2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மீது சீனாவுக்கு பொருளாதாரப் பிடி; இந்தியாவுக்கு அரசியல் பிடி

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் - 02: 

என்.கே. அஷோக்பரன்  


(கடந்த வாரத் தொடர்ச்சி)

பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான காதலுக்கான ஊக்கி, ஒருவகையில் இந்தியாதான். இருநாடுகளும் இந்தியாவுடன் கொண்டுள்ள மோதல் நிலைதான், ‘எதிரியின் எதிரி நண்பன்’ என, இந்தக் காதலின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.   

ஆனால், இது சமபலமுள்ள இரண்டு நாடுகளின் இணைவு அல்ல. இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், சீனா என்ற பொருளாதார இராட்சதனோடு, பாகிஸ்தானை ஒப்பிட முடியாது. இந்தப் பலச்சமன் இன்மையின் காரணமாக, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு, ‘கடன் பொறி’க்குள் பாகிஸ்தானை சிக்கவைத்துள்ளதாகப் பல ஆய்வாளர்களும் கருத்துரைக்கிறார்கள்.   

எது எவ்வாறாயினும், பாகிஸ்தான் - சீனா உறவு என்பது, இலங்கைக்கான பொருத்தமான முன்னுதாரணம் அல்ல. இதற்கான அடிப்படைக் காரணம், இலங்கையும் இந்தியாவும் எதிரி நாடுகளோ, வைரி நாடுகளோ அல்ல. மாறாக, இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் என்பதோடு, இந்த உறவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு உண்டு.   

1947க்கு முன்னர், பாகிஸ்தான் என்ற ஒரு நாடோ, அத்தகைய தேச அடையாளமோ, மக்கள் கூட்டமோ இருக்கவில்லை. பாகிஸ்தானின் உருவாக்கம் என்பது, இந்தியாவுக்கு மாற்றான முஸ்லிம் தேசம் என்பதுதான். ஆகவே, இந்திய எதிர்ப்பு என்பது, பாகிஸ்தானின் பெருந்திரள்வாத அரசியலுக்கு அத்தியாவசியமானதொன்று.   

ஆனால், இலங்கையின் நிலை அவ்வாறானதல்ல. ஆகவே, பாகிஸ்தானைப் போன்று இந்திய எதிர்ப்பு, முழுமையான சீனச் சார்பு நிலைப்பாட்டை இலங்கை எடுத்துக்கொள்வது, இலங்கையின் நலன்களுக்கு ஏற்புடையதல்ல.   

இன்றைய சூழலில், இலங்கைக்கு சீனா அவசியம். இலங்கைக்கு, சீனா இராணுவ உதவிகள், உட்கட்டமைப்பு உதவிகள் என நிறைய உதவிகளைக் கடந்த காலத்தில் வழங்கியிருக்கிறது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், இலங்கையின் உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதி என்பன சீனாவின் கொடைகளே ஆகும்.  

ஆனால், அன்றைய சீனாவிலிருந்து, இன்றைய சீனா, அதன் நோக்கத்தில் வேறுபட்டது. இன்று, சீனா தன்னை உலகின் முதல்நிலை வல்லரசாக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.   

இந்தப் பயணத்தில், சீனாவிடம் உள்ள பெரும் ஆயுதம், அதன் பொருளாதார பலம் ஆகும். அதைப் பயன்படுத்தி, நாடுகளைத் தன்வசமாக்கிக் கொண்டு, தனது இலட்சிய பயணத்தைப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், இதுவரை வெற்றிகரமாகவே சீனா நடத்திக்கொண்டிருக்கிறது.  

ஆனால், இலங்கைக்கு இந்தியாவும் அவசியம். தெற்காசியாவில் இந்தியாவின் முக்கியத்துவத்தைக் குறைத்துமதிப்பிட்ட ஒவ்வொரு தெற்காசிய அரசியல் தலைமையும் அதன் பிரதிபலனை மிக மோசமாக அனுபவித்திருக்கிறது.   

இந்தியா, உலக வல்லரசாக விரும்புகிறதோ இல்லையோ, தெற்காசியாவின் ‘பெரியண்ணன்’ ஸ்தானத்தை அது ஒரு போதும் இழக்காது. அதற்காக இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்பது, வரலாறு தெரிந்தவர்களுக்குப் புரியும்.   
இலங்கையில் சீனாவுக்குப் பொருளாதாரப் பிடியொன்று இருக்கிறதென்றால், இலங்கையில் இந்தியாவுக்கு அரசியல் பிடி ஒன்று இருக்கிறது. அந்த அரசியல் பிடியின் அடிப்படை, இலங்கையின் வாழும் தமிழ் மக்கள் ஆவார்.   

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள இணங்கிய உறவும், இந்தியாவும் மேற்கு நாடுகளும் சீனாவுடன் கொண்டுள்ள முரண்பாடுகளும், இலங்கையின் அரசியலை இனப்பிரச்சினை என்ற அடிப்படையைக் கொண்டு, ஸ்திரமிழக்கச் செய்யும் வல்லமையை அவற்றுக்கு வழங்குகின்றன. இந்தத் துருப்புச் சீட்டு, இந்தியாவின் கையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.   

சில தமிழ் அரசியல் தலைமைகள், இந்தியாவை விமர்சிப்பதும் இதனால்தான். இந்தியா, இலங்கை தமிழர்களின் வேதனையைத் தனது துருப்புச் சீட்டாக, தன்னுடைய நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் அது.   
இதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. அதனால்தான், இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி, சீனா பேசுவது இல்லை. இலங்கையின் தமிழ்த் தரப்போடு, சிறுபான்மையினரோடு சீனா நேரடி உறவுகளைப் பேணுவதும் இல்லை. இலங்கையில், சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்கு, அது தேவையில்லாத ஒன்று என்று, சீனா கருதுகிறது.   

ஆனால், இலங்கையின் சிறுபான்மையினரை, சீனா கண்டுகொள்ளாததைப் போல, இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்துவிட முடியாது. இனப்பிரச்சினை என்ற துருப்புச் சீட்டு, ஒரு கத்தியைப் போல, இலங்கைக்கு மேல் தொங்கிக் கொண்டே இருக்கும்.   

இலங்கையின் சில தலைமைகள், சீனா ஏனைய பல நாடுகள் மீது கொண்டுள்ள செல்வாக்கும், சீனாவின் வீட்டோ அதிகாரமும் தம்மை மேற்கினதும், இந்தியாவினதும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதுகாக்கும் என்று எண்ணலாம். ஆனால், அந்த எண்ணம் எவ்வளவு தூரம் யதார்த்தத்தில் சாத்தியமாகும் என்பது கேள்விக்குரியதே.   

இலங்கை, தன்னைச் சீனாவின் இஸ்‌ரேலாகக் கருதுவது, இலங்கையின் ‘ஈகோ’வுக்குப் பால்வார்க்கலாம், ஆனால், அது யதார்த்தமல்ல; இஸ்‌ரேலின் இராணுவ, பொருளாதாரப் பலத்துக்கு அருகில் கூட இலங்கை இல்லை.   

கென்யாவைப் போல, ட்ஜிபூட்டியைப் போல, எகிப்தைப் போல சீனா கடன்வழங்கியுள்ள, முதலிட்டுள்ள பல்வேறு நாடுகளில் ஒன்று இலங்கை. இலங்கைக்கு என்று குறிப்பிட்ட பூகோள தந்திரோபாய முக்கியத்துவம் உண்டு; ஆனால், உலகின் ஏனைய வல்லரசுகளோடு போர் புரியும் அளவுக்கு இலங்கையின் பூகோள தந்திரோபாய முக்கியத்துவம், சீனாவுக்குப் பெறுமதிமிக்கதொன்று அல்ல.   

சீனாவின் இராஜதந்திரத்தில், போர் என்பது கடைசி அஸ்திரமாகவே இருக்கிறது. அதனை, இலங்கைக்காக சீனா பயன்படுத்தாது என்ற உண்மை, இலங்கை தலைமைகளுக்குப் புரிய வேண்டும். 

இந்தியாவையும், மேற்கையும் பகைத்துக்கொண்டு அல்லது, உதாசீனம் செய்துகொண்டு, இலங்கை தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடரமுடியாது. 

உண்மையில் இலங்கையின் அரசியல் தலைமைகள் அறிவுபூர்வமாகச் சிந்தித்தால், அவர்கள் முதலில் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். இது இந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகள், தமது கையில் வைத்திருக்கும் துருப்புச் சீட்டின் வலுவைக் குறைக்கும். 

மறுபுறத்தில், தனது பொருளாதாரத் தேவைகளுக்காக தொடர்ந்தும் சீனாவில் மட்டும் தங்கியிராது, கடன்களைத் தாண்டி, சர்வதேச முதலீட்டை இலங்கைக்கு வரவழைக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளைக் கையாண்டு, இலங்கையின் பொருளாதாரத்தை நீண்டகாலத்தில் கடன்பொறியிலிருந்து மீட்டெடுக்கும் தூரநோக்கு நடவடிக்கைகளை, இலங்கை மேற்கோள்ள வேண்டும். 

இது இலங்கையின் மீது சீனா கொண்டுள்ள பிடியின் இறுக்கத்தைக் குறைக்கும். ஆனால், இவற்றைச் செய்யாது, சர்வதேச அரசியல் ஊடாட்டங்களை உதாசீனம் செய்துகொண்டு, சுயலாப தேர்தல் அரசியலுக்காக, இனவாதத்தையும் பெருந்தேசியவாதத்தையும் முன்னெடுத்துக்கொண்டு, இலங்கையை சீனாவின் கடன்பொறியில் இன்னும் இன்னும் அழுத்திக்கொண்டே செல்லும் அரசியலை, இலங்கையின் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பார்களேயானால், அது இலங்கையின் சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாக அமைந்துவிடும்.   
சர்வதேச அரசியலில் சீனா நல்லது, இந்தியாவும் அமெரிக்காவும் கெட்டவை; இந்தியாவும் அமெரிக்காவும் நல்லவை, சீனா கெட்டது என்ற கறுப்பு - வௌ்ளை, இரு எதிர்நிலை வகைப்படுத்தலுக்குள் அடக்கிவிடுவது சிறுபிள்ளைத்தனமானது. 

மனித உறவுகள் எப்படிச் சிக்கலானதோ, அதுபோலவே நாடுகளிடையேயான உறவுகளும் சிக்கலானவை. அதுவும், பெருமளவுக்குப் பலச் சமமின்மை கொண்டுள்ள நாடுகளிடையேயான உறவு மிகக் கடினமானது. அதனை முறையாகக் கையாள்வதில்தான் வெற்றி தங்கியிருக்கிறது. 

ஆனால், இதனைச் சாதிக்க அறிவும் ஆற்றலும் முறையான ஆலோசகர்களைக் கொண்டதும், ஆலோசகர்களின் ஆலோசனைகளுக்கு செவிமடுக்கும் இயல்பும் கொண்ட தலைமைகள் இலங்கைக்குத் தேவை. தமது சுயலாபத்தையும் தேர்தல் வெற்றியையும் மட்டும் இலக்காகக் கொண்டு இயங்கும் தலைமைகளால், இலங்கைக்கு ஒருபோதும் உய்வில்லை.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .