2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் தீர்வில்லா மக்களை எண்ணி மனம் வருந்துகிறேன்: ஷர்தார்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 04 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


போர் முடிவுற்று மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடியதான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படாமையானது மனவருத்தம் தருவதாக குறிப்பிடுகின்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷர்தார் ஜமீல்.

சுவர்ண ஒலி வானொலி மூலம் இலங்கை வானொலி வரலாற்றில் ஓர் இளமை புரட்சியை ஏற்படுத்தியவரும், தற்போது பிரான்ஸை தலைமையகமாக கொண்டியங்கும் ஆஸ்க் ஊடக வலையமைப்பின் பிரதம நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றும் ஷர்தார் ஜமீலின் நிர்வாகத்தின் கீழ் இப்பொழுது அலை எப்.எம். எனும் நாடுதழுவிய வானொலிச்சேவையும், யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்திலும், ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஒளிபரப்பாகும் “டான் யாழ் ஒளி” தொலைக்காட்சி சேவையும் வருகின்றது.

டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பார்வைகள்” நிகழ்ச்சி மூலம் புலம் பெயர் மக்களிடம் பிரபலமானார் ஷர்தார், போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை தாய் நாட்டிலிருந்து ஒளிபரப்பான ஒரே ஒரு நேரடி கருத்துப்பறிமாறல் நிகழ்ச்சியாக அது இருந்தமையால் பார்வைகள் நிகழ்ச்சியானது புலம்பெயர் நாடுகளில் விரும்பிப்பார்க்கப்பட்டது. ஷர்தாரின் புரட்சிகரமான சமகால அரசியல் கருத்துக்கள் அவருக்கு பல ரசிகர்களை உருவாக்கியதோடு பல காட்டமான விமர்சனங்களையும் பெற்றுத்தர தவறவில்லை.

ஷர்தார் ஜமீலினை தமிழ்மிரர் கலைஞர்கள் நேர்காணலுக்காக சந்தித்தபோது அவர் பகிர்ந்து கொண்டவை…


கேள்வி: வானொலி ஒலிபரப்புத்துறை, தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொகுப்பு. இவை இரண்டில் எது உங்களுக்கு விருப்பமானது? உங்களுக்கான அறிமுகத்தை எது பெற்றுத்தந்தது என்று கருதுகின்றீர்கள்?

பதில் : இலங்கையில் நான் ஒரு வானொலி அறிவிப்பாளராக அறியப்பட்டாலும் புலம்பெயர் நாடுகளில் நான் ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளராகவே அறியப்படுகின்றேன். எனது ஊடக வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நான் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக சில வருடங்கள் பணியாற்றிய போதும் சூரியன் மற்றும் சுவர்ணஒலி வானொலிகள் எனக்கு ஒரு பாரிய அறிமுகத்தை தாய்நாட்டில் ஏற்படுத்தித்தந்தது. அதுபோல போர்க்கால டான் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சிகள் என்னை புலம்பெயர் நாடுகளில் ஒரு பிரபலமான அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகப்படுத்தியது. எனவே இரண்டையும் நான் சமமாகவே பார்க்கின்றேன். வானொலி மூலம் இளைய சமூகத்தினரையும் டான் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சிகள் மூலம் மூத்த வயதானவர்களையும் கவரக்கூடியதாக இருந்தமை எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. 75 வயது முதல் 15 வயது வரை எனக்கு ரசிகர்கள் இருப்பதில் மகிழ்ச்சியே, அதற்கு வானொலி, தொலைக்காட்சி இரண்டுமே காரணமாயின.


கேள்வி : இரண்டு துறைகளில் சவால் மிகுந்ததாக எதை பார்க்கின்றீர்கள்?

பதில்: இரண்டுக்கும் இரண்டு முகங்கள் உண்டு. ஆனால் நம் நாட்டை பொறுத்தவரை, அரசியல் நிகழ்ச்சிகள் செய்வது மிகவும் சவாலான விடயம். அதுவும் தமிழ் மக்களின் அரசியல் என்பது கத்திமேல் நடப்பதற்கு சமமானது. ஒரு வித்தைக்காரனைப்போல நான்கு வருடங்களாக நடந்துகொண்டுதான் இருக்கின்றேன். அது தந்த அனுபவங்கள் பல அவற்றை பகிர்ந்துகொள்ள இந்த ஒரு நேர்காணல் போதாது.


கேள்வி : ஓரிரண்டையாவது பகிர்ந்துகொள்ளலாமே?

பதில்: 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் அறிவிக்கப்பட்ட வேளை அதை பலர் நம்பவில்லை. இன்றும் பலர் அந்த செய்தியை நம்பாதிருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், கசப்பாக இருப்பினும் உண்மையை உரக்கச்சொல்வது ஓர் ஊடகவியலாளனின் கடமையல்லவா? அன்றைய பார்வைகள் நிகழ்ச்சியில் அவரது மரணம் பற்றியே பேசியாக வேண்டும், ஏனெனில் பார்வைகள் நிகழ்ச்சியானது அந்த வாரத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு சம்பந்தமான கருத்துப்பறிமாறல் நிகழ்ச்சியாகும். நாம் பேசாவிட்டாலும் நேரலையில் மக்கள் அது சம்பந்தமாக வினவுவார்கள். எனக்கு அவரது மரணத்தில் சந்தேகமில்லாமல் இருந்தபோதும், மக்களிடம் எனது தனிப்பட்ட கருத்தை திணிக்க விரும்பாமையால், அவரது சடலத்தை அடையாளம் காட்டிய பிரதியமைச்சர் “கருணா அம்மான்” அவர்களை கஷ்டப்பட்டு தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக உறுதிப்படுத்திக்கொண்டேன். அந்நாட்களில் பிரபாகரனது பூதவுடலை அடையாளம் காட்டிய மற்றொருவரான விடுதலை புலிகளின் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டரை நான் அறிந்திருக்கவில்லை. அவரது தொடர்புகளும் என்னிடம் இருக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியில் நான் முன்வைத்த கருத்துக்களை அப்போது புலம் பெயர் மக்கள் நம்புவதாக இல்லை. பலர் என்னை நேரலையிலேயே காட்டமாக விமர்சித்தார்கள்.

ஒருவர் என்னிடம் அந்த நிகழ்ச்சியில் கேட்ட கேள்வி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது. பிரபாகரன் உயிருடன் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று வினவினார். நான் கூறும் செய்தியில் எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தமையால் நான் அவரிடம் ஒரு சவால்விட்டேன், எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வந்தால் நான் ஓர் ஊடகவியலாளனாக கடமையாற்றமாட்டேன். வேறு ஒரு தொழிலை செய்யப் போய்விடுவேன் என்பதுதான் அது! மூன்றாண்டுகள் கழிந்துவிட்டது. நான் இன்னும் ஓர் ஊடகவியலாளராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு துணிச்சலாக நான் அரசியல் நிகழ்ச்சியில் பேசுவதானது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அதை அவர்கள் நேரடியாக என்னை சந்திக்கும்போது கூறியிருக்கின்றார்கள். இன்றுவரை மாதத்தில் ஓரிருவராவது என்னை புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து நேரடியாக சந்தித்துவிட்டு செல்வது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.


கேள்வி : இவ்வாறான அரசியல் நிகழ்ச்சிகள் செய்வதால் உங்களுக்கு பிரச்சினைகள் வரும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பதில் : உண்மையில் இலங்கை போன்றதொரு நாட்டில் இவ்வாறான கொதிநிலை அரசியலை பேசுவது அவ்வளவு நல்லதில்லை தான். ஆனால், என்ன செய்வது தொழில் என்றாகிவிட்ட பிறகு தொழில் தர்மம் என்று ஒன்றிருக்கின்றது அல்லவா? எனது எல்லைகள் எதுவென்று எனக்குத்தெரியும். சில நேரங்களில் அந்த எல்லைகளுக்குள் பேசவேண்டியதை நினைத்து இந்த தொழிலையே விட்டுவிடலாமா என்று கூட எண்ணியதுண்டு. ஆனால் நம்மால் முடிந்தவரை மக்களுக்கு உண்மையான செய்திகளை கொண்டு சேர்க்கவேண்டுமென்ற அவாவும் இத்தொழில் மீதான காதலுமே என்னை தொடர்ந்து இத்தொழிலை செய்ய ஊக்கப்படுத்துகின்றது.

விடுதலைப்புலிகள் உக்கிரமாக போர் நடத்திய காலத்தில் அவர்கள் சிறுவர் போராளிகளை வலுக்கட்டாயமாக போரில் இணைத்தமை, போர்ச் சூழலிலிருந்து மக்களை விடுவிக்காமை போன்ற செயற்பாடுகளை தைரியமாக எதிர்த்திருக்கின்றேன். புலிகள் இல்லாத சூழ்நிலையில் இன்று புலிகளை பலர் விமர்சிக்கலாம், ஆனால் புலிகள் வலுவாக இருந்த காலத்திலேயே அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்த ஊடகவியலாளர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமைதான்.

விடுதலை புலிகளை விமர்சித்தவன் என்பதால் என்னை பலரும் அரசு சார்பானவன் என்று முத்திரை குத்தி பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் இப்போது போர் முடிவுற்று மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடியதான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படாமை தொடர்பாக ஆளும் தரப்பு அரசியல் வாதிகளை நான் நடத்தும் “நேருக்கு நேர்” எனும் அரசியல்வாதிகளுடனான நேர்காணல் நிகழ்ச்சியில் தொடர்ந்தும் வலியுறுத்தி கேட்டு வருகிறேன். அதனாலேயோ என்னவோ சில ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் இப்போது எனது நிகழ்ச்சியையே தவிர்க்க நினைக்கின்றார்கள். அவர்களிடம் எனது கேள்விகளுக்கான சரியான பதில் இல்லை போலும்.

நாம் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்றிருப்பதை விட அநியாயம் நடக்கும் மக்களின் பக்கம் நிற்கவே விரும்புகின்றேன். அதுவே ஊடகவியலாளர்கள் நிற்க வேண்டிய பக்கம் என்று நான் நம்புகின்றேன். துரதிர்ஷ்டவசமாக எமது நாட்டில் எமது கைகள் மட்டுமல்லாமல் கால்களும் கட்டப்பட்டிருந்தாலும் என்னால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவே செய்கின்றேன்.


கேள்வி : சமகால அரசியலை ஓர் ஊடகவியலாளனாக எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : என்னை பொறுத்தவரை ஒரு நிலையான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட சரியான தருணமாக சமகாலத்தை பார்க்கின்றேன். ஆனால் தூர நோக்கற்ற சிங்கள, ஏன் தமிழ் அரசியல் தலைமைகளும் தங்கள் எதிர்கால நாடாளுமன்ற கதிரைகளை காப்பாற்றிக்கொள்ளும் “இனவாத” அரசியல் நடவடிக்கைகளையே முன் வைப்பதால் தமிழர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய ஒரு நிலையான அரசியல் தீர்வானது தள்ளிப்போய்க்கொண்டே இருப்பது விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியது.
தங்களது இன வாக்கு வங்கியை குறிவைத்து ஆளும் அரசியல் தலைமைகளும், தமிழ் தேசிய உணர்வு வாக்கு வங்கிகளை குறிவைத்து தமிழ் அரசியல் தலைமகளும் செயல்படுவதானது மக்களை மற்றுமொரு முள்ளிவாய்க்காலுக்கு இட்டுச்செல்லும் முயற்சியாகவே நான் பார்க்கின்றேன். இது பாரதூரமான விளைவுகளை இப்போதைக்கு நாட்டுக்கு ஏற்படுத்தாவிட்டாலும் எமது எதிர்கால சந்ததியை மீண்டும் போர் சகதிக்குள் தள்ளிவிடுமோ என்று அச்சப்படுகின்றேன்.

இந்த நிலையில் மக்களும் இந்த அரசியல்வாதிகளது மாய வலையில் சிக்கியிருப்பதே வேதனையளிக்கின்றது.

சிங்கள பௌத்தர்கள் வெற்றிக்களிப்பூட்டப்பட்டு சக இன மக்களை தங்கள் நாட்டு அடிமைகள் போல நடத்த சிங்கள அரசியல்வாதிகளும், தமிழர்கள் தோல்வியுற்றவர்கள் என்ற மன நிலையை வளர்த்து தோல்விக்கு காரணமான சிங்கள தலைமைகளை பழிவாங்கும் மனநிலையில் அவர்களை வைத்து அவர்களது வாக்கு வங்கிகளை தம் வசப்படுத்திக்கொள்ள தமிழ் அரசியல்வாதிகளும் பார்க்கின்றார்கள். இரு தரப்பினருமே நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றியோ அன்றி கல்வி, தொழில் நுட்பம், போன்ற ஆக்கபூர்வமான விடயதானங்களில் கவனம் செலுத்தாது தங்கள் சுயலாப அரசியலிலேயே ஈடுபடுகின்றார்கள்.

நாட்டில் தட்டிக்கேற்கும் வலிமையுடன் எதிர்க்கட்சியும் இல்லாமல் இருப்பது இவர்களுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. எதிர்க்கட்சியும் தங்களுக்குள் பதவிச்சண்டை போடுவதிலேயே குறியாகவிருக்கின்றார்கள். இக்கால கட்டத்தில் ஊடகவியலாளர்களது பங்கு அளப்பரியது. ஆனால் அவர்களாலும் முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.


கேள்வி : இவ்வாறான ஒரு சூழலில் நீங்கள் நிர்வாகிக்கும் தொலைக்காட்சியானது அரசு சார்பான கருத்துக்களை மட்டுமே முன் வைப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றதே? அரச அனுசரணையுடனேயே புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் இதை நடத்துவதாக கூறப்படுகின்றதே?

பதில் : உங்கள் கேள்விக்கு நன்றி. ஏனென்றால் இந்த சந்தேகம் பலரால் முன்வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது இனவாத அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள் மக்களை நாங்கள் விழிப்பூட்டுவதை விரும்பாமல் எம்மீது சேறு பூச நினைக்கின்றார்கள். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சந்தர்ப்பமாக இதை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

முதலில் தயா மாஸ்டர் விடயத்துக்கு வருவோம். அவர் எமது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஒரு சக ஊழியரே அன்றி அவருக்கும் டான் தொலைக்காட்சிக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. கடந்த காலங்களில் ஓர் ஊடக செயற்பாட்டாளராக செயல்பட்ட அவரால் ஏன் ஒரு செய்தி ஆசிரியராக செயல்பட முடியாது? எமது ஆஸ்க் குழுமத்தின் ஒரே உரிமையாளராக இருப்பவர் ஈழ நாடு பத்திரிகையின் முன்னாள் உப ஆசிரியராக பணியாற்றியவரும், காவலூர் ஜெகநாதன் என்றழைக்கப்பட்ட பிரபல எழுத்தாளரின் உடன் பிறந்த சகோதரனாகவும் இருக்கும் குகநாதன் மட்டுமே. தயா மாஸ்டர் நடத்தும் ஊடகம் என்று பரப்புரை விடுவதன் மூலமே இவர்களது கபடம் வெளிப்படுகின்றது அல்லவா? அது உண்மையில் ஒரு வடி கட்டிய பொய்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தது எமது தொலைக்காட்சி மட்டுமே என்பதில் நாம் இன்னும் பெருமை கொள்கின்றோம்., ஆனால் அதே போர் முடிவுற்றதன் பின்னரான விடுதலை புலிகளின் புனர்வாழ்வு, சிறைக்கைதிகள் விடுதலை, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம் போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததும் எமது தொலைக்காட்சிதான் என்பதை சிலர் வசதியாக மறந்துவிடுவது வேடிக்கையாக இருக்கின்றது. இன்றும் மற்றும் ஒரு போரை விரும்புபவர்களும் சமாதானத்தை விரும்பாது யுத்தத்தை அன்றாட பிழைப்பாக நடத்த விரும்புபவர்களும் எமது தொலைக்காட்சி மீது பல விமர்சனங்களை வைக்க தவறுவது இல்லை. இவ்வாறான பரப்புரைகளை நம்புபவர்கள் உண்மையில் எமது தொலைக்காட்சியை பார்க்காதவர்களேயாவார்கள். எமது தொலைக்காட்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படும் பட்சத்தில் எள்ளி நகையாடவே செய்வார்கள்.

புனர்வாழ்வளிக்கப்பட்டுக்கொண்டிருந்த முன்னாள் போராளிகளை முதலில் சந்தித்த தமிழ் ஊடகவியலாளன் நானாகத்தான் இருப்பேன். அவர்களை சந்தித்தது மட்டுமல்லாமல் அவர்களுடனேயே ஒரு நாளை கழித்து அவர்களது சுக துக்கங்களை வெளிக்கொணர்ந்தோம். அதுபோல போர்க்கால இடைத்தங்கள் முகாம்களிலும் நாம் பல நிகழ்ச்சிகளை செய்துள்ளோம். உண்மையில் போரின் பின்னரான உண்மைகள் தமிழ் மக்கள் எதிர்பார்த்ததை போல இருக்கவில்லை. அவை கசப்பாகவே இருந்தன, போரின் அவலங்களும் போராட்டத்தின் மறுபக்கத்தையும் எமது தொலைக்காட்சி வெளிச்சம் போட்டு காட்டியதை சிலரால் தங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களே நமக்கு அரசு ஆதரவு முத்திரை குத்த நினைக்கின்றார்கள்.


கேள்வி : அப்படியானால் அரசு செய்யும் அனைத்து விடயங்களையும் உங்களால் வெளிக்கொணர முடியுமா?

பதில்: இதற்கான பதிலை நான் முன்னரே கூறிவிட்டேன். ஒரு சக ஊடகவியலாளராக எமது எல்லைகள் எதுவென்பதை நாம் அனைவருமே உணர்ந்திருக்கின்றோம். அவற்றுக்குள் என்ன செய்ய முடியுமோ அவற்றை தாராளமாக செய்வோம்.


  Comments - 0

  • ranjan Wednesday, 23 January 2013 06:41 AM

    நீண்ட நாட்களுக்கு பிறகு புலம்பெயர் தொலைக்காட்சிகளில் வலம் வந்த நடுநிலைமை அறிவிப்பாளர் ஷர்தார்......வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X