2022 ஜூலை 07, வியாழக்கிழமை

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு DFCC வங்கி மற்றும் USAID ஆதரவு

S.Sekar   / 2022 மே 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எமது தேசத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். அவை 45% வரையான தொழில் வாய்ப்புக்களை தோற்றுவிப்பதுடன், இலங்கையில் கிட்டத்தட்ட 75% வணிகங்களாக அவை காணப்படுகின்றன. அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% வரையான பங்களிப்பையும் ஆற்றி வருகின்றன. எனினும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையானது வங்கிகளிடம் இருந்து கடன் வசதிகளைப் பெறும்போது அடிக்கடி சவால்களுக்கு முகங்கொடுக்கின்றன. இது பொதுவாக இந்த வணிகங்களுக்கு போதுமான நீண்ட கால மற்றும் நம்பகமான செயல்பாட்டு சாதனைப் பதிவுகளை கட்டியெழுப்ப போதுமான நேரம் இல்லாததால், இத்துறையில், குறிப்பாக பெண்களுக்கு சொந்தமான மற்றும் அவர்களால் நிர்வகிக்கப்படுகின்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மத்தியில் அவர்களின் செயல்பாடுகளில் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

இந்த சவால்களைப் புரிந்துகொண்டு, இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைக்கு உதவ முயல்வதன் மூலம், அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, பெண்களின் தலைமைத்துவத்துடனான நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக The Palladium Group ஆல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் USAID CATALYZE தனியார் துறை அபிவிருத்திச் செயற்பாட்டுடன் ஒரு முக்கிய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், இரு நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலமாக இந்த கூட்டாண்மை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வணிக பராமரிப்பு, ஆடையணி, உணவு பதப்படுத்துதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சில உயர்-வளர்ச்சி வாய்ப்புக்கள் கொண்ட துறைகளை இக்கூட்டாண்மை இலக்காகக் கொண்டிருக்கும்.

இந்த கூட்டாண்மையின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளித்த DFCC வங்கியின் பணிப்பாளரும் / தலைமை நிர்வாக அதிகாரியுமான திமால் பெரேரா, ”அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், இந்த கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது அனைத்து மட்டங்களிலுமான இலங்கையின் வணிக முயற்சிகளின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை நாம் தோற்றுவிப்பதற்கு இது உண்மையாக இடமளிக்கும். நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். இந்த விசேட கூட்டாண்மையானது எங்களின் உயர் திறன் வாய்ந்த தொழில் துறைகளின் போட்டித்தன்மையை வலுப்படுத்த உதவுகின்ற அதே நேரத்தில் பெண்களை வணிக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களாக திறம்பட இத்துறைகளில் ஈடுபடுத்த உதவுகிறது.

DFCC வங்கி நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வெற்றிக்கான பாதையை நோக்கி வழிநடத்திச் செல்ல ஆலோசனை சேவைகள் மற்றும் பிற நிதி சாராத உதவிகளையும் வழங்கும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கிக்கும் USAID ஸ்ரீ லங்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையானது, பெண்களை உள்ளடக்குதல் மற்றும் ஊக்குவித்தல் என்ற முக்கிய கருப்பொருளால் ஒன்றிணைக்கப்பட்ட மூன்று முதன்மையான நோக்கங்களை மையமாகக் கொண்டது. இந்த கூட்டாண்மையின் மூன்று முதன்மை நோக்கங்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மத்தியில் மேம்பட்ட திறன் மற்றும் போட்டித்தன்மையை உருவாக்குதல், இந்த வணிகங்களுக்கான கடன் வசதி அணுகல் மற்றும் கிடைக்கும் வழிமுறைகளை அதிகரிப்பது மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தில் கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கங்களிலிருந்து வெளிவர உதவும் பொருளாதார மீள்எழுச்சியை அதிகரிப்பது ஆகியனவாகும்.

மேலும், கூட்டாண்மை-தலைமையிலான அணுகுமுறை மற்றும் புதிய சந்தைகளை ஊக்குவிப்பதற்காக பெறுபேறுகளின் அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதிக சாத்தியமுள்ள துறைகளில் இந்த செயல்திட்டம் கவனம் செலுத்தும். இந்த செயல்திட்டம் அனைத்து துறைகளிலும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்து, பெண் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உருவாக்க மற்றும் அவர்களை இலக்கு வைக்க உதவும். DFCC வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் இணைந்து, அவர்களின் வங்கிக் கூட்டாளராக, இந்த செயல்திட்டத்தின் மூலம், இந்த கூட்டாண்மையின் கீழ் சேவைகளைப் பெற்றுக்கொள்கின்ற வாடிக்கையாளர்களுக்கு உயர்மட்ட தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் அதே வேளையில், இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு புதிய வணிக வாய்ப்புகளை வழங்க உதவுகிறது. அத்துடன், DFCC வங்கியின் விசுவாசமான வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் பிற சேவைகள், நன்மைகள் மற்றும் சலுகைகள் அனைத்தையும் அவை பெற்றுக்கொள்ளவும் முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .