2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

காலத்தின் தேவை

George   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'வானிலிருந்த விழுகின்ற ஒரு துளி மழை நீரையேனும் வீணாகக் கடலைச் சென்றடைய விடமாட்டேன்' என மகா பராக்கிரமபாகு மன்னன் சொன்ன அந்த காலத்திலும் சரி, இன்றைய காலத்திலும் சரி, நீர் வளம் என்பது எம்மவர்களின் வாழ்கையோடு பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

பாரிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டமை எல்லாம் மன்னர் காலத்தோடு மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று நினைப்பவர்களுக்கு, இலங்கையில் அவ்வாறானதொரு பாரிய நீர்த்தேக்க நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது எவ்வளவு தூரம் தெரியும் என்பது சந்தேகமே.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இலட்சக்கணக்காக மக்களுக்கு பயனளிக்கும் விதமாக  மொரகஹகந்த, களு கங்கை அபிவிருத்தித் திட்டம் கோடிக்கணக்கான டொலர்களை வாரியிறைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மொரகஹகந்த, களுகங்கை அபிவிருத்தித் திட்டமானது மாத்தளை மாவட்டத்தின்  நாவுல, லக்கல, பல்லேகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை தனது திட்ட எல்லையாக கொண்டுள்ளது.

மொரகஹகந்த மற்றும் களுகங்கை ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்கள்,  இந்த நீர்த்தேக்கங்களை இணைக்கும் நீர்வழிப்பாதை, இரண்டு நீர்தேக்கங்களிலிருந்தும் மேலதிக பயன் பெற மின் உற்பத்தி நிலையம், மொரகஹகந்த -களுகங்கை மாற்றுப் பாதை, மேல் ஹெலகரையை சுற்றி வாவி என்பன இந்தத் திட்டத்துக்குள் அடங்குகின்றன.

மொரகஹகந்த நீர்த்தேக்கம்

570 மில்லியன் கனமீற்றர் நீர் கொள்ளளவுடன் கூடிய நீர்த்தேக்கமாக மொரகஹகந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு வருகின்றது. 61.3 மீற்றர் உயரம் 470 மீற்றர் நீளம் கற்களாலும் 58.0 மீற்றர் உயரம் 375 மீற்றர் நீளம் கொங்கிறீட்டாலும் 21.5 மீற்றர் உயரம் 275 மீற்றர் நீளம் மண்ணாலும் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு மற்றும் மின் உற்பத்தி நிலைய நிர்மாணத்துக்காக சீன அபிவிருத்தி வங்கி 85 சதவீத (28,952.1 மில்லியன் ரூபாய் ஃ 214.46 மில்லியன் அமெரிக்க டொலர் ) நிதியுதவியையும் உள்நாட்டு நிதியொதுக்கீடு 15 சதவீதம் (4,920.5 மில்லியன் ரூபாய்ஃ 37.85 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவிடப்பட்டுள்ளன.

களுகங்கை நீர்த்தேக்கம்

களுகங்கை நீர்த்தேக்கமானது 248 மில்லியன் கனமீற்றர் நீரை கொள்ளளவாகக் கொண்டதாக நிர்மாணிக்கப்படுவதுடன்,  கற்களாலான பிரதான அணைக்கட்டு 68 மீற்றர் உயரத்துடனும் 568 மீற்றர் நீளமானதாகவும் அமைக்கப்பட்டுள்ளதுடன், உப அணைக்கட்டு  28 மீற்றர் உயரத்துடனும் 719 மீற்றர் நீளமானதாகவும் அமைக்கப்படுகின்றது.

நீர்வழி/சுரங்கப்பாதை

மொரகஹகந்த மற்றும் களுகங்கை ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களை இணைக்கும் நீர்வழிபாதையானது 472 மீற்றர் நீளமானதாகவும் சுரங்கபாதை 7.85 கிலோமீற்றர் நீளமானதாகவும் அமைக்கப்படுகின்றது.
களுகங்கை நீர்த்தேக்கத்தின் பிரதான அணைக்கட்டை அமைக்க குவைத் அபிவிருத்தி முதலீடு 4,883.03 மில்லியன் ரூபாய், சவூதி அரேபிய முதலீடு, 6,779.94 மில்லியன் ரூபாய், ஓபேக் அமைப்பு 2,358.24 மில்லியன் ரூபாய் மற்றும் உள்நாட்டு முதலீடு 2,434.28 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

மொரகஹகந்த, களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தை அமைப்பது தொடர்பில் கடந்த 40 வருடங்களுக்கு முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் அதனை நிறைவேற்றுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டிருந்தன. விவசாய மற்றும் கமநல அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எடுத்த முயற்சியின் காரணமாக 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி மொரகஹகந்த, களுகங்கை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள விவசாய மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர். குறித்த மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள விவசாயத்துக்கு தேவையான நீர் பற்றாக்குறை நிவர்த்திச் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் ஊடாக 82 ஆயிரம் ஹெக்டேயர் விவசாய நிலத்துக்கு இரண்டு போகங்களுக்கும் நீரைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக அதிக விளைச்சலை பெறக்கூடும் என்பதுடன் விரைவான விசாய வளர்ச்சிக்கு இது உறுதுணையாக அமையவுள்ளது. இதன் ஊடாக 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரை இலாபம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த நீர்த்தேகத்தின் ஊடாக வருடாந்தம் 3,000 டொன் குளத்து மீன் உற்பத்தி செய்ய முடியும் என கணக்கிடப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக வருடாந்தம் 225 மில்லியன் ரூபாய் வருமானமாக பெற்றுக்கொள்ளப்படும்.

இதேவேளை,  இந்தத் திட்டத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் வருடாந்தம் 336 மில்லியன் ரூபாயை அரசாங்கத்தால் சேமிக்க முடியும்.

எம்மை போன்ற வளர்முக நாடுகளில் அபிவிருத்திக்கு இவ்வாறான நீர்த்தேக்கத் திட்டங்கள் கைகொடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆட்சிக்கு வரும் அரசாங்கள் தமது சுயலாபத்தையும் அரசியல் இலாபத்தையும் மட்டும் பார்ப்பதைவிடுத்து இவ்வாறான தூரநோக்குடன் செயற்படும் போது மட்டுமே அந்த நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும்.

ஒரு தொழிலை மேற்கொள்ள அவசியம் இருந்தும் அதற்கு தேவையான வளங்கள் இல்லாவிட்டால் அந்தத் தொழில் எம்மைவிட்டு அகற்றப்படும் நிலைக்கும் தள்ளப்படும். விவசாயமும் அப்படிதான், நிலப்பரப்பு குறைவான நாடுகளே கடலை நிரப்பி விவசாயம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், விவசாயத்துக்கான நிலம் இருந்தும் தேவையான நீர் வசதியின்றி விவசாயம் கைவிடப்படும் நிலையை தடுக்க, இவ்வாறான நீர்த்தேக்கம் காலத்தின் தேவையாகும்.

வரலாற்று சிறப்புமிக்க, களுகங்கை நீர்த்தேகத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (25) காலை சுபமுகூர்த்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .