2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இறுதி அஸ்திரம் பயங்கரமானது; ஆனால், தவிர்க்கமுடியாது

Editorial   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதி அஸ்திரம் பயங்கரமானது; ஆனால், தவிர்க்கமுடியாது

பயணக்கட்டுப்பாடுகளை விதியுங்கள்; மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துங்கள்; இல்லையேல், கொரோனா மரணங்களையும் தொற்றாளர்களின் ஏறுமுகத்தையும் கட்டுப்படுத்தவே முடியாதென சுகாதார தரப்பினரும் நிபுணர்களும் வலியுறுத்தும் போதெல்லாம், ‘செவிடன் காதில் ஊதிய சங்கொலி’யைப் போன்றிருந்த அரசாங்கம், இறுதி அஸ்திரத்தைக் கையில் எடுக்கவுள்ளதாக பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

நாட்டின் பொருளாதாரம் மீது கரிசனையைக் கொண்டே, சாதாரண இயக்கத்துக்கு அரசாங்கம் வழிசமைத்துக் கொடுத்திருந்தது. எனினும், பல சந்தர்ப்பங்களில் அவை, தவறானவற்றுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தன; பயன்படுத்தவும் படுகின்றன. ஆகையால், இறுதி அஸ்திரத்தை எடுப்பதற்குச் சிந்தித்தது, அரசாங்கத்தின் தவறல்ல; சிந்திக்க தூண்டியதே தவறு.

பயணக்கட்டுப்பாடுகள், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் ஊடாக, ஒரளவுக்கேனும் தலையை வெளியில் காட்டமுடிந்தது. ஆனால், ஊரடங்குச் சட்டமொன்று அமல்படுத்தப்படுமாயின் படையினரைத் தவிர, சகலரும் தலையையே காட்டமுடியாது.

ஓரளவுக்கேனும் ஜீவியம் நடத்திக் கொண்டிருந்த பலரும் மீளமுடக்கத்துக்குச் செல்லவேண்டிய இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக விரலை நீட்டுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்களே பொறுப்பாளிகளாவர்.

இரண்டாவது முடக்கத்துக்குப் பின்னர், பொருளாதார நெருக்கடி தலைதூக்கி ஆடியது. நாட்டை முடக்கியே வைத்திருந்தால், தலையையே தூக்கமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டுவிடுமென்பதை முன்னரே அறிந்துகொண்ட அரசாங்கம், கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தியது.

இறுதியில், அரச ஊழியர்கள் அனைவரையும் பணிக்கும் அழைத்தது. ஆனால், டெல்டா பிறழ்வின் தாக்கமும் மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றமையால், மீண்டும் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன. இறுதியில், இறுதி அஸ்திரத்தை கையிலெடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்குள் நாடு சென்றுவிட்டது.

நாட்டை இனிமேலும் முழுமையாக முடக்குவதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லையெனத் தெரிவித்துள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், இதன் தாக்கத்தை இன்னும் 14 நாள்களுக்குப் பின்னரே பார்க்கமுடியுமென்றும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இக்காலப்பகுதியில் நினைத்துபார்க்க முடியாதளவுக்கு அதிகரிக்கும் என்றும் நாளொன்றில் இடம்பெறக்கூடிய ஆகக்குறைந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200ஆக இருக்குமெனவும் எதிர்வுகூறியுள்ளது.

 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்கள், ஏற்றிக்கொள்ளவேண்டும். அதுவே, இருக்கின்றதில் ஆகக்குறைந்த பாதுகாப்பு கவசமாகும்.

இன்னும் சிலர், வகைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த தடுப்பூசியால், இத்தனை சதவீதம் நோயெதிர்ப்பு சக்தியிருக்கிறது என்பது போன்ற தகவல்களால், ஒருசிலர், இன்னுமே தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்றனர். இவ்வாறானவர்கள், தங்களுக்கும் நோயைத் தொற்றிக்கொண்டு, ஏனையவர்களுக்கும் தொற்றிவிடுவர் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இறுதி அஸ்திரத்தை அரசாங்கம் எடுத்தத்தில் தப்புமில்லை; தவறுமில்லை. (11.08.2021)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .