2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

றொஜர்ஸ் கிண்ணம்: பெண்களில் சம்பியனானார் ஹலெப்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் மொன்ட்ரீயாலில் இடம்பெற்றுவந்த றொஜர்ஸ் கிண்ணத்தின் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளின் சம்பியனாக, உலகின் 3ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் தெரிவாகியுள்ளார். 9ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மடிசன் கீய்ஸ்-ஐத் தோற்கடித்தே, இந்தச் சம்பியன் பட்டத்தை அவர் வென்றார்.

இப்போட்டியின் முதலாவது செட்டில், மிக இலகுவான பெறுபேற்றை ஹலெப் வெளிப்படுத்திய போதிலும், அந்த செட்டை வெல்வதற்குத் தடுமாறினார். எனினும் இறுதியில், 7-6 (7-2) என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இன்னமும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய அவர், 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி, சம்பியன் பட்டத்தை வென்றார்.

பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் டென்னிஸ் தொடரில், சம்பியன் பட்டத்தை ஹலெப் கைப்பற்றும் 14ஆவது தடவை இதுவாகும். இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில், உலகின் 2ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரைத் தோற்கடித்தே, இறுதிப் போட்டிக்கு சிமோனா ஹலெப் தகுதிபெற்றிருந்தார்.

கடந்தாண்டு இடம்பெற்ற றொஜர்ஸ் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு ஹலெப் நுழைந்த போதிலும், மூன்றாவது செட்டில் வைத்து, கால் உபாதை காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டிருந்தது. எனவே இந்த வெற்றி, அவருக்கு முக்கியமானதாகவும் உணர்வுகளுக்கு நெருக்கமானதாகவும் அமைந்திருந்தது.

இத்தொடர் ஆரம்பிக்கும் போது 5ஆவது இடத்தில் காணப்பட்ட சிமோனா ஹலெப், இத்தொடரை வெற்றிகொண்டதன் மூலம் 3ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, 11ஆவது இடத்தில் காணப்பட்ட மடிசன் கீய்ஸ், 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .