2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்

S.Sekar   / 2021 ஜூன் 14 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொதிகளைப் பகிர்ந்தளிப்பதற்காக சினமன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்திருந்தது. சினமனின்  “Meals that Heal”சமூகத் திட்டத்தின் பிரகாரம் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தொற்றுப் பரவலுக்கு எதிராக போராடி வரும் நிலையில், மோசமான வானிலையினால் நாட்டின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 200,000க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் இடர் முகாமைத்துவத்துக்கான ஆசிய பசுபிக் ஒன்றிணைவுடன் (A-PAD) இணைந்து உணவுப் பொதிகளை விநியோகிக்கும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு 3000 உணவுப் பொதிகளை வழங்க நாம் முன்வந்திருந்தோம். கஷ்டமான சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு இது ஓரளவு நிவாரணமளிப்பதாக அமைந்திருக்கும் எனக் கருதுகின்றோம். இந்தத் திட்டத்துக்காக சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், தேவைகளைக் கொண்ட சமூகத்தாருக்கு அவசியமான உதவிகளை வழங்க முடிந்துள்ளது.” என்றார்.

ஜுன் மாதம் 9 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களாக உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. கடுவளை நகரசபைக்குட்பட்ட துனதாஹேன, பஹல போமிரிய, கொதலாவல, வெலிவிட மற்றும் விலிஹிந்த ஆகிய பகுதிகளிலும், ஹோமகம பிரதேச செயலகத்துக்குட்பட்ட பனலுவ, வட்டரக மற்றும் ஆடிகல கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

சினமன் கிரான்ட் கொழும்பு மற்றும் சினமன் லேக்சைட் கொழும்பு ஆகியவற்றின் பொது முகாமையாளர் கமல் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது மக்களுக்காகவும், சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக கவனம் செலுத்துவது எனும் எமது பிரதான பெறுமதிகளுக்கமைய வழிநடத்தப்படும் ‘Meals that Heal’என்பது நாம் பெருமையுடன் முன்னெடுக்கும் நிகழ்ச்சித் திட்டமாக அமைந்துள்ளது. இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் எமது சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு மீட்சியடைந்து தம்மை மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு உதவிகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் கைகோர்த்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .