2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

நிதி அமைச்சருடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கடேல், இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையில் நோர்வேயின் முதலீடுகளை அதிகரிக்கும் வழிமுறைகள், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பொருளாதாரச் சவால்கள் மற்றும் அடுத்து வரும் ஆண்டுகளில் பொருளாதார மீட்சிக்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்காக அமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கொவிட் நிலைமை சீராகும் சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறையை முழு அளவில் மீள ஆரம்பிக்கக்கூடியதாக இருக்குமென தூதுவர் குறிப்பிட்டார். கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பல நாடுகளில் காணப்படும் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகளவு தொழில்வாய்ப்புகள் இல்லாமல் போயிருத்தல் போன்றன தொடர்பான சவால்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்ததுடன், இந்தச் சவால்களை நோர்வே எவ்வாறு கையாண்டிருந்தது என்பது பற்றியும் குறிப்பிட்டார். இலங்கையின் ஜனாதிபதியின், நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுவை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் அவற்றை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் இந்தக் கலந்துரையாடலின் போது பேசப்பட்டிருந்தன.

நோர்வே தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹில்டே பேர்க்-ஹன்சன் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் இடைக்கால மேலதிக செயலாளர் பி.எம்.அம்ஸா, பொருளாதார மீட்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் இணை செயலாளர் அன்டன் பெரேரா மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ச ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .