2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்

Super User   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.சஞ்சயன்)

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலையே தற்போதுள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாக முன்னரே, அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று, பலர் கருதுகின்றனர்.

மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் இந்த அறிக்கை இலங்கைக்கு கடுமையானதொன்றாக அமையலாம் என்றே கருதுகின்றனர். அத்துடன் அரசாங்கத் தரப்பும் இது சாதகமற்றதாக அமையும் என்றே கருதுகிறது.

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் வெளிவரப் போகும் இந்த அறிக்கை இலங்கை தொடர்பான ஒரு பெரும் புயலைக் கிளப்பி விட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே, அது சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்யும் வகையில் அமைந்திருக்கும் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றிய ஆதாரங்களை அதிகளவில் ஐ.நா நிபுணர்கள் குழு சேகரித்துள்ளதாக கருதப்படுவதால் தான் இந்தக் கருத்து வலுப்பெற்றுள்ளது.

அதேவேளை, இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அது அரசுக்கு சாதகமற்ற முறையில் இருந்தால்- இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி உள்ளது.

கடந்த வருடம் இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போது அதை நிராகரித்த அரசாங்கம், நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்து விசாரணை நடத்தவும் முடியாது, அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைக்கவும் மாட்டோம் என்றும் கூறியது. பின்னர் , ஏதோ ஒரு மாற்றமாக. வேண்டுமானால் இங்கு வந்து நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்து விட்டுப் போகலாம் என்று கூறியது.

அரசாங்கம் இறுக்கமான பிடிவாதங்களைக் கடைப்பிடித்தாலும் கூட, உள்ளுக்குள் ஒருவித உதறல் அதற்கு இருந்து கொண்டு தான் இருந்தது.  அதனால் தான் நியுயோர்க்கிற்கு அரசின் பிரதிநிதிகளை அனுப்பி நிபுணர்கள் குழுவை சந்திக்க வைத்தது.

இந்தச் சந்திப்பு பற்றி தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது அதுபற்றிப் பேசாமல் இருந்தது அரசாங்கம். ஆனால் கடந்தவாரம் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், முதல் முறையாக இந்தச் சந்திப்பு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மையை அவர் இப்போது தான் போட்டு உடைத்துள்ளார்.

இதிலிருந்து அரசாங்கம் முன்னர் கூறிய இறுக்கமான நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.தமது அமைச்சின் அதிகாரிகள் ஐ.நா நிபுணர்கள் குழுவை சந்தித்துப் பேசியதாக கூறியுள்ள அமைச்சர் பீரிஸ், அவர்கள் எதற்காக சந்தித்தார்கள், என்ன பேசினார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் இந்தச் சந்திப்பானது,இலங்கை அரசாங்கத்தின் பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை அரசுக்குப் பாதகமான முறையில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்பதை அணுமாணிக்க கூடியதாக உள்ளது.

அதேவேளை,  ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை எல்லோருமே இந்த நிபுணர்கள் குழு அரச மற்றும் இராணுவ அதிகாரிகளைக் குற்றம் சுமத்தலாம் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனால் இந்த அறிக்கையை அரசாங்கம் மிகுந்த அச்சத்தோடு தான் எதிர்பார்த்துள்ளது. ஆனால் அதைப் பெரும்பாலும் வெளிக்காட்டிக் கொள்வதையும் தவிர்க்கிறது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையலாம். ஏற்கனவே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போதும் உண்ணாவிரதம், பேரணி என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.  அதைவிடத் தீவிரமான போராட்டங்கள் நடத்தி அரசுக்கான மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆனால், இத்தகைய போராட்டங்களின் மூலம் ஐ.நாவின் நடவடிக்கைகளைத் தடுத்து விட முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.

இலங்கை அரசாங்கம் எத்தனை எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை அமைத்து விசாரணை நடத்தும் முடிவைக் கைவிட்டுப் பின்வாங்கவில்லை. அவ்வப்போது அவர் மென்போக்குடன் நடந்து கொண்டாலும் கூட, அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  அவரது முடிவை மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் அது இலங்கைக்கு எதிரான பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதேவேளை, இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதும் அதை பான் கீ மூன் வெளிப்படுத்துவாரா, இல்லையா என்ற கேள்வி இப்போது முதன்மை பெற்றுள்ளது.

அவர் அதை வெளிப்படுத்தலாம், அல்லது அறிக்கை ஒன்றின் மூலம் அதன் முக்கிய பரிந்துரைகளை வெளிப்படுத்தலாம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு அந்தப் பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவைக் கொண்டே செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தலாம் என்கிறது. அதேவேளை, இந்த அறிக்கை மீதான நடவடிக்கை ஆரம்பிக்கும் வரை அவர் வெளிப்படுத்த மாட்டார் என்கிறது வேறொரு தரப்பு. இப்படியாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் இறுதி முடிவு என்பது பான் கீ மூனின் கையில் தான் உள்ளது.

ஆனால், அவர் இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை. ஒன்றில் ஐ.நா. பாதுகாப்புச்சபை ஊடாக எதையாவது செய்ய வேண்டும் அல்லது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஊடாக செய்ய வேண்டும்.

இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஜுன் மாத அமர்வில் பான் கீ மூன் சமர்ப்பிக்கலாம் என்றும் அதன் பின்னர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதைச் செய்யாமல் பான் கீ மூன் வேறு எதையும் செய்ய முடியாது. அப்படிச் செய்யாது போனால்,  இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.  எனவே மேல் நடவடிக்கை என்பது நிச்சயம் இடம்பெறவே செய்யும்.

மனிதஉரிமைகள் பேரவை மற்றும், பாதுகாப்புச்சபை ஆகியவற்றின் கவனத்துக்கு இந்த அறிக்கை போனால், அடுத்து அதன் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

இதெல்லாம் இலங்கை அரசுக்கு அதிகளவில் நெருக்கடியைக் கொடுக்கும். சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுப்பதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பவும் இல்லை- விரும்பப் போவதும் இல்லை. இந்தநிலையில் அரசுக்கான சர்வதேச அழுத்தங்கள் தீவிரமடைவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

அண்மையில் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையும், ஆதாரமாக முன்வைத்த வீடியோ இணைப்பையும்  அரசாங்கமும், படைத்தரப்பும் நிராகரித்திருந்தாலும், சர்வதேச விசாரணைகளின் போது இவற்றையெல்லாம் பொய் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட முடியாது. அதை நிரூபிக்க வேண்டும்.

இலங்கை அரசிடம் இது பொய் என்று நிரூபிப்பதற்கு உள்ள தொழில்நுட்பத்தை விட, மிகவும் உயர்வான தொழில்நுட்பங்கள் சர்வதேச விசாரணையாளர்களிடம் இருக்கலாம்.

இதுபோன்ற பல ஆதாரங்களை நிபுணர்கள் குழு பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது.  எனவே தான் அரசாங்கம் தமக்குச் சாதகமற்ற அறிக்கையை எதிர்பார்க்கிறது போலுள்ளது.

அடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட இலங்கை தொடர்பான மனிதஉரிமை அறிக்கை அரசாங்கத்தை சாடும் வகையில் அமைந்துள்ளது.

40 பக்கங்களில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, முற்றிலும் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டும் வகையிலும், அழுத்தம் கொடுக்கும் வகையிலும் அமைந்த ஒன்று.

முன்னர் இப்படியான அறிக்கைகளில் விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும். இப்போது புலிகள் இல்லாதுள்ள நிலையில், அரசதரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

இவை மட்டுமன்றி கடந்தவாரம் கொழும்பு வரவிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கின் பயணத்தையும் அரசாங்கம் பிற்போட்டுள்ளது. அவர் இலங்கை வருவதற்குத் தெரிவு செய்த காலம் மிகவும் முக்கியமானது.

அவரது கடந்தவாரப் பயணம் பிற்போடப்பட்டாலும் இந்த வாரமோ அடுத்த வாரமோ அவர் கடுமையானதொரு செய்தியுடன் வரப் போவது உறுதி. இவையெல்லாம் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இறுகி வருவதற்கான அறிகுறிகளாகவே தென்படுகின்றன.

வரும் நாட்களில் இந்த அழுத்தங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் எப்படித் தப்பித்துக் கொள்ளப் போகிறது என்பது தான் இப்போது அதிகமாகியுள்ள எதிர்பார்ப்பு.
 


  Comments - 0

 • im ilyas Wednesday, 13 April 2011 11:51 AM

  UN always

  Reply : 0       0

  mcafareed Wednesday, 13 April 2011 08:00 PM

  என்னதான் இருந்தாலும் போனஉயிர் கிடைக்கவா போகிறது

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .