2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை தோற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியிலேயே 38 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்திருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். இலங்கை சார்பாக சாமிக கருணாரத்ன, சரித் அஸலங்கவும், இந்தியா சார்பாக பிறித்திவி ஷோவும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இந்தியா சார்பாக அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா, முதலாவது பந்திலேயே பிறித்திவி ஷோவை துஷ்மந்த சமீரவிடம் இழந்தது. பின்னர் அணித்தலைவர் ஷீகர் தவானும், சஞ்சு சாம்ஸனும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 27 (20) ஓட்டங்களுடன் வனிடு ஹஸரங்கவிடம் சாம்ஸன் வீழ்ந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த தவானும், சூரியகுமார் யாதவ்வும் வேகமாக ஓட்டங்களை வேகமாகப் பெற்ற நிலையில், 46 (36) ஓட்டங்களுடன் சாமிக கருணாரத்னவிடம் தவான் வீழ்ந்தார். பின்னர் சிறிது நேரத்தில் சூரியகுமார் யாதவ்வும் 50 (34) ஓட்டங்களுடன் ஹஸரங்கவிடம் வீழ்ந்திருந்தார்.

தொடர்ந்து வந்த ஹர்டிக் பாண்டியாவும் 10 (12) ஓட்டங்களுடன் சமீரவிடம் வீழ்ந்த நிலையில், இஷன் கிஷனின் ஆட்டமிழக்காத 20 (14) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை இந்தியா பெற்றது.

பதிலுக்கு, 165 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு ஆரம்பித்த இலங்கை சிறப்பாக ஆரம்பித்தபோதும், மினோத் பானுகவை 10 (07) ஓட்டங்களுடன் குருனால் பாண்டியாவிடம் பறிகொடுத்தது. தொடர்ந்து வந்த தனஞ்சய டி சில்வாவும் குறிப்பிட்ட நேரத்தில் யுஸ்வேந்திர சஹாலிடம் 9 (10) ஓட்டங்களுடன் வீழ்ந்திருந்தார். உடனேயே அவிஷ்க பெர்ணான்டோவும் 26 (23) ஓட்டங்களுடன் புவ்னேஷ்வர் குமாரிடம் வீழ்ந்திருந்தார்.

பின்னர் வந்த சரித் அஸலங்க இனிங்ஸைக் கொண்டு சென்றபோதும், தடுமாறிய அஷேன் பண்டார 9 (19) ஓட்டங்களுடன் ஹர்டிக் பாண்டியாவிடம் வீழ்ந்திருந்தார். தொடர்ந்து 44 (26) ஓட்டங்களுடன் அஸலங்கவும் தீபக் சஹரிடம் வீழ்ந்ததோடு, அதே ஓவரிலேயே ஹஸரங்கவும் ஓட்டமெதுவும் பெறாமலே திரும்பியிருந்தார்.

இதற்கடுத்த ஓவரில் சாமிக கருணாரத்ன புவ்னேஷ்வர் குமாரிடம் வீழ்ந்ததோடு, அடுத்த ஓவரில் தசுன் ஷானக 16 (14) ஓட்டங்களுடன் வருண் சக்கரவர்த்தியிடம் வீழ்ந்திருந்தார்.

இறுதியாக 19ஆவது ஓவரில் புவ்னேஷ்வர் குமாரிடம் இசுரு உதானவும், சமீரவும் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து 18.3 ஓவர்களில் 126 ஓட்டங்களையே இலங்கை பெற்றது.

இப்போட்டியின் நாயகனாக புவ்னேஷ்வர் குமார் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .