2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

வவுனியாவை உலுக்கும் ‘டீல்’கள்

Johnsan Bastiampillai   / 2022 ஒக்டோபர் 31 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்


அண்மைக்காலத்தில், இலங்கையின் வடபுலத்தில் போதைபொருட்கள் விற்பனைக்கும் நுகர்வுக்கும் எவர் துணை நின்றார்களோ, அவர்களே வெள்ளை உள்ளத்தவர்கள் போன்று இன்று சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தபோவதாகத் தெரிவிக்கும் நாடகங்களும் அரங்கேறுகின்றன. 

ஆய்வுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, போதை வியாபாரம் நடைபெற்று வருவதாகவும் இது, எதிர்கால சந்ததியின் தனித்துவத்துக்கும் ஆளுமைக்கும் விடுக்கப்படும் சவால் எனவும் எச்சரிக்கப்படும் நிலையிலேயே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் ‘உயிர்கொல்லி போதை மருந்து விற்பனை’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளிவந்தது. 

குறித்த மருந்து, ‘உயிர்கொல்லி போதை மாத்திரையா’ என ஆராய்கின்றபோது, அவ்வாறான மொழிநடை பிரயோகம், தவறானதாகும். குறித்த மருந்து, ‘பிரிக்கபிலின்' என்ற வலிநிவாரண மாத்திரையாகும். இது தொடர்பில்,  மருத்துவர்கள் விளக்கும்போது, “வலி நிவாரணி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தப்படும் போது அல்லது, தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் போது, அது போதையை தரக்கூடியதாக இருக்கும்” என்கின்றனர். 

எனவே, வலிநீக்கி மாத்திரை​களை நோயாளர்களுக்கு வழங்கப்படும் போது, மருத்துவர்கள் மிகஅவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கின்றனர். இவ்வாறான சூழலில், ஒளடதங்கள் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல்களைப் பரிசீலிக்கும்போது, மருந்துகள் நான்கு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. 

வகுப்பு 1: சாதாரண மருந்துகள்: இவற்றை (பரசிட்டமோல்) எவரும் மருந்துக்கடைகளில் பெறக்கூடியதாக இருக்கும். இதற்கு மருத்துவரது பரிந்துரை தேவைப்படுவதில்லை.

 வகுப்பு 2ஏ: மருந்தகங்களில் விற்கப்படும்; இதற்கு மருத்துவரின் பரிந்துரை  கட்டாயம் இல்லை. (விட்டமின் மருந்துகள், பூச்சிக் குளிசைகள், அல்சர் மருந்துகள், கிறீம் வகைகள்) .

வகுப்பு 2பி: மருத்துவரின் பரிந்துரையின்படி மாத்திரமே வழங்கப்பட வேண்டும்: குறித்த மருந்துகளை, நோயாளருக்கு வழங்கவதற்கு மருத்துவருக்கு கட்டுப்பாடுகள் இல்லை. எனினும், சரியான முறையில் நோயாளருக்கு வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளபோதிலும், அதற்கான பதிவுகள் எதுவும் செய்யப்படுவதில்லை. 

வகுப்பு 3: அபாயகரமான மருந்துகள்: அபாயகர ஒளடதங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மருந்துகளாக இவை காணப்படும். இவற்றை நோயாளிக்கு வழங்கும் போது, அதற்கான பதிவுகள், எத்தனை மாத்திரை வழங்கப்பட்டன, அவை பயன்படுத்தப்பட்டுள்ளதா, மிகுதி உள்ளதா என்பது தொடர்பான பதிவுகள், நேரடி கண்காணிப்பில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.  இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படும் ‘பிரிக்கபிலின்'  வலிநீக்கி மருந்தானது, ‘வகுப்பு 2 பி’ பிரிவுக்குள் அடங்குகின்றது.

குறித்த மருந்தில் போதைதன்மை அதிகமாக உள்ளது; அல்லது, இதைப் பயன்படுத்தும் போது, போதை ஏற்றும் என்கின்றபோது, இந்த மருந்து தொடர்பில் அனைத்துத் தரப்பினருமே அவதானமாக இருந்திருக்க வேண்டும். 

அதற்குமப்பால், 2022ஆம் ஆண்டில், வவுனியாவிலுள்ள இரண்டு மருத்துவர்களின் பெயர்களில் 1,000க்கும் மேற்பட்ட பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதுவும், வவுனியாவில் மூடப்பட்டு, நீண்ட காலமாகிய மருந்தகத்துக்கும் ஆயுர்வேத மருந்துகளை மாத்திரமே வழங்கக் கூடிய ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த மருந்தை விற்பனை செய்யும் முகவர், இது தொடர்பில் அசண்டையீனமாக இருந்தது தொடர்பில், கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. 

வலி நீக்கி மருந்து, ‘உயிர்கொல்லி போதை மருந்து’ ஆக இருக்குமேயானால், இதை இறக்குமதி செய்தவர்கள், விற்பனை முகவர்கள்  ஆகியோரும் இந்த மருந்து அதிகளவில் விற்பனை செய்யப்படும் போது, பொலிஸாருக்கோ அல்லது சுகாதாரத் துறையினருக்கோ தெரியப்படுத்தி இருக்க வேண்டிய சமூகக் கடமைப்பாடு ஒன்றும் உள்ளது. 

மருந்து மற்றும் உணவு பரிசோதகர்களின் திடீர் பரிசோனையின்போது கண்டு பிடிக்கப்படும் வரை, அசண்டையீனமாக இருந்தமை தொடர்பில், சுகாதாரத் திணைக்களம் கவனம் செலுத்துமா என்பதையும்ம பொறுத்திருந்து அவதானிக்க வேண்டியுள்ளது.

இதற்குமப்பால், வவுனியா மாவட்டத்தில் ஆயுர்வேத வைத்தியர், மூடப்பட்ட மருந்தகம், வட மாகாணத்தில் பணியாற்றாத வைத்தியர், கடந்த இரண்டு வருடகாலமாக மாகாணத்தில் இல்லாத வைத்தியர் உள்ளிட்ட 24 மருந்தகங்கள் மற்றும் மருத்துவர்களின் பெயர்களுக்கு குறித்த மருந்து விநியோகிகப்பட்டுள்ள நிலையில், இவை தொடர்பில் அவதானிப்பு செலுத்த வேண்டிய தேவை, சுகாதார திணைக்களத்துக்கு உள்ளதையும் மறுப்பதற்கில்லை.  இந்நிலையில், வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “போதை மருந்து விற்பனை தொடர்பான மருத்துவரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது” எனத்  தெரிவித்துள்ள நிலையில், குறித்த பணிப்பாளர் தனக்கு கீழ் பணியாற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகர், இது தொடர்பில் கவனம் எடுக்கவில்லையா என்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

வவுனியாவைப் பொறுத்தவரையில், இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள வைத்தியர் ஒருவரில் பெயரில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் குறித்த மருந்து 280 பெட்டிகளும் மே மாதம் 400 பெட்டிகளும் ஜூலை மாதம் 400 பெட்டிகளுமாக மொத்தம் 1,080 பெட்டிகளும், வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் உள்ள மருத்துவர் ஒருவரின் பெயரில் இரண்டாம் மாதம் 200 பெட்டிகளும் ஏப்ரல் மாதம் 100 பெட்டிகளும் ஜூலை மாதம் 360 பெட்டிகளும் ஓகஸ்ட் மாதம் 360 பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உண்மையில் குறித்த மருந்துவர்கள், தமது வைத்தியசாலையின் தேவைகளுக்காக இவற்றைப் பெற்றார்களாக அல்லது அதிகளவான மருந்துகளைப் பெறும்போது இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்பதால், பல மருந்தகங்கள் இணைந்து ஒரு மருத்துவரின் பெயரில் பெற்று பகிர்ந்து எடுத்தார்களா? 

இல்லையேல், விற்பனை பிரதிநிதிகள் தமது மாதாந்த விற்பனையை அதிகரித்துக் காட்டுவதற்காக, மருந்துவர்களின் பெயர்களில் பற்றுச்சீட்டை இட்டு அப்பொருட்களை அங்கு கொண்டு, சென்று வேறு இடங்களுக்கு மாற்றினார்களா என்ற கோணங்களில் விசாரணைகள் செய்யப்பட வேண்டிய தேவை சுகாதார திணைக்களத்தின் பக்கமே உள்ளதைப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

இதற்குமப்பால், விற்பனை முகவர்களும் குறித்த மருந்துகள் விற்பனை செய்யப்படும் போது, குறித்த வைத்தியர்தான் குறித்த மருந்தைக் கோரினாரா இல்லையா என்பதையும் பொருட்களை விநியோகிக்கும் போது ஆராய்ந்திருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

எது எவ்வாறு இருப்பினும், ‘பிரிக்கபிலின்'  மருந்தானது தொடர்ச்சியாக பயன்படுத்தும் ஒருவர், அதற்கு அடிமையாக்கி, அதைப் போதை தரும் மாத்திரையாக பயன்படுத்துவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

 இந்நிலையில், மருந்துவர்களைக் குறித்து வைத்து, அவர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக இதைக் கொள்ளாமல், வடமாகாணம் மட்டுமன்றி இலங்கை முழுவதும், இளம் சமூகத்தைப் பல்வேறு வடிவில் சூழும் போதை என்ற அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, அனைவரது கைகளிலும் உள்ளது. அதற்காக இனம், மதம் பேதங்கள் கடந்து ஒன்றிணைய வேண்டிய தேவையை மேற்குறித்த சம்பவங்கள் சுட்டி நிற்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X