2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

நான்காவது தூணின் தலையில் தட்டக்கூடாது

Editorial   / 2021 மே 05 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்காவது தூணின் சுதந்திரத்தின் தலையில் தட்டக்கூடாது

தனக்கு மேலிருக்கும் மூன்று தூண்களின் செயற்பாடுகளையும் கழுகுக் கண்கொண்டு பார்த்து, மக்களுக்கு அறிவித்து, நேரடியான உறவுப்பாலமாய் இருப்பதுதான் ஊடகமாகும். இதைத்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பர்.

அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றுக்கு அடுத்ததாக ஊடகம் இருக்கிறது. ஊடகங்களால், ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும். தவறான பாதையில், கண்மூடித்தனமாகப் பயணிக்கும் அரசாங்கத்தை நல்வழிக்குள் இழுத்துவிடவும் ஊடகத்துக்கு முடியும்.

உலகளவிலான பல நாடுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களுக்கு, ஊடகங்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளன. ஊழல், மோசடிகள், சுற்றுச்சூழல் விரோத, ஜனநாயக  விரோத செயல்களில் ஈடுபட்ட அரசாங்கங்களின் போலி முகத்திரையை மக்கள் அரங்கில் கிழித்தெறிந்து, அந்த அரசாங்கங்களை வீட்டுக்கு அனுப்பிய பெருமை ஊடகங்களைச் சாரும்.

அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கு அப்பால், சமூக ஊடகங்களும், பல நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கும் அத்துமீறிய அட்டூழியங்களை, ஏதோவொரு வகையில் அம்பலப்படுத்தப்படுகின்றன.  

ஊடகத்துக்கு இருக்கும் பலம், வெறெதற்கும் இல்லையென்பதை  ஊடகத் துறைசார்ந்தவர்களும், ஏனையோரும் புரிந்துவைத்து கொள்ளவேண்டும். ‘ஒரு பேனையால் முடியாதது ஒன்றுமில்லை’ என்பர். அவ்வாறான சக்திமிக்க ஊடகத்துக்கான உலக ஊடக சுதந்திர நாள், மே மாதம் மூன்றாம் திகதியாகும்.

உலக ஊடக சுதந்திர நாள், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனத்தில்’ இடம்பெற்றிருக்கும் பேச்சு உரிமைக்கான சுதந்திரத்தை, அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையால், சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வொரு வருடமும் மே மாதம் மூன்றாம் திகதி, உலக ஊடக சுதந்திர தினமாகும்.  2021ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுந்திர குறிகாட்டியில், 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில், 127ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இலங்கை கொஞ்சமேனும் முன்,பின் நகராமல் அதே இடத்தில் இருக்கிறது.

ஊடகங்களின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். இதற்கு ஊடக சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த, பத்திரிகைகளை சுதந்திரமாக வெளியிட, கிடைத்த ஓர் உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களும், மே.3 நினைவுகூரப்படுவர்.

யுனெஸ்கோவின் ‘ஃகிலெர்மோ கானோ’ உலக ஊடக சுதந்திர விருதை, யுனெஸ்கோ நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் வழங்கிக் கௌரவிக்கின்றது. கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசாவின் நினைவாகவே இவ்விருது, இக்கட்டான சூழ்நிலைகளில் வெற்றிகரமாகப் பணியாற்றிய ஊடகவியலாளருக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. 

அவரது அலுவலகம் முன்பாக, 1986 டிசெம்பர் 17 இல் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலைக்கு பின்பே, ஊடக சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது. ஊடக சுதந்திரம் பல நாடுகளில் பேணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. 

நான்காவது தூணின் சுதந்திரத்தில் கையை வைத்தால், ஜனநாயகத்தை எதிர்பார்க்கமுடியாது. ஆகையால், நான்காவது தூணின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஆட்சியாளர்களின் தார்மிக கடமையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .