2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

13இன் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவ​தே காலத்தின் தேவை

Editorial   / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

13இன் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவ​தே காலத்தின் தேவை

ரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் பின்னாலும் மற்றுமொன்று இருக்கத்தான் செய்கிறது. அவற்றை உடனடியாக இனங்கண்டுகொண்டால் மட்டுமே அடுத்தடுத்த கட்டங்களைக் நோக்கி நகரமுடியும். சில இனங்காணல்கள் காலங்கடந்த ஞானமாகவும் இருக்கக் கூடும்.

நல்லாட்சியின் போது போடப்பட்ட முடிச்சின் காரணமாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் இவ்வரசாங்கம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ‘தேர்தல்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும், இந்தியாவின் ஒப்பந்தத்துடன் பிறந்த குழந்தைதான் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமாகும்.

இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையில், 1987 ஜூலை 29ஆம் திகதியன்று செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகா​ரமே, இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

அருகருகேயுள்ள மாகாணங்களை, ஒரு நிர்வாக அலகாகச் சேர்த்துக் கொண்டு, வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதற்கெதிராக   உயர்நீதிமன்றத்தை ஜே.வி.பி நாடியதன் விளைவாக வடகிழக்கு மாகாணம், வடக்கு, கிழக்காக பிரிக்கப்பட்டது. தற்போது சகல மாகாணங்களின் நிர்வாகமும் ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்​தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென தமிழ்த் தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் நிறைகுறைகளை 34 வருடங்களுக்குப் பின்னர், கண்டறிந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘பெரியண்ணா’விடமும் (இந்தியா) எடுத்துரைத்துள்ளார்.

விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடன் சந்திப்பின் போது, “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே, அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்து செயற்படுவதன் தேவை தொடர்பிலும் எடுத்துரைத்துரைத்துள்ளார்.

இதனூடாக, 13ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்படவேண்டும் எனும் கோஷங்களை எழுப்பியோரின் வாயை அடைத்து, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதை ‘பலவீனங்கள்’ என்பதற்குள் ஜனாதிபதி அடைத்துள்ளார் என்பது மட்டுமே உண்மையாகும்.

ஏனெனில், மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கக் கூடாது என்பதில், இவ்வரசங்கம் கடுமையான பிடியில் நின்று கொண்டிருக்கின்றமை யாவரும் அறிந்ததே.

இந்தியாவின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டு 13ஆவது திருத்தத்தில், இலங்கை அரசாங்கம் ஒருபோதும் கையை வைக்காது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை எந்தமுறையில் நடத்துவது என்ற முடிச்சை அவிழ்க்காமல், தேர்தலை நடத்தாது இழுத்தடிப்புகள் செய்யப்படலாம்.

இது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டுமன்றி, ஏனைய மாகாண சபைகளைக் குறிவைத்திருப்போருக்கு பெரும் நெருக்கடி நிலைமையை தோற்றுவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தபடியாக, மக்களிடம் ​நேரடியாக மாகாண சபை உறுப்பினர்களே செல்கின்றனர். ஆகையால், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவ​தே காலத்தின் தேவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .