2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

S.Sekar   / 2021 ஜூலை 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து 650 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த தேயிலையின் அளவில் 10 சதவீத அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 137 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி முன்னெடுத்திருந்த ஆய்வின் பிரகாரம், 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஜுன் மாத தேயிலை ஏற்றுமதியினால் அதிகளவு ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த ஏற்றுமதி பெறுமதியை ஜுன் மாதத்தில் பதிவு செய்திருந்தது.

2015 ஆம் ஆண்டில் இலங்கை இறுதியாக தனது வருடாந்த தேயிலை ஏற்றுமதியை 300 மில்லியன் கிலோ கிராம்களுக்கு அதிகமாக பதிவு செய்திருந்ததாகவும், அவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி 151 மில்லியன் கிலோகிராம்களாகவும் பதிவாகியிருந்தது.

அந்நியச் செலாவணி வருமானமீட்டல் 20 சதவீதத்தால் அதிகரித்து 127 பில்லியன் இலங்கை ரூபாயாக பதிவாகியிருந்தது. இது சுமார் 650 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.8 சதவீத அதிகரிப்பாகும்.

துருக்கிக்கான தேயிலை ஏற்றுமதி உயர்வடைந்திருந்தது. 17 மில்லியன் கிலோகிராம் தேயிலை துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஈராக்கிற்கு 16 மில்லியனும், ரஷ்யாவுக்கு 13.3 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஊடாக ஏற்றுமதி 3.3 மில்லியன் கிலோகிராம்களிலிருந்து 10.2 மில்லியன் கிலோகிராம்களாக அதிகரித்திருந்தது. சீனாவிற்கான ஏற்றுமதியும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47 சதவீதத்தால் உயர்ந்து 7.4 மில்லியன் கிலோகிராம்களாக அதிகரித்திருந்தது. ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 8.9 மில்லியன் கிலோகிராம்களிலிருந்து 6.3 மில்லியன் கிலோகிராம்களாகவும், அசர்பைஜான் 6.1 மில்லியன் கிலோகிராம், லிபியா 5.6 மில்லியன் கிலோகிராம் மற்றும் சிரியா 4.1 மில்லியன் கிலோகிராம்களையும் இறக்குமதி செய்திருந்தன. தென் அமெரிக்காவின் பாரிய சந்தையான சிலி 3.5 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இறக்குமதி செய்திருந்தது. ஜப்பானுக்கான ஏற்றுமதி 3.1 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .