2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவிற்கெதிராக இலங்கை மகளிர் அணிக்குத் தோல்வி

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கெதிரான இப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 110 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

கட்டாக்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கப் பெண்கள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கு இழந்த அவ்வணி, 2 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களுக்கும் இழந்திருந்த நிலையிலும், தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சிறப்பாக ஆடி போட்டித்தன்மையான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஷன்ட்ரா ஃபிறிட்ஸ் 71 பந்துகளில் 64 ஓட்டங்களையும், கிறை ஷெல்மா பிறிட்ஸ் 69 பந்துகளில் 52 ஓட்டங்களையும், டேன் வான் நியகேர்க் 38 பந்துகளில் 40 ஓட்டங்களையும், மிக்னொன் டு பிறீஸ் 74 பந்துகளில் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சாமனி செனவிரத்ன 3 விக்கெட்டுக்களையும், இஷானி கௌஷல்யா, ஶ்ரீபாலி வீரக்கொடி, ஷரினா இரவிக்குமார், ஒஷானி ரணசிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

228 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கைப் பெண்கள் அணி 36.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று 110 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதலாவது விக்கெட்டை 5 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 41 ஓட்டங்களுடன் காணப்பட்டதோடு, 3 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும் இறுதி 7 விக்கெட்டுக்களையும் 14 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக சாமரி அத்தப்பத்து 74 பந்துகளில் 63 ஓட்டங்களையும், ஶ்ரீபாலி டொலவத்த 76 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக டேன் வான் நியெக்கேர்க் 4 விக்கெட்டுக்களையும், சப்நிம் இஸ்மைல் 2 விக்கெட்டுக்களையும், மார்சியா லெற்சொலோ, யொலான்டி பொற்கியற்றர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .