2022 ஜனவரி 22, சனிக்கிழமை

மாத்தறையில் உள்ள கைதியை கொழும்புக்கு மாற்றுமாறு கோரிக்கை

Niroshini   / 2021 நவம்பர் 22 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே ஒரு கைதி மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவரை கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மாத்தறை சிறைச்சாலைக்கு சென்று, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள த.நிமலன் என்ற கைதியை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இன்று (22) பார்வையிட்டனர். 

இதன் பின்னர், இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் என்பவரை மாத்தறை சிறைச்சாலையில் பார்வையிட்டு பேசியிருந்தோம் என்றார்.

 அவர் சார்ந்த வழக்கில் 3 சந்தேக நபர்கள் இருக்கும் நிலையில் அவரை மட்டும் தனிமைப்படுத்தி மாத்தறை சிறைச்சாலையில் தடுப்பில் வைத்துள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், ஏனைய இருவரும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள் எனவும் கூறினார்.
 
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், அவர் மட்டுமே மாத்தறை சிறைச்சாலையில் உள்ளார் எனத் தெரிவித்த அவர், "ஒரே ஒரு தமிழ் கைதியாகவும் இச்சிறைச்சாலையில் அவரே உள்ளார். அவருக்கு மொழி சார்ந்த வசதிகளும் குறைவாக உள்ள நிலையில் அவர் எம்மிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்" என்றார்.

"அதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏனையவர்களை தடுத்து வைத்துள்ள சிறைச்சாலைகளில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். அது சம்மந்தமாக நாங்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் பேசுவோம்.

"அத்துடன், கைதிகளை விடுவிப்பதற்குரிய அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் கொடுப்போம். அதேசமயம் அது நிறைவேறும் வரை இந்த கைதிகளை அவர்களது சொந்த மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு கோரிக்கையையும்  முன்வைத்துள்ளோம்" எனவும், அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X