2023 ஜூன் 07, புதன்கிழமை

மழையின் கொலை...

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வானுக்கு பூமியிடம் என்ன கோபமோ தெரியவில்லை. அதிகாலை 3மணிக்கு பெய்யத் தொடங்கிவிட்டது மழை. இடியும் மின்னலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்க அந்த சத்தத்தால் வந்த தூக்கமும் பறந்து போனது. தூக்கம் வரவில்லை. பலயோசனைகள் எழ கண்ணை மூடியும் உறங்காது விழித்திருந்தேன்.

அப்போதுதான் ஆற்றோரம் வாழும் லலிதாப் பாட்டியின் ஞாபகம் மூளைக்குள் தட்டியது. ஐயோ அந்தப் பாட்டி பாவம். பெய்த மழைக்கு வெள்ளம் பாறைகளையும் புரட்டிக்கொண்டல்லவா போகும். இந்த முறை நிச்சயம் லலிதா பாட்டியின் வீடு வெள்ளத்துக்குள் அகப்பட்டுப்போயிருக்கும். அவளால் ஓடவும் முடியாதே. கடவுளே லலிதா பாட்டியைக் காப்பாற்று என்று கடவுளை வேண்டியவாறு அருகில் படுத்திருந்த அம்மாவைத் தட்டி, அம்மா லலிதா பாட்டி வீடு வெள்ளத்துக்கு அடிப்பட்டு போயிருக்குமே என்று கேட்டேன். அம்மாவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். அம்மாவால் என்ன செய்ய முடியும். யோசித்துக் கொண்டு இருக்கையில் 'ஐயோ ஐயோ லலிதா அம்மா ஆத்துல அடித்துட்டு போகுது வாங்கயா வாங்க' என்று அலறல் சத்தம் கேட்க விடுக்கென்று எழுந்து வெளியில் ஓடினோம்.

சனம் முண்டியடித்துக்கொண்டு ஆற்றுப்பக்கம் ஓட நாங்களும் ஓடினோம். நினைத்தது போலவே வெள்ளமும் பாறைகளை மட்டுமல்ல பாறைபோன்ற மரங்களையும் புரட்டியெடுத்துக்கொண்டு போனது. பாட்டியை ஆற்று வெள்ளத்தில் எப்படி தேடுவது. விழுந்து தேட நினைப்பவர்களையும் வெள்ளம் இழுத்துக்கொண்டு போய் விடும். 8 அடி உயரமான பாலத்தையும் தொட்டுக்கொண்டு செல்கிறது வெள்ளம். பாட்டியை நினைத்து அழமட்டுமே முடிந்தது. ஊர் பெரியவர்கள் தீப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு தேடினார்கள். 'கும்' என்ற இருட்டில் மரங்கள் போவது மட்டுமே தெரிந்தது.

3 மணித்தியாலம் நாங்களும் கொட்டும் மழையில் நின்று கொண்டு இருந்தோம். மழை நின்றபாடில்லை. பின் அம்மா என்னை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். பொழுதும் விடிந்தது, ஊர் முழுவதும் லலிதா பாட்டியைப் பற்றிய பேச்சுதான்.
காலையில் வெள்ளம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் ஆற்றில் பாய்ந்து தேடத் தொடங்கினார்கள். ஊர் பெரியவர்களும் பொலிஸுக்கு தகவல் கூறி பொலிஸாரும் வந்து விசாரித்தனர்.

லலிதா பாட்டிக்கு யாருமே இல்லை. அவர் முன்பு நன்கு வசதியாய் இருந்திருக்கிறார். அவருக்கு 3 பிள்ளைகள். கணவன் கார் விபத்தில் இறந்துபோக இவர் அந்த 3 பிள்ளைகளுக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டிருக்கிறார். லலிதா பாட்டி பெரிய படிப்பு படித்தவராம். ஊருக்கு யாராவது பெரியவர்கள் வந்துவிட்டால் அவர் மட்டும்தான் ஆங்கிலத்தில் உரையாடுவாராம். நானும் கண்டிருக்கிறேன்.

காதல் திருமணம் செய்துக்கொண்டதால் அவரை வீட்டிற்குள் வரவேண்டாம் என்று பெற்றோர் கூறிவிட இவர் கணவருடன் இந்த ஊருக்கு வந்திருக்கிறார். ஆற்றோரம் இருந்த சிறுதுண்டு காணியில் குடிசை அமைத்து அதில் வாழ்ந்திருக்கிறார்கள்.
கணவன் வாழும்வரை வறுமையை அறியாத அந்தப் பாட்டி அவர் இறந்த பின் பிள்ளைகளுக்காக கஷ்டப் பட்டுள்ளார். அந்த பிள்ளைகளின் வயிற்றுப் பசியை போக்குவதற்காக தான் வீட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு உணவு கொடுத்துள்ளார். பாட்டி அழகானவர். வயது போயும் கூட அவரது அழகு மங்கவில்லை. கிளிபோல் அழகு. எப்போதும் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கச் சொல்லும். இளமை பருவத்திலே கணவனை பறிகொடுத்ததால் ஊரில் ஒரு சில ஆண்கள் அவரை அடைவதற்காக நடு சாமத்திலும் அவரது வீட்டை தட்டியிருக்கின்றனர்.

பாட்டி அதற்கு உடன்போகாததால் அவரது பெயர் கெடும் அளவிற்கு தகாதவற்றை சொல்லி அவரை கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.

வீட்டு வேலைகளுக்குச் சென்று பிள்ளைகளைப் படிக்க வைத்தார் பாட்டி. பிள்ளைகளும் நன்கு படித்து பெரிய இடத்திற்கு வந்துவிட்டார்கள். மூத்தவர்கள் இருவரும் ஆண்பிள்ளைகள். அவர்களுக்குத் திருமண வயது வர அவர்களுக்கு விரும்பிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டு தனி குடித்தனம் போய்விட்டார்கள்.

49 வயதிருக்கும் போது பாட்டியின் இளைய மகள் மட்டுமே பாட்டியுடன் இருந்தாள். அவளை பாட்டி திருமணம் செய்துகொடுப்பதற்கு வரன் பார்திருக்கிறாள். 3 வரன் வந்திருக்கிறது. பாட்டியின் மகள் பாட்டியைப்போன்றே அழகு. வந்தவர்கள் அந்தப் பெண்ணை விரும்பினாலும் ஊரில் சிலர் வந்தவர்களுக்கு நடத்தைக்கெட்ட குடும்பத்தில் சம்பந்தம் வைக்கப்போறீர்களா என்று சொல்லிவிட, வந்த வரன்களும்  கூடாமல் போனது.

3 மாப்பிள்ளைகளும் வேண்டாம் என்று சொல்லிவிட திருமணமே வேண்டாம் என்று வாழத் தொடங்கினாள் பாட்டியின் மகள் கீதா. பாட்டியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டது கீதாதான். மற்ற இரண்டு மகன்மாரும் பாட்டியை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பாட்டியே தனது பிள்ளைகளை தேடிப்போனப் போதும்கூட வரவேண்டாம் என்று மருமகள் மார் கூறிவிட்டனராம். அவர்கள் கூறியதை மகன் மார்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். மகன்மார்களை பார்க்காமல் 10 வருடம் கீதாவே கதியென்று வாழ்ந்திருக்கிறார் அந்தப் பாட்டி.

கீதா ஒரு கடையில்தான் வேலை செய்கிறாள். சனி, ஞாயிறு மட்டும்தான் கீதாவிற்கு விடுமுறை. போன வாரம்தான் கீதா பாட்டியை வந்து பார்த்துவிட்டு மருந்து எடுத்துக்கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். அந்தப் பாட்டிக்கு தனது கடைசி மகளது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்பதுதான் பெருங்கவலையாய் இருந்துள்ளது. தான் இறந்தபின் இவளது கதி என்னவாகும் என்று கூறி அழுதும் இருக்கிறார் லலிதா பாட்டி.

கீதாவும் லலிதா பாட்டி இல்லாமல் இருக்கமாட்டாள். ஒரு கிழமை கழித்து வந்தால் அந்தத் தாயின் மடியில் சிறிது நேரம் தூங்கிவிட்டுத்தான் மற்றக்கதைகளைப் பகிர்ந்துகொள்வாள் கீதா.

இப்போது அந்தப் பாட்டி வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனது கீதாவிற்கு தெரியாது. வந்தால் என்ன செய்யப் போறாளோ தெரியவில்லை என்று ஊராரது சம்பாஷணை போய்க்கொண்டிருந்தது. அப்போது ஆற்றில் இறங்கி தேடியவர்கள் லலிதா பாட்டி கிடைத்திட்டாள் ஐயோ.... என்று தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள்.

முகம் அகோரமாய் இருந்தது. பாட்டியின் பின் தலையில் நன்கு அடிபட்டிருந்தது. இரத்தம் கசிந்துபோய் கிடந்தது. ஊர் மத்தியில் கிடத்தி வெள்ளைப் போர்வையால் போர்த்து பிரேதத்ததை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள்.
பிள்ளைக்கு தகவல் சொல்ல ஓர் கூட்டம் விரைந்தது. மாலை 6 மணியிருக்கும் கீதா விடயம் தெரியாமல் வந்தாள். வந்து இறங்கி ஊர் பொது இடத்தில் பிரேதத்தை வைத்திருந்த போதுதான் பார்த்தாள் அவள்.

ஐயோ எனக் கட்டி அணைத்து அழுதவள் என்னையும் உன்னுடன் கூட்டிக்கொண்டுபோயிருந்தால் என்னம்மா என்று கதறியதுதான் ஊரே அழத்தொடங்கியது. இனி அந்த பிள்ளைக்கு யார்துணை? ஆசைக்கு இரண்டு மக்களைப் பெற்ற அந்த தாய்க்கு கடைசியில் கொள்ளி வைக்கக் கூட ஒருமகன் இல்லாமல் போய்விட்டனர்.

அத்தனை உறவுகள் இருந்தும் ஊராரே அந்தப் பிரேதத்தை அடக்கம் செய்தார்கள். தாயின் ஞாபகமாக கீதாவிற்கு எடுத்துக்கொள்வதற்கு ஒன்றையும் விட்டு வைக்கவில்லை இந்த மழை வெள்ளம். லலிதா பாட்டியுடன் சேர்ந்து அவர் இருந்த குடிசையும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது. அவரை அழைத்து வருவதற்காக அவர் குடிசையிலிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்த கோபால் சென்றபோதுதான் குடிசை மழை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு செல்வதை கண்டுள்ளார். 'ஐயோ யாராவது வாங்களே என்ற சத்தம் மட்டும் இறுதியாக கேட்டதாக கோபால் சொன்னார். என் வீட்டில் ஏதாவது பாத்திரம் கீழே விழுந்தால் கூட அங்கிருந்து ஓடிவந்து பார்ப்பாங்க. இப்படி இடி மின்னல் வெட்டியது கூட தெரியாமல் எப்படி தூங்கினாங்களோ தெரியலயே என்று கோபால் அழுதவாறு ஊராருக்கு கூறிக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் கீதாவிற்கு லிலிதா பாட்டிக்கு குழுசைகள் வாங்கிக்கொடுத்தது நினைவுக்கு வந்துள்ளது. லலிதா பாட்டி ஆஸ்துமாவினால் பீடிக்கப்பட்டிந்திருக்கிறார். இரவில் நித்திரைக்கொள்வது இல்லையாம். அதனால்தான் போனவாரம் கீதா வரும்போது அவருக்கு ஆஸ்துமாவிற்கான மருந்துகளை கேட்டு வாங்கிவந்து கொடுத்திருக்கிறார். அதில் இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு நித்திரையும் குழுசையும் இருந்ததாம். அதனால்தான் லலிதா பாட்டி மழை பெய்ததையும் அறியாது அழமாய் தூங்கிவிட்டிருக்கலாமென்று கூறிய வண்ணம் கதறியழுதாள் கீதா.....

(மாறணி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .