2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

முறையான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?

Editorial   / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச. சேகர்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் கண்டிப்பாக அருகாமையிலுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்துக்கு சென்று, தமக்குக் கிடைக்கும் முதல் தடுப்பூசியை வகை வேறுபாடின்றி செலுத்திக் கொள்ளுமாறு அரசாங்கமும் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டு அதனால் ஏற்படக்கூடிய மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இரண்டு தடுப்பூசிகளையும் இட்டுக் கொள்ளுமாறு இந்தத் தரப்பினர் கூறுகின்றனர்.

நபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் என காய்ச்சல், தடிமல், மூக்கிலிருந்து திரவம் வடிதல், தலைவலி, மூட்டுவலி, நெஞ்சு வலி, மூச்சிழுப்பதில் சிரமம், மூச்சுத் திணறல், இருமல், சுவை மற்றும் வாசனை அற்றுப் போதல், களைப்பு போன்றன தெரிவிக்கப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவருக்கேனும் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால், ஏனையவர்களிடமிருந்து உடனடியாக தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு தொற்று உள்ளமையை உறுதி செய்து கொள்ளுமாறும், சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள அவசர அழைப்புத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, வைத்திய அதிகாரிகளால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பரவலாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசி வர்த்தக நாமங்களில் சீனாவின் தயாரிப்பான சினோஃபாம், இந்தியா மற்றும் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா, அமெரிக்க தயாரிப்பான மொடர்னா மற்றும் ஃபைசர், ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி போன்றன அடங்கியுள்ளன.

எளிமையாகக் குறிப்பிடுவதானால், சினோஃபாம் தடுப்பூசியில் காணப்படும் சூத்திரமானது, உயிரிழந்த கொரோனா வைரஸ் மனித உடலினுள் செலுத்தப்பட்டு, மனித நோய் எதிர்ப்புச் சக்தித் தொகுதிக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை ஏற்படுத்தப்படுகின்றது. ஏனைய அனைத்து தடுப்பூசிகளிலும் வலுக்குன்றிய வைரஸ் உள்வைக்கப்பட்டு மனித உடலினுள் செலுத்தப்படுகின்றது.

பரவலாக நாட்டில் வழங்கப்படும் சீனத் தயாரிப்பான சினோஃபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலானாவர்களுக்கு உடலில் எவ்விதமான மாற்றங்களையும் அவதானிக்க அல்லது உணர முடியாது என்பது தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலரின் கருத்தாக அமைந்துள்ளது.

ஆனாலும், வலுக்குன்றிய வைரஸ் அடங்கிய இதர ரக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் பலருக்கு தடுப்பூசி செலுத்தி ஒரு வார காலப்பகுதியினுள் கொவிட்-19 தொற்று ஏற்பட்டதற்கு நிகரான அறிகுறிகள் தோன்றுகின்றன. குறிப்பாக, அண்மையில் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் இந்த நிலையை அதிகளவு அவதானிக்க முடிந்தது.

ஜனவரி மாதம் இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டு, பல மாதங்களாக இரண்டாம் ஊசியை ஏற்றிக் கொள்ள முடியாமல் காத்திருந்த பிரதானமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கான இரண்டாம் தடுப்பூசியாக ஜப்பானிலிருந்து வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஏற்றுவது ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 7 இலட்சம் பேர் வரை இந்த தடுப்பூசியை தமது இரண்டாவது ஊசியாக ஏற்றிக் கொண்டுள்ளனர்.

இந்தத் தடுப்பூசி இலங்கையை ஓகஸ்ட் 1ஆம் திகதி வந்தடைந்த நிலையில், இவை மறுநாளான ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் கொழும்பில் வழங்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நாட்டின் ஜனாதிபதி தம்வசம் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படையாக காண முடிகின்றது. குறிப்பாக தற்போது அமலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகிய விதம் மற்றும் நாட்டு மக்களுக்கு ஓகஸ்ட் 20ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரை போன்றவற்றிலிருந்து இது புலனாகியது. இவரின் நிலைப்பாடு என்பது கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்துவது என்பதாகவே உள்ளது. நாட்டு மக்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதியும் கோரியிருந்தார்.

நாடு அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் தமது ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டுக்குத் தேவையான கொவிட்-19 தடுப்பூசி கொள்வனவு செய்யும் பணியை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. நாட்டு மக்களுக்கும் இலவசமாகவே இந்த தடுப்பூசிகளை வழங்குகின்றது. இந்தப் பணி வரவேற்கத்தக்கது.

ஆனாலும், இவ்வாறு வழங்கப்படும் தடுப்பூசி, நாட்டினுள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் முறையான ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாமை காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை, தெளிவற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றால் பிழையாகாது. குறிப்பாக ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அஸ்ட்ராசெனெகா ரக தடுப்பூசி காரணமாக, பலர் கொவிட்-19 நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக, தடுப்பூசி ஏற்றிக் கொண்டு ஒரு வாரத்தினுள் பலருக்கு கொவிட்-19 நோய் அறிகுறி தென்பட்டது. இதில் பெரும்பாலானோருக்கு சிறியளவிலான அறிகுறிகளே காணப்பட்டன. வலுக்குன்றிய கொரோனா வைரஸ் உடலினுள் செலுத்தப்பட்டதும், அதற்கு எதிராக மனித நோய் எதிர்ப்பு சக்தி போராட ஆரம்பிக்கின்றது. இதன் போது, குறித்த நபரின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகக் காணப்பட்டால், அவரால் பெருமளவில் பாதிப்புகளை உணர்ந்திருக்க முடியாது. ஆனாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களால் அதிகளவில் அறிகுறிகளை உணர முடிந்திருந்தது.

நாட்டில், டெல்டா பிறழ்வு பரவிய காலகட்டத்தில் இந்த நிலையும் எழுந்தமையாலும், ஜப்பானின் அஸ்ட்ராசெனெகா தொடர்பில் நாட்டில் எவ்விதமான ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளாது கிடைத்தவுடன் அனைவருக்கும் ஏற்றப்பட்டதும் அவ்வாறு ஏற்றிக் கொண்டவர்களுக்கு தெளிவற்ற ஓர் அச்ச நிலையை தோற்றுவித்திருந்தது.

இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டு, மூன்று முதல் நான்கு தினங்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்ற, தனியார் வைத்தியசாலைக்குச் சென்று பி.சி.ஆர் பரிசோதனை செய்து, அதன் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

எனவே, நாளாந்தம் ஊடகங்களில் தோன்றி “அடுத்த இரு வாரங்கள் தீர்மானம் மிக்கவை; நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்; நாட்டை மேலும் முடக்கி வைக்க வேண்டும்; விஞ்ஞான ரீதியான முடக்கம் வேண்டும்; மக்கள் வீட்டினுள்ளேயே இருக்க வேண்டும்” என அரைத்த மாவையே அரைக்கும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், ஏன் இவ்வாறு நாட்டினுள் கொண்டு வரப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் உள்நாட்டு தட்பநிலைகளுக்கு ஏற்ற வகையில் ஆய்வக பரிசோதனைகளை முன்னெடுப்பதில்லை அல்லது அவ்வாறு மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பதில்லை எனும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த போதிலும், இந்த தடுப்பூசிகள் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எமது நாட்டு உணவுப் பழக்க மற்றும் வாழ்க்கைப் பழக்க கலாசார முறைகளுக்கு பொருந்தும் வகையிலா அமைந்துள்ளன என்பது தொடர்பில் ஆய்வை மேற்கொண்டு, அதனால் எழக்கூடிய அறிகுறிகள் தொடர்பில் பொது மக்களுக்கு ஏன் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதில்லை? தடுப்பூசி ஏற்றினால் ஏற்றிக் கொண்ட நபர் தம்மை குறிப்பிட்ட காலத்தக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமா? உயிருடனுள்ள வலுக்குறைந்த வைரசைக் கொண்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டவரின் உடலில் காணப்படும் வைரஸ் அதே வீட்டில் வசிக்கும் மற்றுமொருவருக்கு தொற்றுமா? இது போன்ற தெளிவுபடுத்தல்களை ஏன் இவர்கள் வழங்குவதில்லை?

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தும் சுகாதாரத் துறை நிபுணர்களே, அவ்வாறு ஏற்றிக் கொண்டால் அதனால் நபர் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய உடனடி பின்விளைவுகள் பற்றியும் தெளிவுபடுத்தல்களை வழங்குங்கள். அதனால் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியிலும், தமது சுகாதாரம் பற்றி அச்சமடைந்துள்ள மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டதன் பின்னர் எதை எதிர்பார்க்கலாம் என்பது பற்றி அறிந்திருப்பார்கள்.

தடுப்பூசி வழங்குவது அரசாங்கத்தினதும், சுகாதாரத் துறையினதும் கடமை என்பதைப் போல, தடுப்பூசி ஏற்றிய பின்னர் எவ்வாறான அறிகுறிகள் மற்றும் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி அடிக்கடி தெளிவுபடுத்த வேண்டியதும் முக்கியமானதாகும்.

நாட்டினுள் கொண்டு வரப்படும் தடுப்பூசித் தொகுதிகள் உள்நாட்டில் முறையான ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மக்களுக்கு விநியோகிக்க ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதனூடாக, ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட மொடர்னா தடுப்பு மருந்து பழுதடைந்திருந்தததால் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல, இங்கும் இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ளலாம். மக்களையும் அச்சமின்றி தடுப்பூசி ஏற்றிக் கொள்ளச் செய்யலாம்.

இதுவரையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசரத் தேவைக்கு (Emergency purpose use) பயன்படுத்துவதற்காகவே கொவிட்-19 தடுப்பூசிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X