2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

குற்றங்களும் நல்லிணக்கமும்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்  

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்து, 12 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்ட போதிலும், நாட்டில் நிரந்தர சமாதானம் இல்லை என்றதொரு கருத்து நிலவுகிறது.  

‘போரற்ற நிலைமையானது, நிலையானதும் நிரந்தரமானதுமான சமாதானம் அல்ல’ என்று கூறும் சில சமூகவியலாளர்கள், அதனை ‘எதிர்மறை சமாதானம்’ (Negative peace) என்பர்.   

இதற்கு மாறாக, ஒரு பிணக்கின் மூல காரணத்தை ஆராய்ந்து, நடந்தவற்றை ஏற்று, அதற்குப் பரிகாரம் காண்பது நேர்மறை சமாதானம் (Positive peace) எனப்படுகிறது.   
1985ஆம் ஆண்டளவில், கல்முனைப் பிரதேசத்தில் 35 தமிழ் இளைஞர்கள் உயிரோடு புதைக்கப்பட்டதாக, அப்போது இயங்கிய கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவர் கூறியிருந்தார். அதைப் பற்றி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் கலவானைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம, பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உரையாற்றினார்.   

அப்போது, தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி, அந்தச் செய்தியைப் பற்றித் தாம் விசாரித்ததாகவும், அதில் உண்மையில்லை என்றும் கூறினார். அப்போது சரத் முத்தெட்டுவேகம, “உங்களது கூற்று, உண்மையாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். ஏனெனில், இந்தச் செய்தி உண்மையாயின், ஒரு சிங்களவராக நான், வேதனையும் வெட்கமும் அடைவேன்” என்றார்.  

வழமையாகத் தமது சமூகத்தவர்கள், பிற சமூகத்தவர்களுக்கு இழைத்த அட்டுழியங்களை மறுக்கவும் மூடி மறைக்கவுமே எவரும் முயல்வர். ஆனால், சரத் முத்தெட்டுவேகம அந்தச் செய்தியை மூடி மறைக்கவோ, எடுத்த எடுப்பில் மறுக்கவோ முயலவில்லை. 

உண்மையான இனப்பற்று என்பது, தமது சமூகம் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பது அல்ல; அவற்றை ஏற்று, அவற்றைப் பற்றி வெட்கப்டுவதுடன் அவை, எதிர்காலத்தில் நிகழாதவண்ணமும் நடவடிக்கை எடுப்பதுமாகும்.   

இந்தக் கண்ணோட்டம் பொதுவாக மனிதரிடையே, குறிப்பாக ஒவ்வொரு சமூகத்தின் தலைவர்களுக்கும் இருக்குமாயின், உலகில் போர்களே இடம் பெறமாட்டா.    ஆயினும், வளங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கமும் தமது இனமே உலகில் உயர்ந்த இனம் என்ற எண்ணமும், மனிதர்களைப் பிரித்து வைக்கிறது. அரச படைகளும் புலிகளும் பல இடங்களில் இனப் படுகொலைகளில் ஈடுபட்டமை தெரிந்ததே. அதேவேளை, இலங்கையில் எவரிடமும் அவற்றை ஏற்கும் மனப்பான்மை இல்லை.   

2014ஆம் ஆண்டு, மனித உரிமைப் பேரவையின் விசாணையை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு, கடந்த காலத் தவறுகளை ஏற்க வேண்டும் என்று கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.  இந்தவகையில், கடந்த மே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து சுமார் ஒரு வார கலத்தில், உலகில் இடம்பெற்ற சில விடயங்கள் முக்கியமானவையாகும்.   

முதலாவதாக, 1994 ஆம் ஆண்டு 800,000 டுட்ஸி இனத்தவர்களின் உயிரைக் குடித்த ருவாண்டா படுகொலையின் போது, தமது நாட்டின் நடவடிக்கைகளுக்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மகரோன், பகிரங்கமாக ருவாண்டா மக்களிடம் மன்னிப்பைக் கோரினார்.   

அடுத்த நாள், மே 28ஆம் திகதி ஜேர்மன் அரசாங்கம், தமது கொலனித்துவ ஆட்சியின் போது, நமீபியாவில் தமது படைகள் இனப்படுகொலைகளைச் செய்ததாக ஏற்றுக் கொண்டது. அதற்காகத் தமது நாடு, நமீபிய மக்களிடம் மன்னிப்பைக் கோருவதாக, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் தெரிவித்தார்.  

கனடாவில், 1880களிலிருந்து 1990கள் வரை, அந்நாட்டுப் பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்காக, விடுதிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வந்தன. பழங்குடி மக்களின், பாரம்பரியங்களிலிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரித்தெடுப்பதற்காக இப்பாடசாலைகள் இயக்கப்பட்டன. பெற்றோரிடமிருந்து பலாத்காரமாகப் பிரித்தெடுக்கப்படட்ட பிள்ளைகள், இப்பாடசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.   

அவ்வாறான ஒரு பாடசாலை வளவிலிருந்து, கடந்த வாரம், 215 பிள்ளைகளின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த விடயத்தையிட்டு, மே மாதம் 28ஆம் திகதி, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடொ, தமது அதிர்ச்சியைத் தெரிவித்தார்.   

அமெரிக்காவில், ஒக்லொஹமா மாநிலத்தின் டுல்ஸா என்னுமிடத்தில், 1921ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் முதலாம் திகதிகளில், வெள்ளையர்களால் 300க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தின் நூற்றாண்டு ஞாபகார்த்தம், கடந்த ஜூன் முதலாம் திகதி டுல்ஸாவில் நிகழ்ந்தது. அதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன், அந்தச் சம்பவத்தையிட்டு கறுப்பினத்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.  

ருவாண்டாவில், டுட்ஸி இனப் படுகொலை 1994ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றது. அந்நாட்டு பெரும்பான்மையினரான ஹூட்டு இனத்தவர்களுக்குச் சொந்தமான சில ஊடகங்கள், அக்காலத்தில் டுட்ஸிகளுக்கு எதிராக விசத்தைக் கக்கிக் கொண்டு இருந்தன.   

இந்த நிலையில், ஹூட்டு இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி ஜூவனல் ஹப்யரிமானா, 1994ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் திகதி, அந்நாட்டின் தலைநகரான கிகாலி அருகே, விமான விபத்தில் கொல்லப்பட்டார். டுட்ஸி இனத்தவர்களே விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர் என, ஒரு செய்தி பரவியதை அடுத்து, டுட்ஸிகளுக்கு எதிரான வன்செயல்கள் வெடித்தன. சுமார் 100 நாள்களில், 800,000 டுட்ஸிக்களும் மிதவாத ஹூட்டுகளும், ஹூட்டு கும்பல்களால் கொல்லப்பட்டனர்.  

படுகொலைகளுக்கு மத்தியில், ஐ.நா சமாதானப் பணிகளுக்காக பிரான்ஸ் படைகளை ருவாண்டாவுக்கு அனுப்பியது. ஆனால், பிரெஞ்சுப் படைகள் தமது கடமைகளைச் செய்யவில்லை. கொல்லப்பட்ட ஹப்யரிமானாவுக்கும் அப்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா மித்தரோனுக்கும் இடையில் நிலவிய நட்புறவே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.   

பிரான்ஸ் அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழுவொன்று, கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி மித்தரோன் இந்தப் படுகொலைகளுக்கு பொறுப்பை ஏற்க வேண்டும எனக் குறிப்பிட்டு இருந்த நிலையிலேயே, மக்ரோன் மே மாத இறுதியில் ருவாண்டாவுக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு கிகாலியில் அமைந்துள்ள படுகொலையின் போது கொல்லப்பட்ட 250,000க்கு மேற்பட்டோரின் உடல்கள் அடக்கப்பட்ட நினைவுத் தூபியருகே நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு மக்ரோன் மன்னிப்புக் கேட்டார்.   

மேலே இரண்டாவதாகக் கூறிப்பிடப்பட்ட நமீபிய படுகொலை, 1904 ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. ஜேர்மனியர்கள், நமீபியாவில் ஹெரெரோ, நமா பழங்குடி இனத்தவர்களின் காணிகளையும் கால்நடைகளையும் பலாத்காரமாகக் கைப்பற்றியதை அடுத்து, அவ்வினத்தவர்கள் அதற்கு எதிரான கிளர்ந்தெழுந்தனர். இதன் போதே நமீபியாவில், அப்போதைய ஜேர்மன் இராணுவ பொறுப்பதிகாரி, அவ்வினத்தவர்களை அழித்துவிடுமாறு கட்டளையிட்டார். அதன் படி நான்காண்டுகளில் (1908 ஆண்டு வரை) 65,000க்கு மேற்பட்ட ஹெரெரோ இனத்தவர்களும் 10,000க்கு மேற்பட்ட நமா இனத்தவர்களும் கொல்லப்பட்டனர்.   

இவற்றுக்கு நட்டஈடாக, கடந்த 28 ஆம் திகதி 1.34 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவதாக அறிவித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், படுகொலைகளுக்காக மன்னிப்பையும் கோரினார்.   

17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள், தற்போதைய கனடாவில் குடியேறியதன் பின்னர், அங்கு வாழ்ந்த பழங்குடியினரின் காணிகளில் 98 சதவீதம் பறிக்கப்பட்டன. அம் மக்கள் காடுகளில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. பழங்குடி சிறுவர்களை, கிறிஸ்தவ சமயத்தையும் ஐரோப்பிய கலாசாரத்தையும் தழுவச் செய்வதற்காக அச்சிறுவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, வதிவிட பாடசாலைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தமது மொழியை பேசுவதும் கலாசாரத்தை பின்பற்றுவதும் தடைசெய்யப்பட்டது. 

1831ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை இவ்வாறு சுமார் 150,000 சிறுவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பல்லாயிரக் கணக்கனோர், பெற்றோரிடம் திரும்பிச் செல்லவே இல்லை. அந்த வரலாற்றுப் பின்னணியில் தான், கடந்த மாதம் மிகப் பெரிய வதிவிட பாடசாலையான ‘கம்லூப்ஸ்’ பாடசாலை வளவிலிருந்து, 215 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  இப் பாடசாலைகளை நடத்தி வந்தமைக்காக அரசாங்கத்தின் சார்பில், 2008ஆம் ஆண்டு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாபர், பழங்குடி மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.   

நவீன நாகரிக நாடென, அமெரிக்கா எவ்வளவு தான் மார்தட்டிக் கொண்டாலும், கடந்த முதலாம் ஆம் திகதி, பைடன் மன்னிப்புக் கேட்கும் வரை, அந்நாட்டில் எந்தவொரு தலைவரும், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் டுல்ஸாவில் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.   

நியூஸிலாந்தின் பழங்குடியினரான மவூரி இனத்தவர்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் படையினரும் செய்த அட்டுழியங்களுக்காக, இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு, எலிசபெத் மகாராணியார் மன்னிப்புக் கேட்டார். 

1893ஆம் ஆண்டு, ஹவாய் தீவின் பழங்குடி அரசனின் ஆட்சியைக் கவிழ்த்தமைக்காக நூறாண்டுகளுக்குப் பின்னர், 1993 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மன்னிப்புக் கேட்டார்.  

வரலாற்றில், தமது இனம் மற்றைய இனங்களுக்கு இழைத்த அநீதிக்காக, மன்னிப்புக் கேட்பது நாகரிகம் தான். அதற்கு ஆட்சியாளர்களிடம் பெரும் தைரியம் இருக்க வேண்டும். ஏனெனில், தமது இனத்தில் பலர் இன்னமும் அந்த மனப் பக்குவத்தை அடைந்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதனை எதிர்த்து, அந்த எதிர்ப்புப் பரவினால் மன்னிப்புக் கேட்கும் அரசில்வாதியின் அரசியல் அத்தோடு முடிவடையக் கூடும்.   

மற்றொரு முக்கியமான விடயம் எதுவெனில், மேற்கத்திய தலைவர்கள் இப்போது கொலனித்துவ காலத்தில் செய்தவற்றுக்காக மன்னிப்புக் கேட்டாலும் ஆயத விற்பனை, வளங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அவர்கள் தற்போது கடைப்பிடிக்கும் கொள்கைகளால் இடம்பெறும் பல்லாயிரக் கணக்கான படுகொலைகளுக்கு, அவர்கள் பொறுப்பை ஏற்கத் தயாரில்லை.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .