள்ள வெளியீட்டுப் பிரச்சினைதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. எழுத்தாளர்களே வெளியீட்டாளராகவும் இருப்பதிலுள்ள சிக்கல் எழுத்தாளன் எழுத்தானாகவே இருந்து வெளியீடுசெய்தால் சொந்தப் பணத்தில் நூல்களை அச்சிட்டு முன்பக்கத்தில் கை எழுத்திட்டு வருவோர் போவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பதானால் சரி.

ஆனால், அதனையே பணம் பண்ணுகின்ற விடயமாக கையிலெடுத்துவிட்டால் அவன் வர்த்தகனாகி விடுகிறான். எழுத்தாளன் வர்த்தகனாகும் போது அவனது எழுத்து மலினப்பட்டுவிடுகிறது. அதற்காக இந்திய வெளியீட்டகங்களுக்குக் கொடுத்துவிட்டு எமக்கான பிரதிகளுக்கும் பணம் கொடுத்துப் பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பார்ப்போம், இலங்கையிலுள்ள எமக்குப் பொருத்தமான வெளியீட்டகம் அமையும் போது எனது அடுத்த நூல் வெளிவரும்.

கேள்வி:- ஒரு கவிஞனாக நீங்கள் இத்துறையில் எதிர் நோக்கிய மிகப்பெரிய சவால் எது?

பதில்: இப்படி ஒரு கேள்வியை கேட்டதற்காக நன்றி. எங்கள் பிரதேசத்தில் கவிஞனாய் இருப்பது ஒரு சவாலாகத்தான் இருந்தது.

தொன்னூறுகளில் அற்புத ராஜர் ஆசிரியராக இருந்தபோது எனது பல கவிதைகள் தினமுரசு பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் 1996இல் எனது 'குரைக்க ஒருநாய் வேண்டும்' கவிதை முதன்முதலாக 'தினமுரசு' பத்திரிகையில் வெளிவந்தது. பின்னர் இரண்டாயிரம் ஆண்டில் எனது கவிதைகளைத் தொகுத்து 'கடைசிச் சொட்டு உசிரில்' என்ற கவிதைத் தொகுதி வெளிவந்த போது அதிலும் இந்தக் கவிதை இடம்பெற்றிருந்தது.

எனது நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றபோது இந்தக் கவிதை சாதாரணமாகப் பேசப்பட்ட போதும் பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் 2002ஆம் ஆண்டளவில் எங்கள் ஊரில் வெளிவந்த 'கல்குடா டுடே' என்ற அநாமதேயப் பத்திரிகை அப்போதிருந்த ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரைச் சங்கடத்துக்குள்ளாக்கியது.  அந்தப் பத்திரிகையில் எனது 'குரைக்க ஒரு நாய் வேண்டும்' கவிதை எனது நூலின் பெயர் குறிப்பிட்டு நன்றியுடன் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதுவே பெரும் பிரச்சினையாகி 'கல்குடா டுடே' சூத்திரதாரிகளில் என்னையும் ஒருவராகச் சித்தரித்து கேவலமான வார்த்தைகளால் திட்டி துண்டுப் பிரசுரம் வெளியிட்டதோடு அமைச்சரின் ஆதரவாளர்களால் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. அந்த நிகழ்வு என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை என்றாலும் எனது தாய் - தந்தையரை அதிகம் பாதித்தது. அச்சமையத்தில் நான் ஊரில் இல்லாததால் தப்பித்துக் கொண்டேன்.

'நாய் என்றால் அது குரைக்க வேண்டும்
கடிப்பது இரண்டாம் பட்சமே
கடிக்காததும் நாய்தான் - ஆனால்
குரைக்காதது நாயாகாது...
கடிப்பது பாசிசம்
குரைப்பது ஜனநாயகம்...''

என்று தொடரும் அக்கவிதை.

அத்தோடு இன்னொரு சுவாரசியமும் இக்கவிதைக்கு உண்டு. எங்களூரில் உள்ள ஒரு பொறியியலாளரான நண்பர் இக்கவிதையைப் படித்துவிட்டு இதில் 'நாய் பற்றித்தானே எழுதியிருக்கு என்னத்துக்கு அமைச்சர் கோபிக்கவேண்டும்' என்றாராம்.

கேள்வி:- உங்களை கவர்ந்த ஓவியர் யார்?

பதில்: அவ்வப்போது என்னை ஈர்த்த பல ஓவியர்கள் இருக்கின்ற போதும் சமாதானத்தின் சின்னமாக அந்த வெண்புறாவை முதன் முதல் உருவகித்த நவீன ஓவியத்தின் தந்தையான 'பிக்காசோ'தான் என்றும் என்னைக் கவர்ந்த ஓவியர்.

நேர்காணல்: க.கோகிலவாணி
 


  Comments - 0

 • முஹம்மத் றிழா Thursday, 11 August 2011 10:23 PM

  இலத்திரனியல் ஓவியரின் பதில்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டியவை. கல்குடா தொகுதி கலைஞர்களின் ஊர் என்று சொல்லப்படுவதற்கு இவரின் வகிபங்கும் பிரதானமானதாகும். எஸ்.நளீம் தொடர்ந்தும் செயற்பட பிரார்த்திக்கின்றோம்.

  Reply : 0       0

  Nowfar alm Wednesday, 17 August 2011 12:51 PM

  தனது உழைப்பை புரிந்தது கொள்ளாத மனிதா்களுக்கு மத்தியில் வாழ்ந்த அனுபவம் எனக்கும் உண்டு. அது மிக வேதனையானது. ஆனாலும் மீண்டும் சிரித்துக் கொண்டு அவா்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் எஸ். நளீம் அவா்களைப் பார்த்து நான் பெறுமையடைகின்றேன். மிக அற்புதமான ஒரு நோ்காணல். நான் நேரடியாக உரையாட நினைத்த ஒருவரில் இவரும் ஒருவா். சில கேள்விகளுக்கு பதிலும் கிடைத்தன. நன்றிகள்.

  Reply : 0       0

  arafath aik Friday, 16 September 2011 09:59 PM

  அருமையான நேர்காணல்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .