Editorial / 2021 ஜூன் 21 , மு.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரிரு பிரிவினருக்கு மட்டுமே அமலான ‘முழங்காலிடல்’ சட்டம்
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, 31 நாள்கள் நிறைவடைந்த நிலையில், முழுநாடும் சில வரையறைக்குள் இன்றுகாலை நான்கு மணியளவில் விடுவிக்கப்படுகின்றது. எப்பொழுது விடியுமென்ற எதிர்பார்ப்பில், பலரும் நித்திரைக்குச் சென்றிருந்தனர்.
இந்தப் பயணக்கட்டுப்பாடுகள் அமலிலிருந்த நாள்களில், கட்டுப்பாடுகளை மீறினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். இன்னும், சிலர் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பலருடைய வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராகச் சட்டம், சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது.
ஏககாலத்தில், ‘அத்தியாவசிய சேவைகள்’ என்று அச்சடிக்கப்பட்ட கடதாசியை, வாகனத்தின் முன்கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு, அங்குமிங்கும் சுற்றித் திரிந்த வாகனங்களையும் பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டிருந்தனர். கொழும்பு, உள்ளிட்ட சில பிரதான நகரங்களில், வாகனப் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டிருந்தன.
இவை தொடர்பிலான தகவல்களும் புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் பதிவாகியிருந்தன. ஆக, நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடு என்றால் என்ன? எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு, ‘கட்டுப்பாடுகள்’ எனச் சொல்லப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் அமைந்திருந்தன.
ஆனால், மட்டக்களப்பு, ஏறாவூரில் பயணக்கட்டுப்பாடுகளை மீறினர் என்ற குற்றச்சாட்டில், சிலரைப் பிடித்த இராணுவத்தினர், அவர்களை வீதியோரங்களில் முழங்காலிடச் செய்திருந்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்பதைக் கேள்விக்கு உட்படுத்திவிட்டது.
அப்பாவி மக்களின் மீது, காட்டுமிராண்டித்தனமாகத் திணிக்கப்பட்ட, எழுதப்படாத சட்டங்களைக் கையில் எடுப்பதற்கு, இராணுவத்தினருக்கு சட்ட அதிகாரங்களை வழங்கியது யார்? அவர்களே, இச்சம்பவத்துக்குப் பொறுப்பாளிகள் ஆவர்.
அங்கு கடமையிலிருந்த படையினர், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என, இராணுவத் தரப்பால் ஊடக அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனூடாக, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட்டு விட்டதென்றால் அது பொய்.
சிவில் நிர்வாகத்துக்குள் நுழைக்கப்படும் இராணுவத்தலைகளின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஜனநாயக நாடொன்றில், இராணுவத்தினரை வகைதொகையின்றி சிவில் நிர்வாகத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வது எந்தவகையிலும் நியாயமற்ற செயலாகும்.
பயணக்கட்டுப்பாட்டிலேயே இவ்வாறான அட்டூழியங்கள் அரகேற்றப்பட்டிருந்தால், யுத்த காலத்தில் எவ்வாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கும் என, இராணுவத்துக்கு எதிராகக் கைகளை நீட்டுவது அவ்வளவுக்கு கடினமான காரியமாக அமையாது.
தங்களுடைய பொறுப்புகள், கடமைகள் என்ன என்பது தொடர்பில், ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டாலே, தேவையில்லாத பிரச்சினைகள் தலைதூக்குவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஒழுக்கம், கட்டுக்கோப்புகள் போன்றவற்றைக் கற்பித்துக்கொடுக்க வேண்டியது, அந்தந்தப் பிரிவினருக்கு உரியதாகும்.
இராணுவத்தினர் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு இராணுவச் சட்டங்கள் இருக்கின்றன. இவ்வாறான நிலையில், நீதிமன்றங்களைத் தவிர வேறெந்தத் தரப்பினருக்கும், சட்டத்தைக் கையிலெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வலியுறுத்துகின்றோம்.(21.06.2021)

6 minute ago
11 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
19 minute ago
26 minute ago