2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

‘வீல்பரோ’ தள்ளல் வினையானது

Johnsan Bastiampillai   / 2021 மே 27 , பி.ப. 01:11 - 1     - {{hitsCtrl.values.hits}}

-கலாதேவி

விளையாட்டுக்குச் செய்தல், அதுவே நமக்கு வீணான வம்பைத் தேடித்தந்துவிடுமென யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். சிந்திக்கத் தூண்டவும் சிரிக்கக் கூடியதுமான இவ்வாறான சம்பவங்கள், பயணக்கட்டுப்பாடு நேரங்களிலும் தளர்த்தப்பட்ட நாளிலும் இடம்பெறாமல் இல்லை. 

மே 21, இரவு 11 மணிமுதல் அமல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை மே 25ஆம் திகதி தளர்த்தப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டமையால், ​வீடுகளிலிருந்து ​வெளியே சென்றவர்கள், ஓரளவுக்கு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினர். 

அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கே அன்றைய நாளை ஒதுக்கிக்கொண்டனர். அதிகாலை 5 மணிமுதல் அங்காடிகளில் வரிசைகளை காணக்கிடைத்தது. ஆனால், இரவு 9 மணியுடன் வீதிகள் வெறி​ச்சோடிக் கிடந்தன. 
கொரோனாவுக்கு கொஞ்சமேனும் பலரும் அச்சமடைந்துள்ளனர். இன்னும் சிலர், ‘அவர்கள் என்ன அறிவுரை கூறுவது, நாங்களென்ன கேட்பது’ எனும் திமிர்த்தனத்துடன் இன்னுமிருக்கின்றனர். 

பெருநகரங்களுக்குள் செல்வோர், வாகனங்களில் செல்லாது, நடந்து செல்லுமாறே அறிவுரை வழங்கப்பட்டது. இதனால், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கியபின்னர், எதில், ஏற்றிக்கொண்டு வருவதென திக்குமுக்காடிப்போன சிலர், வீட்டிலிருந்த ‘வீல்பரோ’க்களை (wheelbarrow) நகரங்களுக்கு தள்ளிச்சென்றுவிட்டனர். 

காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட, பாரமான பொருள்களை, வீல்பரோக்களில் எடுத்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது. ஓட்டோக்கள் வீதிகளில் ஓடினாலும், வாடகைக்கு அமர்த்திச் செல்லமுடியாது என்ற கட்டுப்பாடும் கடுமையாக்கப்பட்டிருந்தது.  

இதனால், காஸ் சிலிண்டர்களையும் அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட பொதிகளையும் தோள்களில் சுமந்துகொண்டே சென்றனர். கிராமங்களிலும் பெருந்தோட்டங்களிலும் நகரங்களுக்கு அப்பாலும் இவ்வாறான செயற்பாடுகள் அன்றாடம் இடம்பெறுகின்றன. எனினும், பெருநகரங்களில், நாட்டாமைகளைத் தவிர, சாதாரண பொதுமக்களும், தோள்களில் பொதிகளைச் சுமந்துச் சென்றமை, புகைப்படங்களாகின. 

அவ்வாறுதான், அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு அளுத்கம, தர்ஹா நகரைச் சேர்ந்தவரும் வந்துள்ளார். வீல்பரோவை எடுத்துவந்திருந்த அவர், பொருள்களை ஏற்றிக்கொண்டு, தான் படும் துன்பத்தை, வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக, மற்றொருவரின் உதவியுடன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பரவவிட்டிருந்தார். பொதுமக்கள் எவ்வாறு துன்பப்படுகின்றனர் என்பதை எடுத்தியம்பும் வகையிலேயே அந்த வீடியோ அமைந்திருந்தாலும் அரசாங்கத்தின் கட்டளையைக் குத்திக்காட்டிக் கிண்டல் செய்யும் வகையிலும் இருந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டும் இருந்தது. 

அதனால், என்னவோ, முகக் கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழ், அளுத்கம, தர்ஹா நகரைச் சேர்ந்த அந்தநபர் கைது செய்யப்பட்டார். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழான கைதுகள், முறையாக இடம்பெறுமாயின், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவர். 

ஏன்? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர கூட, பொதுச் சந்திப்பொன்றில் முகக் கவசத்தை அணியாது, அமர்ந்திருந்தார். அவரை கைதுசெய்யாமை, ஒரே நாடு இரண்டு சட்டங்களா என சமூகவலைத்தளங்களில் கேள்வி​கள் கேட்கப்பட்டுள்ளன. 

சட்டங்கள், கட்டளைகளை பிறப்பிக்கும் போது, மிகக் கவனமாகப் பிறபிக்கவேண்டும். அதேபோல், அச்சொட்டாகப் பின்பற்றவும், தராதரங்களைப் பார்க்காது மீறுவோரைக் கைது செய்து, முன்மாதிரியாக இருக்கவேண்டும். 

அதேபோல, அரசாங்கத்துக்கு பாடம் புகட்டவேண்டுமென நினைத்து, தேவையிலான காட்சிகளைப் படமாக்கி, சமூகவலைத்தளங்களில் ஏற்றி சிக்கிக்கொள்ளக்கூடாது.மக்கள் படும் வேதனைகளை வீல்பரோவை தள்ளிக்கொண்டு வந்தவர், வெளிச்சம் போட்டு காண்பித்திருந்தாலும், முகக் கவசம் அணியாதிருந்தமை குற்றம். ஆனால், வீடியோ வெளியானதன் பின்னர், கைதுசெய்தமை, ஏதோவொன்றை மூடிய மறைப்பதற்கான மற்றுமொரு முயற்சியாகும். எதிலும் கவனம், எப்போதும் கவனம் என்றிருந்தால், எந்தவிதமான பிரச்சினைகளும் வராது. 

 


  Comments - 1

  • Kumaran Friday, 28 May 2021 05:36 PM

    இந்த ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில அடிப்படையற்ற தீர்மானங்களை மூடி மறைக்க முயற்சிக்கின்றதா என எண்ணத் தோன்றுகின்றது? குறிப்பாக, நாட்டில் பொது மக்கள் வாகனங்களில் செல்லக்கூடாது என் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் பொலிசாருக்கு இல்லை. அது தனிமனித சுதந்திரம். அவ்வாறு தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் எங்கே? இது சுகாதாரப் பிரச்சனை என்பதால் பலரும் மௌனம் காக்கின்றமை புலப்படுகின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .