2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

கூடு....

Sudharshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுத்து கனத்த மேகங்கள். குலை நடுங்கும் வாடைக்காற்று. அங்குமிங்குமாய் முறிந்து விழும் மரங்கள். இருளின் மாயைக்குள் மண்டியிட்டுக்கொண்டது ஊர். இத்தனைக்குமிடையில் வானை கீறிக் கிழித்து பளிச்சிடும் மின்னல் கீற்றுக்கு பின்னால், அணுகுண்டாய் சிதறும் இடி முழக்கம். அந்தக்கிராமமே சூனியப்பகுதியாயிருந்தது. இவை யாவற்றையும் ஒன்றுதிரட்டி பொழியும் கன மழை.

இருளை கிழித்தவாறு எங்கோவொரு மெல்லிய மஞ்சள் வெளிச்சம் சிணுங்கிக்கொண்டிருந்தது. கொலைக்காற்று போல வாடைக்காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது. பற்கள் கிடுகிடுத்தன. உடல் குளிரால் உறைந்து போயிருந்தது. ஆனாலும் அந்த உருவம் குப்பி விளக்கின் முன்னால் குந்தியிருந்தது. கையிலேயிருந்த புத்தகமும் சோர்ந்து போனது. தூக்கம் இவனை தூக்கிவாரிப்போட்டாலும், தூங்க மனமில்லை. விடிந்தால் பரீட்சை. காலின் கீழே சிறியதொரு பாத்திரத்தில் நீர். தூக்கம் வரும்போதெல்லாம் அதனுள் கால்கள் சென்று வரும்.

தாய் செல்லம்மாவுக்கு சரியான காய்ச்சல். குச்சியால் செய்ததைப் போன்ற உடல். வெளித்தள்ளும் என்புகள். நொய்ந்துபோன நிலையில் இப்பொழுது காய்ச்சலும்.......

வியர்வையால் உடல் நனைந்திருந்தது. நேற்று ஒரு பனடோல் போட்டிருந்தாள். வேறு பனடோலும் இருக்கவில்லை. குளிர் ஒருபுறம். காய்ச்சல் மறுபுறம். அவளது நிலை பார்க்க பரிதாபமாயிருந்தது.

            'அம்மா,... அம்மா... என்னம்மா செய்து..?'

தாயருகில் சென்று பரிவோடு வினாவுவான்.

            'எனக்கொண்டும் இல்லை மோனை.. நீ போய் படியடா ராசா.'

குப்பி விளக்கை காற்று எங்கே விட்;டுவைக்கப்போகிறது? தீப்பெட்டியிலும் குச்சுகள் தீர்ந்து போய்விட்டன. இறுதிக்குச்சை உரசிப் பற்றவைக்க முயல்கிறான். அதனையும் காற்று அணைத்து விட்டது.

 

பொழுது புலர்ந்தது. மழை ஓய்ந்து விட்டது.

எழில் கொஞ்சும் அந்தக் கிராமம் காலையில் சுடுகாடாயப்;போயிருக்கும் என யாரும் எண்ணியிருக்கவில்லை. வடலிப்பனையின் மட்டையால் கட்டப்பட்ட படலை. புடலையைத் திறந்து.... வெளியே வந்த அருணுக்கு... முற்றத்தில் கண்ட காட்சி அப்படியே நிலைகுலைய வைத்துவிட்டது.

'அம்மா.. அம்மா... இஞ்ச பாருங்கோ...?'

எனக் கூறியபடியே தாயிடம் விரைந்த அருணை குறுக்கறுத்த தங்கை...

            'என்னடா அண்ணா...?

            'மா...மா...மரம்......'

            மௌனித்துப் போய் நின்றான் அருண்.

அப்பா சொன்னவர். அப்பப்பா வைத்த மாமரம். எத்தனை சந்ததிகள் கடந்தாலும் இந்த மரம் நிக்கவேணும். பரம்பரை பரம்பரையாய் எல்லா சந்ததிக்கும் அது பலன் கொடுக்;கவேணுமென்று.       ஆனால் இன்று... தந்தை சிவம் அடிக்கடி கூறும் வார்த்தைகள் அவன் அடிமனதிலிருந்து மேலெழுந்து வரலாயிற்று.

            'அண்ணா.. அண்ணா.. அங்க பாரேன்? எவ்வளவு மாங்காய் என்று.. எல்லாம் அநியாயமாய் போய்ட்டுது..'

தங்கை கஸ்தூரியின் மனப்புகைச்சல் முகத்தில் தெரிந்தது.

            'அம்மா, நீங்கள் எனக்கு சப்பாத்து வாங்கித்தரமாட்டியளென்ன.. என்ர சப்பாத்தை பார்த்து பிள்ளையளெல்லாம் நக்கலடிக்குதுகள். முதளையாம்;. நாக்கை நீட்டுதாம். தங்களை விழுங்கிப்போடுமாம்.  மரமும் முறிஞ்சிட்டுது. இனி எனக்கு சப்பாத்து? கூறிவிட்டு மௌனமாய் நின்றாள் கஸ்தூரி.

இந்த முறை மாங்காய் வித்திட்டு, அந்த காசிலை சப்பாத்து வாங்கித்தாறன் என்று ஆசையூட்டிய செல்லம்மாவின் கனவை......, பூவும் பிஞ்சுமாய் குலை குலையாய் தொங்கிய காய்கள்... நிலம் தெரியாமல் சிதறுண்டு கிடந்தன. தள்ளாடியபடியே முற்றத்துக்கு வந்து சேர்ந்தாள் செல்லம்மா. இரவு முழுவதும் சரியான காய்ச்சல். மாமரம் முறிந்த செய்தி கேட்டதும்... தனித்தொரு உற்சாகம் அவளுள் பிறந்துவிட்டது.

வீட்டு வாசலால் இறங்கியதும் ரோட்டை மறைத்தபடி முற்றத்தில் நின்றது கறுத்தக்கொழும்பான் மாமரம். பருவத்துக்கு சும்மா குலை கட்டி காய்ச்சிருக்கும். பெரிய உயரம் என்றுமில்லை. ஓரளவு கட்டைதான்.

சில நேரத்தில காய்கள் தலையிலகூட முட்டும். பழமென்றால் தேன் தான். பழமும் பெரியது. ஒராள் ஒரு பழத்துக்கு மேல சாப்பிடுறது அரிது. மாங்காய் காலத்தில நாங்கள் வைக்கோலும் ஆளுமாய்த்தான் இருப்பம்.

விடிய கோதுமை மாவில அம்மா பிட்டு அவிப்பா. அதோட மாங்காயும் நிறையச் சீவித்தருவா. கொஞ்ச நேரத்தில கோப்பை மட்டுமில்லை... நீத்துப்பெட்டியும் காலியாயிடும். வெளவாலுகளோட தான் பெரிய பாடு. அப்பா முன் விறாந்தையில தான் படுத்திருப்பார்.

முற்றத்தில கிடக்கிற தகரத்தில தடியால அடித்து தான் வெளவாலுகளை கலைப்பார். அதுகள் எங்க கேட்கிற? அப்பா தட்டிட்டுவர அதுகள் பின்னால வந்து சேர்ந்திடுங்கள்.

அரசடி பிள்ளையார் கோயில் திருவிழாவும் இந்தக் காலத்தில தான் வாரும். மாங்காய் வியாபாரிமார் முன்னும் பின்னும் திரிவாங்கள். நல்ல விலைக்கு விக்கலாம். இப்பிடி வித்து சேர்த்த காசில தான் தங்கைச்சிக்கு சாமத்திய வீடும் செய்தனாங்கள்.

ம்.. இனி?

            'என்னடா ராசா இப்பிடியே யோசித்துக் கொண்டிருக்கிறாய்..?'

            'அது ஒண்டுமில்லையம்மா..'

'ஓமடா தம்பி. இந்த மாமரம் நட்டு கிட்டத்தட்ட நூறு வருசமாய்ச்சு. அப்பாட கனவெல்லாம்.... ம், என்ன மோனை செய்யிறது. எங்கட காலம் இப்பிடியாய் போய்ட்டுது..' யுத்த கால சூழலிலும் கூட, ஒரு கொப்புக்கூட முறியாமல் நிண்டது. 'மகாசென்' எண்டு சொல்லி வந்திச்சே... எல்லாம் நாசமாய் போட்டுது.

'அம்மா.. அம்மா.. இங்க...'

'என்னடி பிள்ளை...?'

'இஞ்ச வாங்கோவன். அண்ணா டேய், இங்க வாடா.'

'என்னடி சொல்லு..?' என்று கூறியபடியே தங்கையை நோக்கி சென்றான் அருண்.

அங்கே கண்ட காட்சி அவனை ஒருதடவை அப்படியே உலுக்கிவிட்டது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய்...

பிய்ந்துபோன நிலையிலிருந்த குருவிக்கூடொன்றை தூக்கிக்காட்டினாள் கஸ்தூரி. கொப்புகளுக்குள் சிக்குண்ட நிலையில் குருவிகள். தாய்க்குருவியும் நான்கு குஞ்சுகளும்.... மூன்று குஞ்சுகள் இறந்து போய்.... தாய்க்குருவி தனது சிறகுகளை அடித்து பறக்க முற்பட்டது. தனக்கேதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என குருவி பயந்து நடுங்கியது.

கஸ்தூரியும், அருணும் சேர்ந்து குருவிகளை மீட்டனர். அவற்றை தாயிடம் கொண்டு சென்று காட்டினார்கள்.

'ஏன் மோனை இதுகளை பிடிக்கிறியள். ஐந்தறிவு படைத்த ஐPவனுகளை கொடுமைப்படுத்தக் கூடாது. அதுகளை பேசமாம விட்டிடுங்கோ...'

'இல்லையம்மா. அதுகள் பாவம். நான் அதுகளை வளர்க்கப்போறன்.' என்றாள் கஸ்தூரி.           

'ம், ரெண்டு பேரும் என்னவோ செய்யுங்கோ. பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுது. கெதியாய் வெளிக்கிடுங்கோ பாப்பம்'.

உண்மையில் அந்தக் குருவி பாவம். எவ்வளவு கஷ்ட்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு தும்புகள் எடுத்து வந்து, அதை வைத்து கூடு கட்டி எவ்வளவு சந்தோசமாய் வாழ்ந்திருக்கும்? ஒரு கூட்டில தன்ர குஞ்சுகளோட ஒன்றாய் வாழ்ந்த குருவி.... இண்டைக்கு.....................

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த செல்லம்மா, திடுக்குற்று விழித்தாள். கையில் பிய்ந்து போன அந்தக் குருவிக்கூடு........ மௌனமாய் கிடந்தது.

அவளை அறியாமலே அவளுக்கு கண்ணீர்த்துளிகள் விழிமடலுக்குள்ளே கருக்கொள்ளலானது. அழுதே விட்டாள். செல்லம்மாவின் குடும்பக்கூடும் இப்படித்தான் சின்னாபின்னமாகியது.

இரவு பெய்த மழைக்கு குடத்தில் நிரம்பியிருந்த நீரில் கை கால் முகம் கழுவிவிட்டு பள்ளிக்கு  புறப்பபடத் தயாரானார்கள் அருணும் கஸ்தூரியும்.

அம்மா போட்டுவாறம்.

அருணின் தந்தை ஒரு விவசாயி. ஒரு போகத்துக்கு எப்படியும் ஏழெட்டு ஏக்கர் நெல் விதைப்பார். சொந்தமாக ஒருசோடி உழவுமாடு நின்றது. அப்ப இந்த மெஷினுகள் ஒண்டும் இல்லை. எல்லாம் கை வேலை தான். விதைப்புத் தொடங்கினால் அந்த ஊர் ஆம்பிளையள் ஒருதரையும் ஊரில காணக்கிடைக்காது. வயலில்தான் நிப்பினம்.

இப்பிடித்தான் சிவமும்;. வீட்டுக்கு வர நாங்களெல்லாம் நித்திரையாய் போயிடுவம்;. பிறகும், காலங்காத்தால ஐந்து மணிக்கெல்லாம் சிவம் அப்பா வயலுக்கு போயிடுவார். நாங்கள் அப்பாவை காணுறதே அரிதாய்த்தான் இருக்கும்.

 வயல் ரோட்டால தான் பள்ளிக்கூடம் போகவேணும். பச்சை மிளகாய் சம்பலும், பழஞ்சோறும் சேர்த்து பார்சல் கட்டி தந்துவிடுவா. பள்ளிக்கூடம்  போகேக்க நான் குடுத்திட்டு போவன்.

மாமரத்திற்கு கீழே இருந்தவாறு தனது பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தான் அருண்.

சிவத்துக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் தான் அருண். மற்றது மூன்;றும் பொம்பிளைப்பிள்ளையள். அருண் க.பொ.த உயர்தரத்திலே கிராமப் பாடசாலையொன்றில் கல்வி பயில்கிறான். மூன்றாவது தான் கஸ்தூரி. அவள் பத்தாமாண்டு படிக்கிறாள்.

இப்பிடித்தான் ஒரு நாள்... வயலில் உழுதுகொண்டு நிக்கேக்க, ஏதோவொரு பொருள் வெடிச்சு கருவெள்ளை எருத்தனுக்கு பின்னங்கால் போட்டுது. அண்டையில இருந்து சிவம் வயலுக்குள் இறங்கிறதில்ல. ஒவ்வொரு போகமும் சின்னாம்பி மாமாவுக்குத் தான்  வயல் குத்தகைக்கு குடுக்கிறது.

அன்று பிடித்த சனியன் தான் இண்டுவரையும்....

ஆனாலும், அப்பா சோரேல்ல. உழைச்ச உடம்பு சும்மா இராது. வீட்டில சைக்கிள் கடை போட்டார். குத்தகை நெல்லு சாப்பாட்டுக்கு மிச்சம் மிச்சம்.

சைக்கிள் வேலையளும் பெரிசா இல்லை. கிடைக்கிற ஐந்து பத்தில குடும்பம் ஒருமாதிரி ஓடிக்கொண்டிருந்திச்சுது. சிவத்துக்கு தன்ர குடும்பத்தில் சரியான அக்கறை.

'எண்டா தம்பி, நான் செத்துப்போனாலும், எப்பிடியாவது நீ படிச்சிடவேணும். இந்த மாமரம் எத்தினை சந்ததியாய் நிண்டு பலன் தருதோ, அதுபோல நீயும் ஒரு டொக்டராய் வந்து இந்த சமூகத்திற்கு சேவை செய்யவேணும். அம்மா சகோதரங்களை கண் கலங்காமல் பார்க்கவேணும்....'

அருணை நோக்கி சிவம் அடிக்கடி கூறும் வார்த்தைகள் இவை.

'அப்பா, நான் பார்ப்பன். ஆனால், நீங்கள் மட்டும் இப்பிடி கதைக்க என்னால தாங்கேலாதப்பா'

அருணின் பிஞ்சு மனம் அடிக்கடி இவ்வாறு வெம்பிக்கொள்வதுண்டு.

 வன்னிப்பகுதியை போர் மேகங்கள் மெல்ல மெல்ல சூழ்ந்துகொள்ளலாயின. கந்தக வாசங்களை நுகர்ந்தபடியும் பிணமலையில் ஊறி நடந்தபடியும் உடமைகளையும் உறவுகளையும் வீதி வீதியாய் சிதறியபடியும்;... கடந்து போன நாட்கள். பதுங்குகுழிதான் சொர்க்கத்தையும் நரகத்தையும் தேடித்தந்தது.

நள்ளிரவு வேளை...

              வழமைக்கு மாறாக எறிகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. வானை கீறிக்கிழித்து வந்த மிகையொலி விமானங்கள், குண்டுகளை அள்ளிக்கொட்டின. துப்பாக்கி வேட்டுக்கள் மிக நெருக்கமாக கேட்கத்தொடங்கியது. கூவிவந்த எறிகணையொன்று சிவத்தின் தறப்பாள் கொட்டகைக்கு அருகில் வந்து வீழ்ந்து வெடிக்கலானது.

                       'டூடூடூடூடூ ம்ம்ம்ம்....'

                       'ஐயோ அம்மா..... ??'

   கரிய இருளுடன் கலந்த  வெடிமருந்து புகையும் வானளாவ, சிவத்தின் உடல் எறிகணை சன்னங்களால் குதறப்பட்டு கிடந்தது. கரிய இருளிலும், சின்னாபின்னமான சதைத்துண்டங்கள் குருதியில் தோய்ந்து கிடந்தன.

                       செல்லம்மாவுக்கு வயிற்றில் சிறு காயம். தங்கைமார் இருவரும் இரத்தாற்ற்pலே நீந்திக்கொண்டிருக்க, கடைக்குட்டி மட்டும் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தாள். யாரையும் யாரும் காப்பாற்ற முடியாத நிலை. கட்டிய கணவனாயினும் சரி, பெற்ற பிள்ளையாயினும் சரி, கண்முன்னே காலடியில் புழுதியை அகல விரித்து மூடிவிட்டு செல்லும் துன்பியல்? மரண ஓலங்கள் கூட யார் காதுகளிலும் கேட்பதாயில்லை.

                       அடுத்தடுத்து வந்த எறிகணைகள் தறப்பாளை சுற்றி அங்குமிங்கும் வீழ்ந்து வெடிக்கலாயின. மூன்று ஜீவன்களும் இரத்தாற்றில் மூழ்கிப்போயிருந்தனர்.

                       தந்தை சிவத்தையும், தங்கைமார் இருவரையும் தங்கியிருந்த பதுங்குகுழிக்குள்ளேயே போட்டு மூடிவிட்டு அருணும் கஸ்தூரியும், செல்லம்மாவும் நடக்கத் தொடங்கினார்கள

முகாமிலே தங்கியிருந்த செல்லம்மாவும் பிள்ளைகளும், கடந்த வாரம்தான் சொந்தவூருக்கு வந்திருந்தார்கள். வீட்டை விட்டுப் பிரிந்து ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் கடந்தாகிவிட்டன. குச்சு வீதிகள் பற்றைகளால் மண்டிப் போயிருந்தன.

கிரவல் வீதகள் சப்பாத்துக் கால்களை தாங்கித்தாங்கியே நொய்ந்தபோயிருந்தன. முற்றத்தில் ஒரு புல் கூட முளைக்கவிடாமல் செருக்கி துப்பரவு செய்துவிடுவார் சிவம்.

   அந்தக்கடனுக்கு முற்றம் முழுவதும் நாயுண்ணிப் பற்றைகளும், நெருஞ்சி முட் செடிகளும் மலிந்து போய்க்கிடந்தன. மண்ணாலான அந்தக் குடிசை.... இருந்த இடமே தெரியாமல் செடிகளால் மண்டிப்போயிருந்தது. தங்கைச்சியின் சாமத்திவீட்டுக்கு பனையோலை வெட்டி அடைத்த வேலி.... ஓட்டை ஒடிசலாய்...

  ஆனால், மாமரம் மட்டும் ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றது. போர் அழிவின் சாட்சியாய், பல்வேறு வடுக்களை தாங்கி நின்றாலும், தன்மானம் கொண்டு சிறிதேனும் பணியாமல் நிமிர்ந்து நின்றது. அப்பா போட்ட சைக்கிள் கொட்டில் மட்டும் ஓட்டை ஒடிசலானாலும் ஓரளவு நல்ல நிலையிலிருந்தது.

   கொண்டு வந்த ஓரிரு பைகளை அந்த கொட்டிலுக்குள் வைத்து விட்டு, மாமரத்தின் கீழ் வந்தமர்ந்து கொண்டான். பழைய நினைவுகள் அவனுக்குள் பம்பரமாய் சுழன்றன.

                       பங்குனி மாதத்து தகிக்கும் வெயிலுக்கு மாமரம் நல்ல சுவாத்தியமாய் இருக்கும். கஸ்தூரி அப்ப சின்னப்பிள்ளை. ஊஞ்சல் கட்டித்தரச் சொல்லி ஒரே கரைச்சல். ஒரு நாள், அம்மம்மாவோட பழைய சாறி ஒன்று எடுத்து ஊஞ்சல் கட்டி கொடுத்தன். ஆவள் ஆசையாக ஆடுவாள்.

இப்பிடித்தன் ஒருநாள்....

  சாமித்தட்டில பத்து ரூபா காசு கிடந்தது. தங்கைச்சி பள்ளிக்கூ;.டத்துக்கு எடுத்து வந்திட்டாள். பள்ளிக்கூடம் முடிய, நானும் அவளும் பக்கத்து கடையில சூப்புத்தடி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த  போது, வயலால மாடு கொண்டு அப்பா வந்தார். அதை நாங்கள் கவனிக்கேல்லை. கடை வாசலில வைத்து, மாட்டுக்கு அடிக்கிற தடியால அடிச்சாரே ஒரு அடி..... ?

   காலின் கீழே கிடந்த தழும்பினை அவனையறியாமலே அவன் கைகள் வருடிக்கொண்டன. சின்னமாமாவின்ர பெடியனோட சேர்ந்து, பனங்கூடலடி குளத்துக்கு போனம். போய் வரேக்க அப்பாவோட வேலை செய்யிற சிங்கன் மாமா கண்டு, அப்பாக்கு சொல்லிப் போட்டார்.

   இரவு அப்பா வரேக்க ஒன்பது மணியாச்சு. நான் நித்திரை. அடுத்த நாள் விடியக்காத்தால இந்த மாமரத்திலதான் கட்டிப்போட்டவர். பின்னேரம் தான் அம்மா அவிழ்த்து  விட்டவா.

   அப்பா பொல்லாதவர் தான். என்றாலும் எங்களில நல்ல பாசம். வீட்டில நிறைய தென்னம்பிள்ளை தானே. விழுகிற தேங்காயில கொப்பறா போட்டு எண்ணெய் ஊத்துவம். அப்பா கூப்பன் மா வேண்டி வருவார். பனங்காய் காலத்தில அம்மா பணியாரம் சுட்டுத்தருவா.

 சுற்றும் முற்றும் திரும்பிப்பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னைகள் இல்லை. வட்டோடு பட்டுப்போய்... முடமாக நின்றன. இனி.......? எண்ணெய்.....?

     நினைவுகளிலிருந்து மீள முடியாமலிருந்த அருணனை, தாயின் அழைப்பு மீளச் செய்தது.

 'கீச்... கீச்கீச்கீச்....கீச்..கீச்...'

தனது காதினை கூர்மையாக்கழக் கொண்டான் அருண்.

 குருவிகள் அலறும் சத்தம் அவன் காதுகளில் தெளிவாக கேட்டது. பழைய நினைவுகளிலிருந்து மீண்டவனாய், குருவிகளை விட்டிருந்த கூட்டினை நோக்கி விரைந்தான்.

கறுத்தப் பூனையொன்று.

பார்வதி மாமி வீட்டான் தான்.

அதே கறுத்தப் பூனை தான். கூட்டின் கீழே.....  அருண் அமைதியாகிவிட்டான்.

இரத்தக்கறையேறிப்போயிருந்தது குருவிக்கூடு. பூனையால் குதறப்பட்டு கிடந்த தாய்க்குருவி குற்றுயிராய் கிடந்து துடித்தது.

 குஞ்சு பூனையின் வாயில் பௌவியமாக கிடந்தது. பூனையின் வாயால் குருதி சொட்டிக்கொண்டிருந்தது. என்னைக் கண்டும் கூட, பூனை அசையவில்லை. அப்படியே நின்றது.
......................................................................

நேரம் அதிகாலை நான்கு மணியிருக்கும்.

   வாகனமொன்று படலையில் வந்து நின்றது. வாகனத்திலிருந்து இறங்கிய ஐந்தாறு தலைகள், முற்றத்தை அண்மித்துக்கொண்டிருப்பது, ஓட்டை ஒடிசல்கள் நிறைந்த தறப்பாள் வெளிக்குள்ளால.......

  சேவல்கள் தம் மார்பு செட்டைகளில் அடித்து கூவிக்கொண்டிருந்தன. ஆனாலும் கிழக்குவானில் கூட விடியலின் அறிகுறி சிறிதளவேனும் தென்படவில்லை. இருள் மண்டிப்போயிருந்தது. ஆனாலும், அதற்குள்ளாலும் முற்றத்தில் வீழ்ந்து கிடந்த மாமரக்கொப்புக்களைத் தாண்டி வந்த பாதச்சுவடுகள் தெளிவாகவே தெரிந்தன.

என்னை தாண்டி நகர்ந்துகொண்டிருந்தன அந்தத் தலைகள்.

                       'அண்ணா....'

                       '................................................???'
இருள் சூழ்ந்துகொண்டது.

                                                                          மல்லாவி கஜன்

                                                                                       

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .