2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஜேர்மனியின் ஹிட்லரும், இலங்கையின் ஹிட்லர்களும்

Editorial   / 2022 நவம்பர் 29 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் ஹிட்லரும், இலங்கையின் ஹிட்லர்களும்

இலங்கையின் பாராளுமன்றத்திலும், பொதுப் பேச்சுகளின் போதும் ஏளனம் செய்து, அல்லது பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவது வழமை. அண்மையில் அவ்வாறு பேசு பொருளாக அமைந்த ஒரு நபர் அடோல்வ் ஹிட்லர். பிற நாடுகளில் ஹிட்லரின் நாமத்தைப் பயன்படுத்துவது, சாதாரணமாக எதிர்த் தரப்பை இழிவுபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

இலங்கையில் அவ்வாறில்லாமல், ஹிட்லரை முன்னுதாரணமாக காண்பித்து அல்லது அச்சுறுத்தும் வகையில் உரைகள் இடம்பெறுகின்றன. பொதுவில் ஜனநாயகத்தை விரும்பும் எவரும் ஹிட்லர் எனும் நாமத்தை சற்றேனும் விரும்பமாட்டார்கள்.

இவ்வாறு ஹிட்லர் நாமத்தை பயன்படுத்திய இலங்கையின் அரசியல் தலைமைகளில் ஒருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் திகழ்கின்றார். அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு படைகளை பயன்படுத்தி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், அவசர காலச் சட்டமும் பிரயோகிக்கப்படும். பொலிஸ் அனுமதியைப் பெற்று, வீதிகளில் ஏனைய போக்குவரத்துக்கு பாதிப்பின்றி, நான் ஹிட்லரைப் போல ஆட்சி செய்கின்றேன் என கோஷம் எழுப்பலாம் எனும் தொனியில் தமது வரவு வெலவுத் திட்ட உரையில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஒரு ஹிட்லரைப் போன்றே பார்க்கப்பட்டார். குறிப்பாக அவரின் ஆட்சியின் போது, போக்குவரத்து அமைச்சராக திகழ்ந்த திலும் அமுனுகம, 6.9 மில்லியன் மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தது, அவரை ஒரு ஹிட்லராக திகழச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் என்றிருந்தார்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வென்தருவே உபாலி, கோட்டபாய ராஜபக்சவின் 69 ஆவது பிறந்த தினத்தின் போது, தேவையெனில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இராணுவ ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்றிருந்தார். ஹிட்லரின் எழுச்சியுடன், ஜேர்மனி எந்தளவுக்கு பின்தங்கிய நிலைக்குச் சென்றது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

கடந்த கால இலங்கையின் தலைவர்களைப் போலன்றி, 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் மோசமான ஆட்சியாளராக கருதப்படும் ஹிட்லரின் வரலாற்றை தற்போதைய ஜனாதிபதி நன்கறிவார். அவ்வாறான நிலையில், நாட்டின் தலைவர் இவ்வாறான பொறுப்பற்ற வகையில் கருத்துரைப்பது உண்மையில் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

அத்துடன் போராட்டங்களில் ஈடுபடுவோரை “ஹிட்லரைப் போன்று செயலாற்றுகின்றேன்” எனத் தெரிவிப்பதும், எவ்வாறு ஹிட்லரின் ஆட்சி நிறைவடைந்தது என்பதை அவருக்கு மீண்டும் உணர்த்த வேண்டும். அன்றைய ஹிட்லரினால் ஜேர்மனி நாசம் செய்யப்பட்டு, பொருளாதாரம் சீரழிந்து, நாட்டை சின்னாபின்னமாகி, இறுதியில் தாமும் தற்கொலை செய்து கொண்டார். அன்றைய ஹிட்லரைப் போலவே, இனிவரும் காலங்களிலும் தம்மை ஹிட்லரைப் போல சித்தரிக்க முனைவோருக்கும் நேரும் என்பதில் சந்தேகங்களில்லை.   (29.11.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .