2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

றைனோ குழுமம் 8 தீவிர சிகிச்சை வென்டிலேற்றர்களை அன்பளிப்பு

S.Sekar   / 2021 ஜூன் 10 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

றைனோ குழுமம், 10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 8 தீவிர சிகிச்சை வென்டிலேற்றர்களை சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பு செய்ய முன்வந்துள்ளது. இதனூடாக கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி இயங்கும் கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடியான காலப்பகுதிகளின் போதிலும் றைனோ குழுமம் தன்னாலான பங்களிப்புகளை சமூகத்துக்கு வழங்கியிருந்தது. குறிப்பாக சுனாமி அனர்த்தம், அரநாயக்க மண்சரிவு அனர்த்தம் போன்றவற்றின் போது, இந்த சமூகங்களுக்கு தமது வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு பங்களிப்புகளை வழங்கியிருந்தது.

றைனோ குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இ.ஜே.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த அறுபது வருட காலமாக பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமாக இயங்கும் றைனோ மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நம் மக்களுக்கு உதவிகளை வழங்க இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் முன்வந்துள்ளன. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இலங்கை மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. நம் நாட்டு மக்கள் சிலர் இந்த தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குணமடைவதற்கு ஒட்சிசன் வென்டிலேற்றர்கள் அவசரத் தேவையாக அமைந்திருக்கும் காலப்பகுதியில், தேசிய சுகாதார கட்டமைப்புக்கு எட்டு வென்டிலேற்றர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதையிட்டு பெருமை கொள்கின்றது. இதனூடாக, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு எமது முன்கள சுகாதார ஊழியர்களால் சிகிச்சைகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை றைனோ பின்பற்றுகின்றது. கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நிறுவனம் தனது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி பொது மக்கள் மத்தியில் தவிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுப் பரவலின் முதல் அலை காலப்பகுதியில், தமது ஏக்கல தொழிற்சாலை ஊழியர்களின் உதவியுடன், சுதுவெல்ல, ஜா-எல பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி றைனோ உதவியிருந்தது.

ஞானம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “தமது சமூகத்தினருக்கும், சூழலுக்கும், துறையின் முன்னோடிகளாக முன்னுதாரணமாகத் திகழும் உள்நாட்டு வர்த்தக நாமங்களுக்கு ஆதரவளிக்குமாறு நாம் அனைத்து இலங்கையர்களிடமும் கோருகின்றோம். தேசம் விரைவில் வழமைக்கு மீளத் திரும்ப வேண்டும் மேலும் எந்தவொரு இலங்கையரும் எதிர்காலத்தில் இது போன்றதொரு நிலைமைக்கு முகங் கொடுக்கக்கூடாது என்பது எமது எதிர்பார்ப்பும் வேண்டுதலுமாகும்.” என்றார்.

1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், றைனோ ரூஃபிங் தயாரிப்புகள், தேசத்தின் முன்னோடியான கூரைத் தீர்வுகள் வழங்குநராக வளர்ச்சியடைந்துள்ளது. பல தசாப்த காலமாக, உயர் தரம் வாய்ந்த கூரைத் தகடுகள் மற்றும் அதனைச் சார்ந்த உற்பத்தியாளராக றைனோ கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் பெறுமதி வாய்ந்த உட்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கிய வண்ணமுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .