2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

இலங்கையின் பொருளாதார பிரச்சினையை ஜே.வி.பியால் தீர்க்க முடியுமா?

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 29 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

 

இலங்கை இன்று சந்தித்துள்ள பொருளாதார பிறழ்வு நிலையை, தமக்குச் சாதகமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளில் முன்னணியில் நிற்பது ஜே.வி.பி கட்சியாகும். 

தன்னுடைய பயங்கரவாத வரலாற்றை, அதைக் கண்டிராத, அறிந்திராத இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருந்து மறைக்கவும், தனது மார்க்ஸிஸவாத அடையாளத்தை மறைக்கவும், அரசியலுக்குப் புதிதான தாராளவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்வோரோடு கைகோர்த்துக்கொண்டு, என்.பி.பி (தேசிய மக்கள் சக்தி) என்ற புதுப்பெயரில், புது சின்னத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கோடு “தேர்தலை நடத்து; தேர்தலை நடத்து” என்று கூக்குரலிட்டுக் கொண்டும், அக்கட்சி களத்தில் இறங்கியுள்ளது. 

‘ஜே.வி.பிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து இருக்கிறது’ என்ற கருத்தையும் ஜே.வி.பி மிக நாசூக்காகக் கட்டமைத்து வருகிறது. பொருளாதாரப் பிறழ்வு நிலை, இலங்கை மக்களை பேரதிர்ச்சிக்கும் பேரவலத்துக்கும் ஆளாக்கியது என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. ஆகவே, பிரதான கட்சிகள், அரசியல்வாதிகள் மீது, மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். 

இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வெறும் மூன்று சதவீதமாகவே உள்ள தனது வாக்குவங்கியைப் பெருப்பித்துக்கொள்ள, பகீரதப் பிரயத்தனத்தில் ஜே.வி.பி ஈடுபட்டுள்ளது. ஆனால், பொருளாதார மீட்சிக்கு ஜே.வி.பியினர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அதற்கு அவர்கள் வழங்கும் பதில்கள் நகைப்புக்கு உரியனவாகவும் சின்னப்பிள்ளைத் தனமானதாகவும் இருக்கின்றன. 

வௌிநாட்டிலுள்ள இலங்கையர்கள் டொலர் அனுப்புவார்கள். நாம், திருக்கோணமலை எண்ணெய்த் தாங்கிகளை மீளக்கட்டியமைத்து, அதில் எரிபொருளை வாங்கிச் சேமித்து, கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி பணம் சம்பாதிப்போம். எரிபொருள் விலை குறையும் போது வாங்கி, சேமித்து, கூடும் போது விற்போம் என கதையளந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், இந்தக் கதையளப்பு கூட, ஒருவகையில் அவர்களுக்குச் சாதகமானதாகவேதான் இருக்கிறது. பொருளியல் என்பது ஆழமானதும், சிக்கலானதுமானதொரு நிபுணத்துவப் பரப்பு. சாதாரண மக்களுக்கு பொருளியலை விளங்கப்படுத்துவது கடினம். குறிப்பாக, ‘பருப்பொருளியல்’; அது சார்ந்த நிதிக்கொள்கை, பணக்கொள்கை, பணவீக்கம் என்பன எல்லாம் சாதாரண மக்களால் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியவிடயங்கள் அல்ல. 

இதனால்தான், சர்வதேச நாணய நிதியம் இன்று இலங்கைக்கு அங்கிகரித்துள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதியை, வங்கியில் வாங்கும் கடனோடு, அல்லது இலங்கை வௌிநாடுகளிடம் வாங்கும் கடனோடு ஒப்பிட்டு, சாதாரண மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஜே.வி.பி சொல்லும் ‘பொருளதார தேவதைக் கதை’கள், அது எவ்வளவு தூரம் நடைமுறைச்சாத்தியம் அற்றதாயினும், சாதாரண மக்களால் அதைக் கிரகிக்க முடிவதால், அதை மக்கள் உண்மை என நம்பும் சாத்தியம் அதிகம்.

இந்த இடத்தில்தான், இன்னொரு கூட்டம், ‘ஜே.வி.பிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போமே’ என்ற ரீதியிலான பிரசாரத்தையும் தொடங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளின் போது, ​​மார்க்சிஸ கட்சிகளின் பிரபல்யம், பல காரணங்களுக்காக அதிகரிப்பதை நாம் அவதானிக்கலாம்.

முதலாவதாக, மார்க்சிஸ சித்தாந்தம் தொழிலாளர்களின் உரிமைகள், சமூக நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகச் சொல்கிறது. இது, தற்போதைய பொருளாதார அமைப்பால், தாம் பின்தங்கியதாக உணரும் மக்களைக் கவர்வதாக அமைகிறது. 

இரண்டாவதாக, பொருளாதாரத்தில் அரசின் தலையீடு அவசியம் என மார்க்சிஸ கட்சிகள் சொல்கின்றன. இது கட்டுப்பாடற்ற சந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, ஒரு தீர்வாகக் கருதப்படுவதோடு, அரசு தலையிட்டால் பிரச்சினைகள் வராது என்ற பாமரச் சிந்தனைக்கு, இது கவர்ச்சியானதாக இருக்கிறது. 

மூன்றாவதாக, மார்க்சிஸ கட்சிகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, செல்வந்த உயரடுக்குகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இது, தற்போதைய அதிகார கட்டமைப்பில் கோபம், ஏமாற்றம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மக்களை ஈர்ப்பதாக அமைகிறது. 

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடிகளின் போது, மார்க்சிஸ, சோஸலிஸக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கும் அவசரத்தில், சிந்திக்காமல் முடிவுகளை எடுப்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உலகத்தில், அதிக கனிய எண்ணை வளமுள்ள நாடு வெனிசுவேலா. தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவிடம் சவுதியை விட அதிக எண்ணை வளமுண்டு. இன்று, உலகைத் தன்பால் திரும்பிப் பார்க்கச் செய்யும் பிரம்மாண்டங்களைச் சவுதி சாதித்துக்கொண்டிருக்கும் போது, வெனிசுவேலா மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். 

பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் மார்க்சிஸ அரசியல் கட்சிகளுக்கு உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, அவர்களின் சித்தாந்தம் பெரும்பாலும் பொருளாதாரத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகும். கட்டுப்பாடற்ற சந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, பாமரச் சிந்தனையில் இதுவே பொருத்தமான தீர்வாகத் தோன்றினாலும், நடைமுறையில், வினைத்திறனின்மை, ஊழல், உற்பத்தித்திறன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். 

வெனிசுலாவைப் பொறுத்தவரை, தொழில்களை தேசியமயமாக்குதல், பொருளாதாரத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகிய கொள்கைகள், உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனின் சரிவுக்கு வழிவகுத்தது, அத்துடன் வீங்கிய மற்றும் இலாபமற்ற அரசுக்கு சொந்தமான துறை, தனியார் முதலீட்டின் சரிவுக்கு வழிவகுத்ததுடன், புத்தாக்கத் தொழில்முனைவோருக்கு சந்தர்ப்பத்தையும், ஊக்கத்தையும் வழங்கவில்லை. 

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாடுகள் தட்டுப்பாடுகளுக்கும், பெரும் கறுப்புச் சந்தைக்கும் வழிவகுத்தது. இது பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. 

மார்க்சிஸ அரசியல் கட்சிகளுக்கு உள்ள மற்றொரு சவால் என்னவென்றால், அவர்களின் கருத்தியல் பெரும்பாலும் நடைமுறை தீர்வுகளை விட கருத்தியல் தூய்மைக்கு முன்னுரிமை அளிப்பதாக அமைகிறது. வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் கொள்கைகள், பொருளாதாரத்தின் சிக்கலான யதார்த்தங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கடுமையானதாகவும் நெகிழ்ச்சித் தன்மையற்றதாகவும் இருந்தன. இது மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, நெகிழ்வடையும் தன்மை இல்லாமைக்கு வழிவகுத்தது. 

மேலும், மார்க்சிஸ அரசியல் கட்சிகள் பெரும்பாலும் சர்வதேச சமூகத்துடனும் உலக சந்தைகளுடனும் விரோதமான உறவைக் கொண்டிருக்கின்றன. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல! 

வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, அரசாங்கம் தொழில்களை தேசிய மயமாக்கியமை மற்றும் விலைக் கட்டுப்பாடுகளை விதித்தமை என்பன ஏற்றுமதியின் சரிவுக்கு வழிவகுத்தது. அத்துடன் சர்வதேச கடன் மற்றும் முதலீட்டுக்கான அணுகல் இல்லாது போனமை, வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளியது. 

சுருக்கமாகச் சொன்னால், பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில், மார்க்சிஸ அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு வெனிசுவேலா ஒரு நல்ல உதாரணம்.

1998இல், வெனிசுவேலாவில் வருமான சமத்துவமின்மை மற்றும் வறுமையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த மார்க்சிஸ தலைவர் ஹியூகோ சாவேஸை, அம்மக்கள் தமது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், பல ஆண்டுகளாக, சாவேஸின் கொள்கைகள், பொருளாதாரத்தின் சீரழிவுக்கு வழிவகுத்ததேயன்றி, மக்கள் எதிர்பார்த்த சோஸலிஸ சொர்க்கம் அவர்களுக்கு கிடைக்கவேயில்லை. 

அதிக பணவீக்கம், அடிப்படை பொருட்களின் பற்றாக்குறை ஆகியன பெரும்பாலான வெனிசுவேலா மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மோசமான சரிவை மட்டுமேதான் வழங்கியது. சாவேஸின் கொள்கைகளில் தொழில்களை தேசியமயமாக்குதல், பொருளாதாரத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துதல், அத்தியாவசியப் பொருட்களின் மீது விலைக் கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை அடங்கும். 

இந்தக் கொள்கைகள், செல்வத்தை மறுபங்கீடு செய்வதையும், நாட்டில் வறுமைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததாகவே பிரசாரம் செய்யப்பட்டன. ஆனால், நடைமுறையில், அவை திறமையின்மை, வினைத்திறனின்மை, ஊழல் மற்றும் உற்பத்தித்திறன் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. 

தேசியமயமாக்கப்பட்ட தொழில்கள் வீங்கிப் பெருத்து, இலாபமற்றதாக மாறின.  அதேநேரத்தில் விலைக் கட்டுப்பாடுகள் பற்றாக்குறையையும் பெரும் கறுப்புச் சந்தையையும் உருவாக்கின. 

சாவேஸைத் தொடர்ந்து, அடுத்த சோஸலிஸ நாயகனான நிகோலாஸ் மதுரோவின் ஆட்சியிலும் இந்தநிலை மிக மோசமாகவே தொடர்கிறது. படிப்படியாக அதிகரித்து வரும் வெனிசுவேலாவின் பணவீக்கமானது, 2018இல் 1,000,000% வீதத்துக்கு அதிகமானது. 2019 ஐ.எம்.எஃப் கணிப்பின்படி, பணவீக்கம் 10,000,000% ஆக இருந்தது. உலகில் அதிக கனிய எண்ணை வளமுள்ள நாட்டின் நிலை இதுவென்றால் நம்ப முடிகிறதா? மார்க்ஸிஸத்தின் சாதனை இது!

ஆகவே, இலங்கையின் பொருளாதார மற்றும் ஆட்சிப் பிறழ்வுக்கு ஜே.வி.பி (அல்லது என்.பி.பி) ஒரு சர்வரோக நிவாரணி என்று நம்புவதற்கு முன்னர், அவர்களின் பொருளாதாரத் திட்டம் நடைமுறைச் சாத்தியமானதா, அந்தத் தேவதைக் கதைகள் உண்மையில் நடக்கக்கூடியவையா என்று சிந்திப்பது அவசியம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .