2022 ஜனவரி 22, சனிக்கிழமை

இரண்டு வருடங்கள் பயணித்த பஸ் இடைநிறுத்தம்

Editorial   / 2021 நவம்பர் 25 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மாகாணங்களுக்கிடையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள
நிலையில், நுவரெலியாவிலிருந்து மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை வரை 2 வருடங்களாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இ.போ.ச பஸ் சேவை இதுவரை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என, பயணிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

தினமும் அதிகாலை 3.20 மணிக்கு நுவரெலியா பஸ் டிப்பாவுக்குச் சொந்தமான என்.டி- 9976
என்ற பஸ்ஸானது, நுவரெலியா பஸ் தரப்பிடத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து காலை 8.30 மணிக்கு மஹரகம அபெக்ஸா வைத்தியசாலையை வந்தடைந்து, மீண்டும் 1 மணிக்கு நுவரெலியா  நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும்.

அத்துடன், நுவரெலியா, இராகலை, கந்தப்பளை, நானுஓயா, தலவாக்கலை, கொத்மலை,
பூண்டுலோயா, அக்கரப்பத்தனை,டயகம, உடபுஸல்லாவ ஆகிய பிரதேசங்களிலிருந்து, மஹரகம அபெக்ஷாவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகவும் கிளினிக் நடவடிக்கைக்காகவும் தினமும் அதிகளவானோர் வருகைத் தருவர்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக கம்பளை, பேராதனை உள்ளிட்ட
பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இந்த பஸ்ஸை இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தி
வந்துள்ளனர்.

மேலும் இந்த பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போது, குறித்த பஸ்ஸில் ஏ.சி வசதி, நீர் வசதி
உள்ளிட்டவைகளுடன், பஸ்ஸில் பயணிக்கும் நோயாளர்களின் உள நலனுக்கான ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பஸ்ஸின் நவீனமயப்படுத்தலுக்காக நுவரெலியா நகர மக்களால் இரண்டு இலட்ச ரூபாய் நுவரெலியா பஸ் டிப்போவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், குறித்த பஸ்ஸின் சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அபெக்ஷா
வைத்தியசாலைக்கு, சிகிச்சை மற்றும் கிளினிக்காக வரும் நோயாளர்கள் ஓட்டோ மற்றும்
வான்களுக்கு 12,000 – 20,000 ரூபாய் வரை செலவு செய்ய நேரிட்டுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா பஸ் டிப்போவின் முகாமையாளரிடம் வினவியபோது,
தமது டிப்போவிலுள்ள பஸ்களுக்கான பெட்டறிகள் மற்றும் டயர்கள் உள்ளிட்ட வாகன
உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பஸ் சேவையை
இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X