2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

மதிப்பிழக்கும் ஜனநாயக அரசியல்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 07 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இல. அதிரன்

 சர்வாதிகாரம் ஜனநாயகம் அல்ல என்பதுதான் பொதுவும் பொதுமையுமான ஜதார்த்தம். ஆனால், இலங்கை மக்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையை, ஆளும் அரசியல் தரப்புகள் மாத்திரமே தீர்மானிக்கின்ற தன்மை, தற்போது உருவாகி வருகிறது.

இது,  இலங்கையின் வரலாற்றில் புதிதல்ல. என்றாலும், இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்த பின்னர், இந்த  அரசியல் ஜனநாயகத்தில் பெரும் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறான நிலைமைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப்படுவதையே அவதானிக்க முடிகிறது.

புகழ்பெற்ற தத்துவ ஞானி பிளேட்டோவின் கூற்றுப்படி, ‘ஜனநாயகம் என்பது ஓர் அழகிய வடிவமான அரசாங்கமாகும். இது பல்வேறுபட்ட கோளாறுகள் நிறைந்தவையாகவும் சமமானவற்றுக்குச் சமமானவையாகவும் உள்ளன’ என்பதாக உள்ளது.

ஆனால், சமமற்ற தன்மையை உருவாக்குவதற்காகவே நடைபெறும் செயற்பாடுகளால், ஜனநாயகம் சிதைக்கப்படுவது தவறு என்பதுதான் இப்போதைய வாதமாகும்.

 இருந்தாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளைப் புறந்தள்ளி, அபிவிருத்திக் கூட்டங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட அரசியல் நடத்துவதற்கான கூட்டங்களைத் தங்களுடைய அலுவலகங்களில் நடத்துவதை விடுத்து, அதற்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லதாகும்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, அடாவடித்தனமானதாகவே கொள்ளப்படும் என்ற வகையிலான கருத்துகள், கடந்த பல மாதங்களாகவே வெளிப்பட்டு வருகின்றன. உண்மைகளைச் சொல்வதற்கென்ன தயக்கம் என்பது போன்று, இவ்வாறான கருத்துகள் வெளிக் கிளம்புகின்றன.

மக்களுடைய அபிவிருத்திகள், ஆளும் தரப்புகளை மாத்திரமல்ல, எதிர்த்தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்ததாக நடைபெறவேண்டும். அவ்வாறில்லையானால் அதற்குப் பெயர்  ‘ஊழல்’ என்றே கருதப்பட வேண்டும். 

உதாரணமா,க விவசாயம், கல்வி தொடர்பாகவும் பொருளாதார விடயங்கள் குறித்துக் கூட  கலந்துரையாடல்கள், திட்டமிடல்கள் எப்போதும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்ததாக அமைந்திருக்க வேண்டும். அதனைவிடுத்து ஒரு தலைப்பட்சமான முடிவெடுப்புகளாக, நிகழ்ச்சி நிரல்களாக நடைபெறுவது கண்டிக்கத்தக்கதும் மாற்றி அமைக்கப்படப்பட வேண்டியதுமாகும். ஜனநாயகத் தன்மை பேணப்பட்டால் அல்லது மதிப்பளிக்கப்பட்டால் தீர்க்கமான முடிவை எடுக்கமுடியாமையுடன்  வேகமான முன்னேற்றத்தையும் எட்டமுடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில்,  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் சில கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை முறைப்படியானதாக நடைபெற்றிருக்கவில்லை. இது நடைமுறைகளை மீறும் செயலாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

 அதேபோன்றே, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனும், மாவட்டம் சார்ந்த விடயங்கள் தொடர்பான கூட்டங்களை, கலந்துரையாடல்களை தனிப்பட்ட முறையில் மாவட்ட செயலகத்தில் நடத்துவது தவறானதாகும்.

கூட்டங்களை நடத்தும்போது, மக்கள் பிரதிநிதிகளையும் திணைக்களத் தலைவர்களையும் அழைத்தே கூட்டங்களை நடத்தவேண்டும். அதற்கு தற்போதைய கொவிட் -19ஐ காரணமாகச் சொல்ல முயலக் கூடாது என்று, தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம் (ஜனா) கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

அதே கருத்தை ஒப்புவிப்பது போன்று, “மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர், ஓர் அடிமையாக, கைதியாகப் பயன்படுத்தப்படுகின்றார். மாவட்ட அரசாங்க அதிபர், ஓர் அரசியல் கைதியாக பிள்ளையான், வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருகக்கின்றார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், எமது மாவட்டத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லாமல், கொவிட்-19 ஒழிப்பு செயற்திட்டங்களை அவர்கள் செய்கின்றார்கள் என்றால், அதனை என்னவென்று சொல்வது” எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் இருவரும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்களின்   வாக்குகளைப் பெற்றஅரசியல்வாதிகளாவர். அத்துடன், மாவட்டத்தில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்  மக்கள் பிரதிநிதிகளின்  கருத்துகள் மதிக்கப்படவில்லையானால் , மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகின்றது என்றே பொருளாகும்.

இருந்தாலும் எந்தவொரு கருத்தையும் விமர்சனங்களையும் சட்டை செய்யாமல், மாவட்டத்தின் அரசியல் கலாசாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு அரசியல் கலாசாரம் சார்ந்த அறிவின்மையே காரணமாகும் என்ற வகையிலான விமர்சனங்களும் எழுந்த வண்ணமுள்ளன.

தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலின் வழிப்பட்ட அரசியல் மாத்திரமே இப்போது நடைபெறுகின்றதென்றால் அது தவறே. இந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வதனால் அது சரியென்றாகிவிடாது என்பதே வெளிப்படை. இந்த வெளிப்படைக்கு மறுதலையாக, அதனைச் சரி செய்வது யார் என்பதுதான் இன்றைய கேள்வி.

 தமக்கிருக்கின்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அடாவடித்தனமானதாகவே கொள்ளப்படும் என்ற வகையில், நம்மிடையே இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகளை, பொதுவில்  மக்களது ஜனநாயக உரிமையை மறுத்து தனிப்பட்ட அரசியலைச் செய்ய முயல்வது அரசியல் ஜனநாயகமற்றதாகவே பார்க்கப்படும்.

மக்கள் வாழும் பிரதேசங்களின் நிலைமைகள், செயற்பாடுகள், அபிவிருத்திகள் குறித்தான கலந்துரையாடல்கள் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பினரையும் இணைத்ததாகவே நடத்தப்பட வேண்டும். இல்லையானால் அதற்கு எதேச்சதிகாரம் என்ற அர்த்தத்தையே பகர வேண்டும்.

நாட்டில் இருக்கின்ற அரசாங்கமானது ஆளும் தரப்பு எதிர்த்தரப்பினரை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதற்கு நாடாளுமன்றத்தை நாம்  உதாரணம் காட்ட முடியும். அது தவிரவும் மாகாணசபை, மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் கூட எதிர்க்கட்சிகளை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கின்றன.

அவ்வாறான ஒன்றே இல்லை என்பது போன்று, நாம நகர முனைவது அறிவீனம் என்றே வெளிப்படும். நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பினரைத் தவிர்த்து எந்தவொரு விடயமோ, பிரேரணையோ முன் நகர்த்தப்படுவதில்லை. அது அரசியல் பாரம்பரியமுமாகும். இந்தப் பாராம்பரியம் ஜனநாயகம் வளர்ந்து வந்ததன் வரலாறும் ஆகும். இதனை மறுதலிக்க முனைபவர்கள் அரசியல் நடத்துவதற்கு எவ்வகையில் தகுதியையுடையவர்கள் என்றும் வினவலாம்?

ஜனநாயக அரசியலில் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலின்றி ஆளும் தரப்பினர் மாத்திரம் எந்த ஒரு விடயத்துக்கான தீர்மானத்தையும் முன்நகர்த்தும் போது அதற்குத் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றே பெயர் இருக்கிறது.  அரசியல் பாரம்பரியங்களுக்கு ஏற்ற வகையில்  மதிப்பளித்து மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றல்களை உறுதிப்படுத்திக் கொள்வதே சிறப்பாகும்.

அதிகாரத் துஸ்பிரயோகம் எவ்வளவுக்கும் மோசமான நிலையினை எட்டிவிடுகிறதோ அப்போது அங்கு ஊழல்களும் மோசடிகளும் வலுப்பெற்று விடுகின்றன. அரசியலுக்குள்  ஒருவர் நுழைவது, தமது அடாவடிகளை நடத்துவதற்கும், அதன்மூலம் வருமானத்தையும் ஈட்டுவதற்குமாகும் என்றால் நாம் மக்கள் ஜனநாயகம் குறித்துப் பேசுவதில் பிரயோசனம் இல்லை.

மக்களுடைய ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமாகப் போராடியவர்கள், பேசியவர்கள் அவ்வாறான ஒன்றுமில்லை என்பது போன்று தலைகீழானால் எவ்வாறான அரசியல் நிலைவரம் உருவாகும் என்பதற்கு மட்டக்களப்பு இப்போது நல்ல உதாரணமாகிவிட்டது.

எனக்கு மாத்திரமே சட்டம் பாயும் மற்றவர்களுக்கு நாங்கள் சொல்வது போல்தான் இருக்கும் என்கின்ற நடத்தை அரசியல் மட்டக்களப்பில் உருவாகி வருவது  உண்மையில் தவறானதொரு கறையை மட்டக்களப்பு அரசியலில் ஏற்படுத்தி விடும் .

அரசியலில் மக்களுக்கு இருக்கின்ற அரசியல் ஜனநாயகம் என்கிற தேர்தல் வாக்குகள் மூலம் தெரிவு செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பளிக்காத தன்மைக்கு, மட்டக்களப்பு மாநக சபையும் நல்லதோர் உதாரணமாகும். ஆனால் இவ்வாறான  நடவடிக்கைகள் மூலம் இப்போதும் மக்களிடமும் எல்லோரிடமும் இருக்கின்ற சந்தேகம் இவை யெல்லாம் அறிவில்லாத்தனத்தால் நடைபெறுகின்றதா அல்லது திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தின் செயற்பாடா என்பதுதான்.

தங்களுடைய கருத்துகளை எவ்வாறாயினும் முன்வைக்கலாம் என்கிற வகையில நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீங்கள் எவ்வாறாகிலும் இருந்துவிட்டுப் போங்கள் என்பதுபோல் ஆளும் தரப்பினரும் இருக்க முயல்வது தவறே. இந்தத் தவறை யார் திருத்திக் கொள்வது என்பது ஒரு சதம் பிரயோசனம் இல்லாத கேள்விதான் இருந்தாலும்  பெறுமதியானதே.

கொவிட் 19 தொற்று நிலைமையை அரசாங்கம் தனது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றது  என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகவும் பரவலாகவும் இருந்து வருகிறது. இது தவிரவும் கொவிட்-19 காலத்தைத் தமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பமாகவும் அரசாங்கம் பயன்படுத்த முனைகிறது.

இது உண்மையில் மக்களின் உரிமைகளை மீறுகின்ற செயலாகும். தவறான அரசியல் நடைபெறுவதற்கான உதாரணங்களை நாம் முன்வைக்கின்ற அதே நேரத்தில் தவறான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. அவற்றுக்கெல்லாம் காரணமாக கொரோனா தொற்று நிலைமை சொல்லப்படுகிறது. விந்தைதான் இருந்தாலும் என்ன செய்வது.

ஒட்டு மொத்தத்தில் நாட்டில் தற்போது நிலவும் கொவிட்- 19 தொற்றை அரசியல் செய்யும் வேலைத்திட்டமாக  அரசாங்கம் பயன்படுத்துவதானது அரசியல் வெளியில் மாத்திரமல்ல பொது வெளியிலும் விமர்சனங்களாக  முன்வைக்கப் படுகின்ற போது அது அரசாங்கத்துக்கும்  பாதிப்பினை ஏற்படுத்துவதுடன், மக்களின் ஜனநாயகத்திலும் தவறான எண்ணப்பாட்டை உருவாக்கும்.  அந்த வகையில் சாணக்கியன் சொன்னது போன்று, அரசாங்க அதிபர்  அரசியல் கைதியாக என்பதற்குப் பதிலாக, மக்களின் ஜனநாயகம்  கைதியானதாகவே கொள்ளலாம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .