2021 ஜூலை 28, புதன்கிழமை

வாழ்வா? பயணமா? எதற்கு முக்கியத்துவம்?

S.Sekar   / 2021 மே 29 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலை தாக்கத்தினால் தற்போது உத்தியோகப்பற்றற்ற முடக்க நிலை அமலிலுள்ளது. ஜுன் 7 ஆம் திகதி தற்போதைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் கொவிட் கட்டுப்படுத்தும் ஆணைக்குழு, இந்த அறிவிக்கப்பட்ட தினத்தை மேலும் சில வார காலத்துக்கு நீடிப்பதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. அண்மைக் காலமாக மாத்திரமன்றி, கடந்த சில வருடங்களாகவே, இந்த நாட்டின் தீர்மானங்களை மேற்கொள்ளும் உயரதிகாரிகள் அடிமட்டத்தைச் சேர்ந்த மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டு, உரிய காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளத் தவறி வருகின்றதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களிலிருந்து ஆரம்பித்தால் கூட, அவ்வாறான ஒரு தாக்குதல் இடம்பெறவுள்ளதாக சர்வதேச புலனாய்வு அமைப்புகள், அக்கால கட்டத்தில் ஆட்சியிலிருந்த, பொறுப்பிலிருந்த அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், அந்தத் தாக்குதல்களை தவிர்ப்பதற்கு அவர்கள் எவ்விதமான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால், சுமார் 250 உயிர்கள் வரை காவு கொள்ளப்பட்டதுடன், தற்போதும் இந்த கொவிட் வைரஸ் பரவல் காரணமாக முறையான திட்டமிடலின்மையால் சுமார் 1500 உயிர்கள் வரை காவு கொள்ளப்பட்டுவிட்டன.

இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தற்காலிகத் தீர்வாக இந்தப் பயணக் கட்டுப்பாடுகளும், உத்தியோகப்பற்றற்ற ஊரடங்குகளும் காணப்பட்டாலும், நீண்ட காலத் தீர்வு என்பது, நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பதாகும்.

இதிலும் முறையற்ற ஒரு திட்டமிடலை அவதானிக்க முடிகின்றது. இதுவரையிலும், அரசாங்கத்திற்கு நட்பு நாடுகள் இனாமாக வழங்கிய வக்சீன்களையே வழங்கி வருகின்றது. அவ்வாறு முதலில் இந்தியாவிலிடமிருந்து பெற்றுக் கொண்டு பகிர்ந்தளித்த முதல் சுற்று வக்சீன்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தற்போது இரண்டாம் சுற்று ஏற்ற வேண்டிய காலம் கடந்துவிட்ட நிலையில், இதுவரையிலும் அந்த இரண்டாம் தொகுதி வக்சீன்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் பாரியளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தென்படவில்லை. அவ்வப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏனைய நாடுகளிடமிருந்து அஸ்ரா செனெகா வக்சீனைப் பெற்றுக் கொள்வதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கூறினாலும், இதுவரையில் ஒரு டொலரையேனும் இந்த வக்சீன் கொள்வனவுக்கு பயன்படுத்தியாக பதிவுகள் இல்லை.

இப்படியிருக்கையில், வக்சீன்களை பெற்றுக் கொள்வதில் பொது மக்களிடமிருந்து பெருமளவு ஆர்வம் காணப்படுகின்றது. நீண்ட வரிசைகளில் அதிகாலை முதல் காத்திருந்து, மாலையில் தமக்கு வக்சீன் கிடைக்கவில்லை என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்புவோர் இல்லாமலும் இல்லை.

இவ்வாறு நாடு ஒரு பாரிய சவால்கள் நிறைந்த சூழலுக்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில், குறிப்பாக மக்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பல இன்னல்களுக்கு மத்தியில் வீடுகளினுள் முடக்கப்பட்ட சூழலில், குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அரச அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 400 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பான தகவல் கசிந்திருந்தது.

இதற்கான மொத்த செலவு 3.7 பில்லியன் ரூபாய்களாகும். இந்த விடயம் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்ததுடன், அரசின் முன்னுரிமைகள் தொடர்பான அதிருப்தியையும் தோற்றுவித்திருந்தது. குறிப்பாக பெரும்பாண்மை பலத்தை வழங்க வாக்களித்தவர்கள் கூட ஒன்றரை வருட காலத்துக்கு முன்னதாக தாம் மேற்கொண்ட தீர்மானம் தவறானதாக குறிப்பிடும் வகையில் இந்த கசிவு அரசாங்கத்துக்கு பாரிய அபகீர்த்தியை தோற்றுவித்திருந்தது. குறிப்பாக நாட்டினுள் வாகனமொன்றை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற கனவுடன், கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாக வாழ்ந்து வரும் சாதாரண குடிமகனுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டு, அரசாங்கத்துக்கும், அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இந்த வாகனக் கொள்வனவு என்பது ஒரு விதமான நியாயமற்ற விடயமாக அமைந்திருப்பதாக அவர்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.

இவ்வாறான பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த விடயம் கசிவடைந்த தினமே மாலையில் பிரதமரின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், வாகனங்கள் இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானம் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையையும், பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு, தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

ஒரு வார காலத்துக்கு முன்னரே, நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சுதாஷினி பெர்னான்டோபுள்ளே, நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாகவும், செல்வந்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் முன்வந்து, இலங்கையின் சுகாதாரத் துறைக்கு அவசியமான சாதனங்களை கொள்வனவு செய்ய உதவ வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகங்களில் முன்வைத்திருந்தார்.

குறிப்பாக ஒட்சிசன் கையிருப்பு அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. போதியளவு வக்சீன்கள் பெறப்பட வேண்டியுள்ளது. மே மாதத்தில் நாட்டில் பதிவாகிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை, மற்றும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இதற்கு சிறந்த ஆதாரமாகும்.

அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் இலங்கை சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்தும் கடப்பாடு காணப்படுகின்றது. நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தம் நிறைவடையும் தறுவாயில் காணப்பட்ட அந்நியச் செலாவணி கையிருப்பை விட குறைந்தளவான தொகை தற்போது திறைசேரியில் காணப்படுவதாக சம்பந்தப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த கையிருப்பு தீர்ந்துவிட்டால், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் சர்வதேச நிதி இருப்பு காணப்படாது. இதனால் சர்வதேச மட்டத்தில் திவாலாகும் நிலைக்கு அரசாங்கம் முகங்கொடுத்து, பாரிய நிதி, சமூக சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும்.

ஒரு பக்கத்தில் நாட்டை 14 நாட்களுக்கு முடக்குமாறு சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் மாறி, மாறி ஊடகங்களுக்கு அறிக்கைவிடுத்திருந்தனர். தொற்றுப் பரவலிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் ஒரே வழி இதுவென அவர்கள் கூறியிருந்தனர். முடக்கநிலை என்பது உலக நாடுகளில் அமல்ப்படுத்தாமலில்லை. உதாரணமாக, இந்தியாவில் தற்போது சில பிராந்தியங்களில் முடக்க நிலை அமலாக்கப்பட்டள்ளது. ஆனாலும், இந்த அமலாக்கத்தின் போது, அந்த அரசுகள் முறையான அறிவிப்புகளை முன்கூட்டியே மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பொது மக்களுக்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஒரு அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டால், அது முறையாக பின்பற்றப்பட்டது. அடிக்கடி தீர்மானங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்வோரும், அந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவோருக்கும் மாத இறுதியில் வருமானம் கிடைக்கும் ஒரு தொழில் காணப்படுகின்றது. ஆனாலும், தினசரி வருமானத்தை பெற்றுக் கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் வறுமையில் வாழ்வோருக்கு இந்த முடக்க நிலை என்பது மேலும் அவர்களின் வறுமை நிலையை மோசமாக்குவதாக அமைந்துள்ளது. பொருட்களின் விலைகளும் சந்தையில் பெருமளவில் அதிகரித்துள்ளன. அரிசி, மரக்கறி, எண்ணெய், தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு அதிகரித்துள்ளன.

இவ்வாறு பாரிய சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் மக்கள் முகங்கொடுத்துள்ள நிலையில், மக்களை மீண்டும் தமது ஜீவனோபாயத்தை நோக்கி நகர்த்துவதற்கான நீண்ட காலத்திட்டமொன்றை இந்த அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும். குறுங்காலத் திட்டங்கள் எந்நாளும் அனைவருக்கும் அனுகூலமளிப்பதாக அமைந்திராது.

சொகுசு வாகன இறக்குமதிக்காக ஒதுக்கீடு செய்த இந்த 3.7 பில்லியன் ரூபாயை, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், சாதனங்கள், வக்சீன்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் பயன்படுத்தியிருக்கலாம். மாறாக தொற்றுப் பரவல் வேகமாக காணப்படும் நிலையில், நாளாந்தம் பல உயிர்கள் காவு கொள்ளப்படும் ஒரு சூழலில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல, இந்த வாகன இறக்குமதி பற்றிய தீர்மானம் அமைந்திருந்தது.

சில வாரங்களில் இந்த மூன்றாம் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினாலும், வெளியகக் கடன்களை மீளச் செலுத்தும் கடப்பாடு, அந்நியச் செலாவணி இருப்பு சவால் போன்ற பல பாரிய பிரச்சனைகளுக்கு அரசாங்கம் முகங்கொடுத்துள்ளது. சாதாரண குடிமகனினால் கூட 3.7 பில்லியன் ரூபாய் எனும் தொகையை, நாட்டுக்கு அத்தியாவசியமான தேவைகளுக்கு இந்தச் சூழலில் பயன்படுத்த முடியும் என்பதை அனுமானிக்கக்கூடியதாக இருக்கும். இந்த அடிப்படை அம்சக் கொள்கையை ஏன் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் கணக்கீட்டு அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை என்பது புதிராகவே அமைந்துள்ளது.

பயணத் தடை தளர்வுக் கட்டுப்பாடுகள் தொடர்பில் மே மாதம் 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அருகாமையிலுள்ள கடைக்கு நடந்து சென்று அவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற ஆணைக்கு, மக்கள் தக்க பதிலடி வழங்கியிருந்தனர். சுகாதாரம் சார்ந்த பிரச்சனை என்பதாலும், இந்த வைரஸ் வெற்றுக் கண்களுக்கு புலப்படாமை, தமக்கு நெருக்கமானவர்களும் பாதிப்படைகின்றமையை உணர்ந்து பெரும்பாலான மக்கள் அமைதி காக்கின்றனர். தள்ளு வண்டிகளைக் கொண்டு சென்று, சிலர் தமது அதிருப்தியை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தியுமிருந்தனர். மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமான அறிவுறுத்தல்களை பொறுப்பதிகாரிகள் தீர்மானித்து வழங்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு, சொகுசு வாகனங்களில் கொழும்பின் பிரதான வீதிகளில் பயணித்த வண்ணம் காணும் விடயங்களைக் கொண்டு முடிவுக்கு வருவது என்பது கேலியான விடயமாகும்.

தற்போதைய பொருளாதார போக்குகளின் பிரகாரம், அரசாங்கத்தின் பிரபல்யத்தன்மை அதளபாதாளத்தினுள் சென்று கொண்டிருக்கும் நிலையில், விரைவில் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக சில தீர்மானங்களை திணிக்கும் நிலை வரும். இலங்கையர்களுக்கு இது கசப்பான அனுபவமாக அமைந்திருக்கும். குறிப்பாக, தாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு வாங்கிய சொகுசு வாகனங்களில் பயணித்த வண்ணம், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அபிலாஷைகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிப்பதற்கும் இலங்கையர்கள் செவிமடுத்து, செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல செயலாற்றுவார்களா?

மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பிலுள்ளது, உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாத, முன்னுரிமை வழங்கத் தெரியாத அரசாங்கத்தினால் அதற்கு உயிரூட்டப்படும் சாத்தியக்கூறுகள் அரிதாகவே தென்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .