Editorial / 2022 ஜூலை 05 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வரும் போதுதான் தெரியும்
வீட்டில் ஓரளவுக்கு விளங்கிக்கொள்ளக் கூடிய சகோதர, சகோதரிகள் இருப்பார்களாயின், கேலி கிண்டலுக்கு குறைவே இருக்காது. கடுமையான தலைவலி அல்லது பல்வலி ஒருவருக்கு ஏற்படுமாயின், “என்னமோ தலைவலியாம்; தலைவலி இன்றேல் பல்வலியாம் பல்வலி” என, நோய்வாய்பட்டிருப்பவரை பார்த்து மற்றையவர் கிண்டல் செய்வது வழமை. அதுவே மாறியும் நடக்கும்.
ஆக, வருத்தமெல்லாம் தனக்கு வந்தால்மட்டும்தான் புரியும். அதனால்தான், ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வரும்போதுதான் தெரியும்’ எனக் கூறியுள்ளனர்.
இந்தக் கூற்றை நியாயப்படுத்துவதாய் தென்னிலங்கையில் பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அது சர்வசாதாரணமாகும்.
குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இராணுவ அதிகாரி ஒருவரால் பொதுமகன் ஒருவர் எட்டி உதைக்கப்பட்ட காட்சி அடங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஒருவர், மற்றொருவர் மீது தாக்குதல் நடத்துவதே குற்றமாகும். அதிலும், இருவர் பிடித்திருக்க, இராணுவ அதிகாரியொருவர் எட்டி உதைக்கின்றார்.
எரிபொருள் நெருக்கடிக்குள் இது முதலாவது சம்பவமல்ல. வறக்காப்பொலயில், பொலிஸ் அதிகாரியொருவரை இராணுவ சிப்பாயொருவர் முகத்தில் குத்திய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
முதலாவது சம்பவத்துக்கு உரிய முறையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், எட்டி உதைக்கும் சம்பவத்தை எதிர்பார்த்திருக்கவே முடியாது. ஓரளவுக்கேனும் ஒழுக்கத்துடன் நடந்துகொண்டிருப்பர். இல்லையேல் அதற்கான பயம் ஏற்பட்டிருக்கும். ஆக, உடனடியாகத் தண்டனை வழங்கப்படாமையும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகும்.
தங்களுடைய உறவுகளுக்கு எதிரான உரிமை மீறல்களுக்கு நியாயம் கேட்டு, தமிழர்கள் குரல்கொடுத்தபோது, ‘கழுத்தை அறுப்பேன்’ என சைகைகளில் காண்பித்த லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ, நாடு திரும்பியதன் பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். அவருடைய சித்திரங்களை சுவர்களில் காணலாம்.
ஆனால், எட்டி உதைத்த இராணுவ அதிகாரிக்கு எதிரான எதிர்ப்புகள் தென்னிலங்கையில் வலுப்பெற்றுள்ளன. ஆக, தங்களுடைய இனத்துக்கு வரும்போதுதான் அதன் வலியும் வேதனையும் புரிகின்றது.
பாதுகாப்பு கடமைகளில் இருப்போரே, ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சிவிலியன்களுக்கு எதிராகத் திரும்புவதற்கு வெகு காலம் எடுக்காது.
ஆக, எந்தவோர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம், பாதிக்கப்பட்டவர் தரப்புக்காக உரிமை குரல் கொடுக்கவேண்டும்.
‘கழுத்தை அறுப்பேன்’ என சைகை காட்டியவரை புகழ்பாடியவர்கள், எட்டி உதைத்த இராணுவ அதிகாரியை நிந்திப்பது, பாதிக்கப்பட்ட தரப்பினர், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமேயாகும்.
இரண்டாம்பட்சமாக பார்க்கும் இந்த நிலைமை இல்லாதொழிக்கப்படும் வரையிலும், உரிமைகள் மீறப்படுவதை தடுக்கமுடியாது என்பதே அனுபவ உண்மையாகும். (05.07.2022)
3 minute ago
5 minute ago
12 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
12 minute ago
17 minute ago