2022 ஜூலை 07, வியாழக்கிழமை

மஹிந்த போய்விட்டார்; இனி சஜித் பொறுப்பேற்க வேண்டும்!

Editorial   / 2022 மே 12 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புருஜோத்தமன் தங்கமயில்

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றுவிட்டது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ

 நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை (09) விலகினார். அவர் பதவி விலகியவுடன் அரசாங்கமும் பதவி இழந்துவிட்டது. ஆனாலும், ஜனாதிபதி பதவியில் இன்னமும் கோட்டாபய ராஜபக்‌ஷவே இருக்கிறார். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் பிரதான கோஷமான ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டுவோம்’  என்கிற விடயம் இன்னமும் முடிவின்றி தொடர்கின்றது. ராஜபக்‌ஷர்களை முற்றாக விரட்டும் வரையில், போராட்டங்களை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தென் இலங்கை மக்கள் எழுச்சியின் செய்தி.

ராஜபக்‌ஷர்கள் பொது வெளிக்கு வரமுடியாத நிலையொன்று தென் இலங்கையில் ஏற்பட்ட பின்னர்தான், மஹிந்த பதவி விலகும் முடிவுக்கு வந்தார். தான் பதவி விலகுவதற்கு முன்னர், காலி முகத்திடலில் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் நடத்தியவர்களை குண்டர்களைக் கொண்டு தாக்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவர் செயற்பட்டார். அலரி மாளிகையில் பொதுஜன பெரமுனவின் குண்டர்களை கூட்டி உணவு வழங்கி உபசரித்து உசுப்பேத்தி அனுப்பிவிட்டு போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதைப் பார்த்து ரசித்துவிட்டுத்தான் அவர் பதவி விலகினார்.

ஆனால், மஹிந்த எதிர்பார்த்ததைக் காட்டிலும் மோசமான விளைவொன்று ஏற்பட்டது. போராட்டக்காரர்களைத் தாக்கிய குண்டர்கள், பொது மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள். அலரி மாளிகை போராட்டக்களமானது.   அலரி மாளிகையிலிருந்து மஹிந்த வெளியேறுவதற்கு இராணுவத்தின் பாதுகாப்பை பெற வேண்டி ஏற்பட்டது. அதுமாத்திரமல்லாமல், கோட்டா தவிர்ந்த அனைத்து ராஜபக்‌ஷர்களும், அவர்களின் சக பாடிகளும் இன்று வரை பதுங்கியிருக்க வேண்டி வந்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களில் பெரும்பாலோனோர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது குறித்து சிந்திக்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக விமான நிலையங்களை போராட்டக்காரர்கள் சுற்றி வருகிறார்கள்.

மற்றொரு புறம், ராஜபக்‌ஷர்களினதும் அவர்களினது சக பாடிகளினதும் வீடுகள், வளவுகள், சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனை பொது மக்கள் போர்வையில் வேறு நிகழ்ச்சி நிரலில் இயங்கும் துணைக்குழுக்கள் செய்வது மாதிரியான தோற்றமும் ஏற்படுகின்றது. ஏனெனில், ஒவ்வொரு தீ வைப்புச் சம்பவமும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இடம்பெறுகின்றது. அதேவேளை, ராஜபக்‌ஷர்களின் தாய், தந்தையரின் நினைவிடங்கள், சிலைகள் என்பன தகர்க்கப்பட்டிருக்கின்றன.

நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. அரசாங்கம் இல்லையென்றால், நிர்வாக நடவடிக்கைகளுக்கான தீர்மானங்களை யார் எடுப்பது என்கிற கேள்வி எழும்? ஜனாதிபதியும், அவரது பரிவாரங்களான இராணுவமும் நாட்டை முன்னோக்கி நகர்த்தி சென்று விட முடியுமா? அந்த நிலைதான் தொடரப்போகின்றது என்றால், கோட்டா ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் பகுதியளவில் காணப்பட்ட இராணுவ ஆட்சி முறைமை முழுமையாக மாறும். அது, ஜனாநாயக ஆட்சி அதிகாரத்துக்கான கட்டங்களை இல்லாமற்செய்துவிடும். அப்படியான நிலையில், புதிய இடைக்கால அரசாங்கமொன்று உடனடியாக பதவியேற்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டுவோம் என்கிற போராட்டத்தின் வழியாக பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவி இழந்துவிட்டது. அப்படியான நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் கட்டத்துக்கு வந்தாக வேண்டும். ஏனெனில், நாட்டில் அரசாங்கமொன்று இல்லாத நிலை தொடர முடியாது. அதுவும், நாடு திவாலடைந்துவிட்ட நிலையில், பொருளாதாரத்தை முன்நகர்த்துவதற்கான உரையாடல்களை சர்வதேச நாடுகளுடனும் அமைப்புக்களுடனும் நடத்துவதற்கு கூட ஸ்திரமான அரசாங்கம் அவசியமானது. தற்போதுள்ள நிலையில், தேர்தலொன்றை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது என்பது, நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார சிக்கலை இன்னும் மோசமாக்கிவிடும். அப்படியான நிலையில், சஜித் பிரேமதாச அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வர வேண்டியிருக்கின்றது.

மஹிந்த பதவி விலகிய உடனேயே (முன்னாள்) நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரை அழைத்து நாட்டின் நிதி நிலைமைகள் தொடர்பில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சஜித் ஆலோசனை நடத்தியிருக்கின்றார். அது அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுகின்றது. எந்தவொரு அரசாங்கம் பதவியேற்றாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சற்று சீர்படுத்துவதற்கே குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுக்கும். அப்படியான நிலையில், தற்போதுள்ள பொருட்களின் விலை உயர்வு இன்னமும் அதிகரிக்கவே செய்யும். அது மக்களின் மேலான சுமையாக மேலும் மாறும். அது இடைக்கால அரசாங்கத்தை ஏற்கும் எந்தத் தரப்புக்கு எதிரான மனநிலையாகவும் மாறும் வாய்ப்புண்டு. ஆனாலும், நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கள் உள்ளிட்டவற்றின் மத்தியஸ்தத்துடன் சஜித் தயாராவிட்டார்.

சஜித் பிரதமர் பதவியை ஏற்று புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பற்காக, ஜனாதிபதி கோட்டாவிடம் முன்வைக்கும் பிரதான கோரிக்கையாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஆறு மாதங்களுக்குள் இல்லாதொழிப்பதற்கு பொது மக்களின் முன்நிலையில் உறுதி வழங்க வேண்டும் என்பது. அதற்காக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் மத்தியஸ்தத்தையும் கோருகிறார். ராஜபக்‌ஷர்கள் தென் இலங்கை மக்களிடம் இருந்து பதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கோட்டா அந்தக் கோரிக்கைக்கு இணங்குவார் என்பது சஜித்தின் எதிர்பார்ப்பு. இடைக்கால அரசாங்கம் பதவியேற்றதும் ஜனாதிபதி கோட்டா பதவி விலகி, புதிய ஆட்சி முறைக்கு வழிவிட வேண்டும் என்று நேற்றும்கூட இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.

புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வாருங்கள் என்று கோட்டா கோரிக்கை விடுத்தாலும், அவரின் இராணுவ மனநிலை எப்படிச் சிந்திக்கும் என்பது குறித்த சந்தேகம் எதிர்க்கட்சிகளிடம் இன்னமும் இருக்கவே செய்கின்றது. ஏனெனில், அவர், அவசரகாலச் சட்டத்தை அவர் மீண்டும் பிரகடனப்படுத்தியிருக்கிறார். அதன்மூலம், இராணுவத்தினரின் துப்பாக்கிகளை மக்களை நோக்கி திருப்புவதற்கான ஆணையை வழங்கியிருக்கின்றார். எனினும், அவசரகாலச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு பத்து நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்கிற விடயம், கோட்டாவின் இராணுவ சிந்தனைக்கு இடர்பாடுகளைப் போடும் வாய்ப்புள்ளது.

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டினாலும், அங்கு அவசரகாலச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. ஏன், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் ஏனைய ராஜபக்‌ஷர்களும்கூட ஆதரவாக வாக்களிக்கும் சூழல் இல்லை. கோட்டாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் எந்த உறுப்பினரும் அவர்களின் தொகுதிக்கு செல்லும் நிலை தற்போது இல்லை. அவ்வளவு எதிர்ப்பு மனநிலையோடு மக்கள் இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், கோட்டாவின் இராணுவ சிந்தனைக்கும் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே உண்டு.

அப்படியான நிலையில், இடைக்கால அரசாங்கத்தை சஜித் பொறுப்பேற்று, குறுகிய காலத்துக்குள்ளேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பினை பாராளுமன்றத்துக்குள் நிறைவேற்றிக் கொள்வதுதான் இருக்கின்ற ஒரே வழி. ஏனெனில், தற்போதுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று அதிகார ஒழிப்பினை பாராளுமன்றத்துக்குள் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு என்பது மிகப் பிரகாசமானது. அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு இணங்கவே செய்வார்கள். அதன் மூலம் கோட்டாவின் நீக்கத்தையும் சாத்தியப்படுத்தலாம்.

அதனையெல்லாம் தாண்டி, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியது பிரதானமானது. அதற்கு நீண்ட திட்டமிடல்களுடனான முன்னோக்கிய நகர்வு அவசியம். அதனை, பிரதான எதிர்க்கட்சியாக செய்ய வேண்டிய பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு. அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தை மக்களிடம் கோரும் தார்மீகத்தை அந்தக் கட்சி இழந்ததாகிவிடும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .