2021 ஜூலை 28, புதன்கிழமை

வஞ்சிக்கப்படும் தமிழ்மொழி

Johnsan Bastiampillai   / 2021 மே 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே. அஷோக்பரன்

கொழும்புத் துறைமுக நகரில், காட்சிப்படுத்த -ப்பட்டிருக்கும் ஒரு பெயர்ப்பலகையின் படம், கடந்த நாள்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.   

அந்தப் பெயர்ப்பலகையில் சிங்களம், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் மட்டும் எழுதப்பட்டிருந்தது. தமிழ் வழமை போல, வஞ்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், சமூக ஊடகங்களில் ஏற்பட்ட கண்டனங்களைத் தொடர்ந்து, ‘சப்பைக்கட்டு’ அறிக்கையொன்றை, கொழும்புத் துறைமுக நகரை அபிவிருத்தி செய்யும் சீன நிறுவனம் வௌியிட்டிருந்தது.   

இது நடந்த சில நாள்களின் பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இலத்திரனியில் நூலகம் ஒன்று, சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒளிப்படங்கள், சமூக ஊடகங்களில் வௌியாகியிருந்தன.   

சீனத் தூதுவரும் இலங்கையின் சட்டமா அதிபரும் நினைவுப் பலகையைத் திறந்து வைக்கும் ஒளிப்படத்தில், அந்த நினைவுப் பலகையின் வாசகங்கள் சிங்களம், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் மட்டும் காணப்பட்டன. இலங்கையின் சட்டமா அதிபரின் திணைக்களத்தில் இது  நடந்தமை, இதற்கெதிரான கண்டனங்கள் வலுவாக எழுப்பப்படக் காரணமாகியது.   

சமூக ஊடகங்களில் எழுந்த வலுவான கண்டனங்களைத் தொடர்ந்து, குறித்த நினைவுப்பலகை தமிழ் உள்ளடங்கலாக, மாற்றி அமைக்கப்பட்டதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர், ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், நிறையக் கேள்விகளை எழுப்பி நிற்கிறது.  

இலங்கையின் அரசியலமைப்பின்படி, இலங்கையின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்று தமிழ். அத்தோடு இலங்கையின் இரண்டு தேசிய மொழிகளில் ஒன்று தமிழ். இவ்வாறான நிலையில், தமிழ் மொழி எவ்வாறு, ஓர் அரச நிறுவனத்தால், எதுவித சலனமுமின்றி தவிர்க்கப்பட்டு விடுகிறது என்பது, பெருங்கேள்வியை எழுப்புகிறது.  

நிச்சயமாக, இந்த நினைவுப் பலகையை, அந்தத் திணைக்களத்தின் ஒன்று அல்லது, அதற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் வரைந்திருப்பார்கள். அதை, வேறு உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்திருக்கக்கூடும். அதற்கு அதிகாரிகள், அனுமதியை வழங்கி இருக்கக்கூடும். இவர்களில் எவருக்கும், இதில் தமிழ் மொழி இல்லாமை தெரியவில்லையா?   

ஒருவேளை, இந்த நினைவுப் பலகையின் வரைபை, முதலில் தயாரித்திருந்தவர், சிங்கள மொழியைத் தவிர்த்துத் தயாரித்திருந்தால், அதனை மேற்பார்வை செய்த உத்தியோகத்தர்கள், அதை அனுமதித்து இருப்பார்களா? அப்படியானால், இலங்கையின் அரசியலமைப்பின் படி, இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி, இலங்கையின் தேசிய மொழி என்ற அந்தஸ்துகளைப் பெற்றுக்கொண்டுள்ள தமிழ் மொழி மட்டும், ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறது, ஏன் இவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது?   

இது, இந்த நாட்டின் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனின் மனதிலும் கொந்தளிக்கும் கேள்வியாகும். அதுவும், நாட்டின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியிலுள்ள ஓர் அரச திணைக்களம், அரசியலமைப்பின் உயிர்ப்புக்கு மாறாக நடந்துகொள்கிறது என்பது, அதிர்ச்சி தருவதாக அமைகிறது.  

“நாம் அனைவரும் ஒருதாய் மக்கள்; ஒன்றாக வாழ வேண்டும்” என்று சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தமிழ் மொழி பேசுகிறவர்களை, குறைந்தபட்சம் மாற்றாந்தாய் மக்களாக,  நடத்தாமல் ஏன் இருக்க முடியாமல் இருக்கிறது? அப்படியானால், இவர்கள் சொல்லும் ‘ஒரு தாய் மக்கள்’ என்பது, வெற்று வார்த்தையாகி விடுகிறதே? இப்படி ஆயிரம் கேள்விகள், இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகன் மனதிலும் எழுவது, தவிர்க்க முடியாததாகும்.  

தமிழ் மொழியைப் புறக்கணித்தமைதான், இலங்கை இனப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதன் முதல் வரலாற்றுப் புள்ளி எனலாம். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக ‘தனிச் சிங்களச் சட்டம்’, இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்.   

சிங்கள மொழியை மட்டும், இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றிய இந்தத் ‘தனிச்சிங்களச் சட்டம்’ இலங்கை அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். “எனது தந்தையாரினுடைய ‘தனிச் சிங்களச் சட்டமே’, இந்த நாட்டின் இனப்பிரச்சினையின் மூல காரணங்களில் ஒன்று” என, 2011ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி, நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மகளுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிடு இருந்ததை, நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.   

அங்கு, அவர் மேலும் தெரிவிக்கையில், “தனிச் சிங்களச் சட்டம், 450 வருடங்களாகப் பாழ்பட்டிருந்த இலங்கைச் சுதேசியத்தைத் தட்டியெழுப்பியது. ஆனால், அது ‘மற்றவர்’களான தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர், மலேயர் ஆகியோரை அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டது, இதனால் அவர்களால் சம உரிமையுடன், கௌரவத்துடன், ஒரு தேசமாக வாழும் நிலை இல்லாது போய்விட்டது எனக் கூறியிருந்தார்.   

‘தனிச்சிங்களச் சட்டம்’ கொண்டு வரப்பட்டு, ஏறத்தாழ 65 வருடங்களாகி விட்டன. இந்த 65 வருடங்களில் பல இனக்கலவரங்கள், இனவழிப்புகள், 30 வருட கொடும் யுத்தம் என, இரத்த ஆறு இந்தத் தீவில் ஓடியது. இத்தனை நடந்தும் இன்னும் தமிழ் மொழியை வஞ்சிப்பது மட்டும் மாறவேயில்லை என்பது, தமிழ் மக்களின் நெஞ்சில், ஆறாத புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றதாகவே இருக்கிறது.   

ஒரு நாட்டில், இரு மொழிக் கொள்கையையோ மும்மொழிக் கொள்கையையோ நடைமுறைப்படுத்துவது, ஒன்றும் இயலாத பெருங்காரியமல்ல. உலகின் பல்வேறு நாடுகள், வெற்றிகரமாக இதைச் சாதித்துக் காட்டி வருகின்றன.   

ஆகவே, இரண்டு மொழிகளால் ஒரு நாட்டை நிர்வகிப்பதை இயலாத, கடினமான காரியமாகச் சொல்வதெல்லாம் வெற்றுப்பொய். அதைச் செய்வதற்கான மனோதிடம் இருந்தால், அது மிக இலகுவாகச் செய்துவிடக் கூடியதொன்றுதான்.   

வட்டிக்குக் கடன் தரும் முதலாளியான சீனாவை மகிழ்விக்க, சீனாவுக்குப் ‘பந்தம்’ பிடிக்க, சீனமொழியை பெயர்ப்பலகைகளில், நினைவுப் பலகைகளில், பதாகைகளில் உள்ளடக்க முடியுமென்றால், இந்த நாட்டின் குடிமக்களின் தாய்மொழி, இந்த நாட்டின் தேசிய மொழி, இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழி அக்கறை இன்மையால் தவிர்க்கப்படுகிறது?   

ஒவ்வொரு முறையும், இதுபோன்ற தவறுகள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர்தான் சரி செய்யப்படுகிறது என்றால், அரசாங்கமும் அரச உத்தியோகத்தர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?   

இந்த இடத்தில்தான், பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற துறைமுக நகர் ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. “தமிழ் மக்கள், ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்கு, எம்மை அழிக்கக் கூடத் துணிந்தீர்கள். அதற்கு, எம்மினத்தின் மீது இனவழிப்புச் செய்வதை, உங்கள் தெரிவாக எடுத்தீர்கள். ஆனால், இன்றைக்கு வேறு தேவைகளுக்காக, அதுபோன்ற ஓர் அலகை உருவாக்குவது தொடர்பில், உங்களிடம் எதுவித வெட்கமோ தயக்கமோ காணப்படவில்லை. புவிசார் அரசியலில் போட்டித் தரப்புகளில் ஒரு தரப்பினர், மேலாதிக்கம் பெறுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இதை மேற்கொள்கிறீர்கள். இதுதான் இந்த அவையின் இனவாதம். இதன் காரணமாகவே, நாங்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்க்கிறோம். இன்று இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த முரண்நிலையை, இந்த அவலமான நிலைமையைச் சிங்கள மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்” என்று உரையாற்றினார்.    

சீனாவை மகிழ்விக்க, இலங்கைக் குடிமக்கள் பேசாத மொழியான சீன மொழியை, இலங்கையில் பயன்படுத்தக் கூசாத அரசாங்கத்துக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும், தமிழ் மொழி மட்டும் மறக்கிறது என்றால், அது இனவாதம் அன்றி வேறென்ன?   

சீனாவைப் பற்றிக் கொண்டுள்ள அக்கறையில், ஒரு துளியையேனும் இந்தநாட்டின் குடிமக்களான தமிழர்கள் மீது காட்டினால், இது போன்ற நிலைமை உருவாகாது. ஆனால், அதற்குத் தடையாக இருப்பது இனவாதமன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?   

    அன்று, தனிச்சிங்களச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய கொல்வின் ஆர் டீ சில்வா, “சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை; அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா?எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும். நாம் சமத்துவத்தை மறந்து, தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்” எனச் சொன்ன தீர்க்க தரிசன வார்த்தைகள், இன்றும் பொருந்துகிறது என்றால், இந்த நாடு வரலாற்றிலிருந்து எதுவித பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்றே அர்த்தமாகிறது. அதுவே இந்த நாட்டின் சாபக்கேடுமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .