2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கட்டட நிர்மாணப் பொருள் வியாபாரத்தில் மாபியா; மேயர் எச்சரிக்கை

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை எல்லையினுள் கட்டட நிர்மாணப் பொருள்கள் அனைத்தும், நிர்ணய விலையிலேயே விற்கப்பட வேண்டும் எனவும் மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர சபை அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று (31) நடைபெற்ற மாநகர சபையின் பொறியியல், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் வருமான பரிசோதகர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது இவ்விடயம் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்பட்டது.

மக்களுக்கு நிர்ணய விலையில் கட்டட நிர்மாணப் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.  

இவ்விடயம் குறித்து மாநகர மேயர் தெரிவிக்கையில்;

“கொரோனா பெருந்தொற்று அசாதார சூழ்நிலை காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கட்டட நிர்மாணப் பொருள்களுக்கு என்றுமில்லாதவாறு திடீரென கடுமையான விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“இது பற்றி ஆராய்ந்தபோது, இந்த விலையேற்றமானது அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறித்த பொருள்களை விநியோகிக்கும் தரகர்களே தன்னிச்சையாக விலையேற்றம் செய்து, கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இது ஒரு மாபியாவாகும்.

“இந்நிலையில், அம்பாறை மாவட்ட கச்சேரியின் கட்டட நிர்மாணப் பொருள்களுக்கான விலை நிர்ணயக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிர்ணய விலைக்கே கல்முனை மாநகர சபை எல்லையினுள் செங்கல், முண்டுக்கல், முக்கால் இஞ்சிக்கல், கட்டு மண், பூச்சு மண், அத்திவாரம் நிரப்பும் மண், கிறவல் போன்றவை விற்பனை செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையால் கண்டிப்பான உத்தரவு விடுக்கப்படுகிறது.

“அவ்வாறே சீமெந்து மற்றும் கம்பி போன்றவை உரிய கம்பனிகளால் குறிக்கப்பட்ட நிர்ணய விலைகளுக்கே விற்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது.

“அதேவேளை, இப்பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கட்டாயம் பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். நுகர்வோர் கட்டாயம் இப்பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டே, குறித்த பொருள்களை பொறுப்பேற்றுச் செல்ல வேண்டும். பற்றுச்சீட்டு இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருள்கள், மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரால் கைப்பற்றப்படும்.

“மேலும், கட்டட நிர்மாணப் பொருள்களை விநியோகிக்கும் தரகர்களும் வாகனங்களும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டு, அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

“அத்துடன், உரிய வாகனங்கள் கல்முனை மாநகர சபை எல்லையினுள் உட்பிரவேசிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாநகர சபையின் உரிய கள உத்தியோகத்தர்களின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

“பதிவு செய்யப்படாத வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறே பதிவு செய்யபடாத தரகர்கள் யாராவது கல்முனை மாநகர சபை எல்லையினுள் வியாபாரத்தில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .