2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

கேதார கௌரி விரதமும் அதுபற்றிய விவரமும்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
அ. அச்சுதன் 
 
அனைத்து மதத்திலும் மதஞ்சார்ந்த விரதங்களை அவற்றை பின்பற்றுபவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்து மதத்தில் மட்டும் பலதரப்பட்ட விரதங்கள் அவ்வவ் விரத விதிகளின்படி இந்து மக்களால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
 
விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன . அவற்றை சங்கற்ப பூர்வமாக கைக்கொள்வதிலேயேதான், விரத பலன்கள் உத்தமம், மத்திமம், அதயம் என அமைகின்றன.
 
புரட்டாதி மாதமென்றாலே புரட்டாதிச்சனி விரத்தை தொடர்ந்து நவராத்திரி, கேதாரகௌரி விரதமெனவரும். 
 
21 நாள்கள் கொண்ட கேதார கௌரி விரதம், அத்தல கேதார கௌரி, சிவனை வேண்டி தான் அர்த்த நாதீஸ்வரியாக கேதாரநாதரை எப்போதும் பிரியாதிருக்கும் பேறுவேண்டி நோற்றதினால் கேதார கௌரி விரதம் என நாமம் பெறலாயிற்று.
 
சிவ விரதங்களுள் அதிக சக்தி வாய்ந்ததும் சகல சௌபாக்கியங்களையும் தரவல்லதும் அதிக நாள்கள் கொண்டதாகவும் கொண்ட விரதம் கேதாரத்து நாயகி கௌரியம்பாள் அனுஸ்டித்து, அர்த்த நாதீஸ்வரியாகப் பேறுபெற்றதும் புராணகதை மூலம் அறிந்ததே.
 
மேற்படி விரதாரம்பம் 15.10.2021 வெள்ளிக்கிழமை  விஜய தசமியில் ஆரம்பமாகி 04.11.2021 வியாழக்கிழமை  கிருஸ்ணபட்ச அமாவாசை தீபாவளிப்பண்டிகை அன்று   திருக்காப்புக் கட்டுதலுடன் நிறைவடைகிறது. இவ்வருடம் சரியாக 21 தினங்கள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
இப்பதிவுகளை நமது வாக்கியம், கணிதம் ஆகிய இரு பஞ்சாங்கங்களும் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
 தமிழர்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அங்கெல்லாமுள்ள இந்துக்கள் அனேகமானோர் இந்தக் கேதார கௌரி விரதத்தினையே கடைப்பிடித்து வருவதைக் காணமுடியும். கணவன் - மனைவி நல்லுறவுக்கும், நீண்ட ஆயுள், நிலையான கல்வி செல்வமாற்றலுக்கும் இவ்விரத அனுஸ்டானம் மூலம் பலன்களைப் பெறமுடியும்.
 
21 நாள் கொண்ட இந்த விரதத்தில், 21இழையினால் ஆன சிகப்புப்பட்டு நூலால் திரிக்கப்பட்டு, 21 முடிப்புக்களிட்டு சிவகும்பம் அல்லது சிவலிங்கத்தில் இத்திருக்காப்புப் போட்டு பூசை செய்யப்பட்டு, 21 வகையான நிவேதனப் பொருட்களுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து படைத்து எதிர்வரும் 04.11.2021 வியாழக்கிழமை, தீபாவளி அவாவாசையன்று உபவாசமிருந்து இத்திருக்காப்பை அணிந்து, பிரதமையில் பாரணை பண்ணி விரதத்தை நிறைவு செய்து கொள்வர்.
 
விரதம் நோற்பவர்கள், குறிப்பிடத்தக்க கால அளவு விரதம் கடைப்பிடித்து உத்யாபனம் செய்து விரதத்தை நிறைவு செய்வதுதான் சிறப்பு. அதன் பின்பு தான் விரத பலன்கள் தாங்கள் கடைப்பிடித்த பக்குவ நிலைக்கேற்ப உத்தமம், மத்திமம், அதமம் என்ற மூன்று வகையான பிரிவுகளில் பலன்கள் அமையக்கூடும்.
 
உத்யாபனம் செய்து விரதத்தை எவ்விரதமாயினும் நிறைவு செய்தவர்கள் விரும்பினால் தத்தமது சக்திகளுக்கேற்ப மீண்டும் தாம் அனுஸ்டித்த விரதங்களை தொடரமுடியும். விரதம் எதுவாயினும் அதனை விரதமாக அனுஸ்டித்தலே புனிதம் பெறும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .